அங்குசம் பார்வையில் ’ஸ்வீட் ஹார்ட்’
தயாரிப்பு : ‘ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ்’ யுவன் ஷங்கர் ராஜா. டைரக்ஷன் : ஸ்வினீத் எஸ்.சுகுமார். நடிகர்-நடிகைகள் : ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, பெளசி. ஒளிப்பதிவு : பாலாஜி சுப்பிரமணியம், இசை : ‘மார்டன் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டிங் : தமிழரசன், ஆர்ட் டைரக்டர் : சிவசங்கர், தமிழ்நாடு ரிலீஸ் : ’ஃபைவ் ஸ்டார்’ செந்தில், பி.ஆர்.ஓ.யுவராஜ்.
பள்ளிப்பருவத்தில் தன் மீது மிகவும் பாசமாக இருக்கும் அம்மா, குடிகார அப்பாவின் டார்ச்சர் தாங்காமல், தனது கண் எதிரேயே வேறொருவனுடன் கிளம்புவதைப் பார்க்கும் வாசுவுக்கு [ ரியோ ராஜ் ] கல்யாணம் என்றாலே வெறுப்பு. ஆனால் காதல் என்றால் விருப்பு. அப்படி இவர் காதலிக்கும் மனு [ கோபிகா ரமேஷ் ] கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறார். இதை வெறுக்கும் வாசுவுக்கு கட்டிலில் இடம் கொடுத்து கர்ப்பமாகிறார் மனு.
ஒருத்தியைக் காதலிக்கலாம், கல்யாணத்திற்கு முன்பே கட்டிலில் விளையாடலாம், கர்ப்பமாக்கலாம், அதன் பின் கல்யாணம் செய்து கொள்ளலாம். இப்படியெல்லாம் செய்யலாம், தப்பேயில்லை எனச் சொல்வது தான் இந்த ‘ஸ்வீட் ஹார்ட்’ சொல்லும் மனுநீதி.
இன்று காலை 10 மணிக்கு, இரண்டாண்டுகளுக்கு முன்பு, இன்று காலை 10.45 மணிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பு, இன்று மாலை 4.45 மணிக்கு, இதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு. அப்படி இப்படின்னு ஃப்ளாஷ்பேக்கையும் கரண்ட் சீன்களையும் குழப்பியடித்து இடைவேளை வரை நம்மை கும்மியடித்துவிட்டார் அறிமுக இயக்குனர் ஸ்வினீத். அதிலும் மனு கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை கன்ஃபார்ம் பண்ணுவதற்கு, அவரின் யூரினை டெஸ்ட் எடுக்க ரியோ ராஜ் படும்பாடு நமது பொறுமைய ரொம்பவே ’டெஸ்ட்’ பண்ணிவிட்டது.
செம ஹிட் கொடுத்த ‘ஜோ’வின் பெர்ஃபாமென்ஸை அப்படியே இதிலும் ரிப்பீட் பண்ணியிருக்கிறார் ரியோ ராஜ். இன்னும் நிறைய கத்துக்கிட்டு, வெரைட்டியான பெர்ஃபாமென்ஸ்களைக் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு போங்க ரியோ ப்ரோ. இல்லேன்னா இதே இடத்துல தான் நிப்பீக.
ஆனால் ஹீரோயின் கோபிகா ரமேஷ் சூப்பர் பெர்ஃபாமராக ஸ்கோர் பண்ணிவிட்டார். ரியோவின் நண்பனாக வரும் அருணாச்சலேஸ்வரனும் டைமிங் காமெடியில் கலக்கியிருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அடுத்தவர்களின் படங்களில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் பின்னியெடுக்கும் ‘மார்டன் மாஸ்ட்ரோ’ தனது சொந்தப் படத்தில் கொஞ்சம் சுணங்கிவிட்டார் போல.
க்ளைமாக்ஸ் லீட் எடுக்க கொண்டு வரப்பட்ட கர்ப்பிணி கேரக்டர் படுஅபத்தம். அதே போல் “கல்யாணத்திற்கு முன்னால தனது மகள் [மனு]கர்ப்பமா இருந்தாலும் ஹேப்பி தான்” என்பதற்கு ஹீரோயினின் அக்காவைக் காட்டி அம்மா கேரக்டர் சொல்லும் காரணத்தைக் கேட்டதும் டோட்டலாக நாம் டேமேஜாகிட்டோம்.
‘ஸ்வீட் ஹார்ட்’ இனிப்பாகவும் இல்லை, இதயத்திற்கு இதமாகவும் இல்லை.
— மதுரை மாறன்.