கோலிவுட்டை கதிகலங்க வைத்த ‘அமெரிக்க ஆவி’
ஹீரோ, வில்லன், குணச்சித்ர நடிகர் என கோலிவுட்டில் கோலோச்சியவர் நெப்போலியன். திமுகவின் எம்.எல்.ஏ., எம்.பி., ஒன்றிய இணை அமைச்சர் என அரசியலிலும் கோலோச்சிய நெப்போலியன், ஜீவன் என்ற சாஃப்ட்வேர் கம்பெனியின் அதிபர். இப்படி பல திசைகளிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நெப்போலியன், இருபது ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செட்டிலாகி, அங்கேயும் பெரும் தொழிலதிபராக வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். தனக்கு தோதான கதை அமைந்தால், அவ்வப்போது அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்து தமிழ் சினிமாவில் நடிப்பார். அமெரிக்காவிலேயே தயாரான ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கும் நெப்போலியன், இப்போது ‘ஜீவன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தனது மகன்கள் தனுஷ், குணால் ஆகியோரை தயாரிப்பாளராக்கியுள்ளார்.

ஜீவன் பிலிம்ஸின் முதல் தமிழ் சினிமாவான ‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவை சென்னை கமலா தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்தி கோலிவுட்டையே கதிகலங்க வைத்துவிட்டார் நெப்போலியன். படத்தில் நடித்த 100-க்கும் மேற்பட்ட நடிகர்கள், படத்தை இயக்கியுள்ள தஞ்சை ஜே.பி.ஆர்., மற்றும் கேமராமேன், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என எல்லாருமே அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள். ஸ்டண்ட் மாஸ்டர் பி.சி.யும் டான்ஸ் மாஸ்டர் கலா ஆகிய இருவர் மட்டும் தான் கோலிவுட்டைச் சேர்ந்தவர்கள்.
டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், ஆர். பாண்டியராஜன், தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ரியல் எஸ்டேட் அதிபர் ஆதித்யா ராம் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்களை மேடையேற்றி, ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்தினார் நெப்போலியன்.
டிரெய்லர் & பாடல்களை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசியும் ஆதித்யா ராமும் வெளியிட கண்ணன் ரவி பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
குணால் நெப்போலியன், “முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாரான முதல் தமிழ்ப்படம் இது. இதில் பேயும் இருக்கு, ஆவியும் இருக்கு, பிசாசும் இருக்கு, அதுடன் ஏகப்பட்ட சுவாரசியமான சம்பவங்களும் இருக்கு” என்றார்.
நெப்போலியன், “இதில் நடித்திருக்கும் எல்லோருமே டாக்டர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள், சயிண்டிஸ்ட்டுகள். அவர்களின் வேலை நேரம் முடிந்ததும், அவர்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் தான் ஷூட்டிங் நடந்தது. படத்தின் ஹீரோயின் அமெரிக்காவில் செம பிஸியான டாக்டர். அவரின் மருத்துவ சேவைக்கு இடைஞ்சல் இல்லாமல் ஷூட்டிங் நடத்தினோம். மொத்தம் 75 நாட்களில் ஷூட்டிங்கை முடித்து இப்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துள்ளோம். இங்கே இருக்கும் நம்ம தமிழ் சொந்தங்கள் இப்படத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளேன். வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி”.
டைரக்டர் ஜேபிஆர், “அமெரிக்காவில் சமீபத்தில் மூன்றரை ஏக்கரில் நெப்போலியன் சார் வாங்கியுள்ள வீட்டில் தான் முக்கால்வாசி ஷூட்டிங் நடந்தது. டைரக்ஷனில் எனக்கு பேருதவியாக இருந்தவர் நெப்போலியன் தான்”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.