சேலம் – ஜாகிரெட்டிப்பட்டியில் கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி !
சேலம் – ஜாகிரெட்டிப்பட்டியில் கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி !
சேலம் ஜாகிரெட்டிப்பட்டி ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, தினந்தோறும் இரவில் மணிமேகலையை அடித்து உதைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (15.05.23) இரவு வழக்கம் போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட ரமேஷ் மணிமேகலையை சராமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை வீட்டிலிருந்து குளவி கல்லை எடுத்து ரமேஷின் தலையில் போட்டுள்ளார். இதில் கை தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து, ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிலிருந்த மணிமேகலையை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– சோழன் தேவ்.