வீடியோ எடுத்து கலெக்டர் ஆபீஸ்ல கொடு போ … எத்தனையோ பேர பார்த்துட்டேன் போ … !
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றது. விஷேச நாட்களில் மட்டுமின்றி, எப்போதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த கோவிலில் அதிகபட்சம் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் விலை என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாதம்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
இக்கோவிலில் வடக்கு வாசலில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி அவ்வழியாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கைக் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த சிறப்பு சட்டத்தின் நோக்கம்.
ஆனால், அந்த விதியை மீறும் வகையில் பல வருடங்களாக அந்த வீதியில் டிக்கெட் பெற்றுக் கொண்டும், சூப்பிரண்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று இலவசமாக பக்தர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் வடக்கு வாசல் வழியாக டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு பெண் ஊழியர் ஒருவர் நானூறு ரூபாய் கொடுத்தால் தான் அனுப்ப முடியும் என கறாராக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பக்தர்கள் கேள்வி எழுப்பிய போது ”கலெக்டர் அலுவலகத்திற்கு வேண்டுமென்றாலும் வீடியோ அனுப்பு. நான் 20 வருடமாக பல பேரை பார்த்தவர். சூப்பிரண்டு சொல்வதை தான் நான் செய்கிறேன்” என அதிகார தோணியில் பேசுகிறார்.
சமயபுரம் கோவில் வடக்கு வாசல் பகுதி என்பது தமிழக அரசால் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் உள்ளே செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழியாகும். தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகள் செயல்படுவது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பொருட்களுக்கு போலியாக ரசீது அச்சடித்து கொடுத்த விவகாரம் பூதாகரமாகியிருந்தது. முடி காணிக்கை செலுத்துவதற்கான ரசீதுகள் வழங்குவது தொடங்கி திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள அனைத்துவிதமான காண்ட்ராக்ட்களிலும் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு பொதுவில் நிலவிவருகிறது. அதிகாரிகளின் முறைகேட்டுக்கு துணைபோக தற்காலிக ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் ; இதுபோன்ற முறைகேடுகள் அக்கோயிலுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு தெரியாமல் நிகழ வாய்ப்பில்லை என்பதற்கு ஆதாரமாகத்தான் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது என்பதாக பக்தர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
இதுபோன்ற முறைகேடுகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
— ஜோஷ்
Comments are closed, but trackbacks and pingbacks are open.