அங்குசம் பார்வையில் ‘சண்டக்காரி’
தயாரிப்பு: ‘ பாஸ் புரொடக்சன்ஸ்’ புன்னகைப் பூ கீதா, டைரக்டர்: ஆர்.மாதேஷ், ஆர்டிஸ்ட்: விமல், ஸ்ரேயா சரண், சத்யன், புன்னகைப் பூ கீதா, பிரபு, உமா பத்மநாபன், கே.ஆர்.விஜயா, தேவ் கில், கிரேன் மனோகர், ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ், இசை: அம்ரிஷ், எடிட்டிங்: தினேஷ் பொன்ராஜ், ஆர்ட் டைரக்டர்: அய்யப்பன், ஸ்டண்ட்: கனல் கண்ணன், பிஆர்ஓ: சதீஷ் ( எய்ம்)
லண்டனில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் சி.இ.ஓ.வாக இருக்கும் மாயா [ ஸ்ரேயா சரண்] ரொம்பவே ரஃப்ஃபான ஆளு. இவரிடம் பேசவே ஊழியர்கள் நடுங்குவார்கள். அப்படிப்பட்ட மாயாவின் பி.ஏ.வாக அந்த சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் வெற்றி[விமல்]. மாயாவின் இம்சைகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு வேலை பார்க்கிறார் வெற்றி. எப்பப்பார்த்தாலும் இருவருக்குமிடையே ஓயாத சண்டை தான். இந்த நேரத்தில் தான் இந்தியாவைச் சேர்ந்த மாயா, தொடர்ந்து லண்டனிலேயே இருப்பதற்கு விசா பிரச்சனை வருகிறது. ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டால், தொடர்ந்து லண்டனில் இருக்கலாம் என இமிகிரேஷனில் சொல்கிறார்கள். இதனால் விமலை ஹஸ்பெண்டாக நடிக்கச் சொல்கிறார் ஸ்ரேயா. இதற்கு விமல் சம்மதித்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து அப்பா-அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் தனது கிராமத்திற்கு அழைத்து வருகிறார்.லண்டனில் ‘சண்டக்காரி’யாக இருந்த ஸ்ரேயா, இங்கே சமாதானக்காரியானாரா? இதான் இந்தப் படத்தின் கதை.
பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கரிடம் அசோசியேட் டைரக்டராகவும் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான ‘எஸ் பிக்சர்ஸ்’-ன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.மாதேஷ், ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் இது. அதாவது தமிழ் சினிமாவில் ஸ்ரேயாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்தப்ப, அவரை கமிட் பண்ணி இந்தப் படத்தில் நடிக்க வச்சு, பல நொம்பலங்களுக்குப் பிறகு, ‘புன்னகைப் பூ’ கீதா உதவியால, ஒருவழியா இப்ப ரிலீஸ் பண்ணிருக்காரு மாதேஷ்.
விசா பிரச்சனை, இமிக்கிரேஷன் பிரச்சனையால் ஒருவனை கல்யாணம் பண்ணுவது போல் நடிப்பது, அதன் பின் விலகுவது மாதிரியான கதைகள் சில இதற்கு முன் வந்து போயுள்ளன. இதிலும் அதே கதை தான், ஆனால் காமெடியை மிக்ஸ் பண்ணிச் சொன்னா தப்பிச்சிரலாம்னு கணக்குப் போட்டு படத்தினை எடுத்திருக்கிறார் ஆர்.மாதேஷ். ஆனால் விமல் மட்டும் ஒன்றிரண்டு சீன்களில் காமெடி பண்ண ட்ரை பண்ணியிருக்கிறார். கூடவே சத்யனும் சேர்ந்து கூத்தடிக்கிறார். ஆனால் எதுவுமே எடுபடாமல் போனது தான் பரிதாபம். தான் கண்டுபிடித்த ஒரு ‘ஆப்’-ஐ அறிமுகப்படுத்துவதற்காகத் தான் ஸ்ரேயாவின் சேட்டைகளை பொறுத்துக் கொள்வதாக ஒரு சீனில் சத்யனிடம் சொல்கிறார் விமல். ஆனால் படம் முடியும் வரைக்கும் அந்த ‘ஆப்’ என்னன்னு சொல்லாமல் நமக்கு ஆப்பு அடித்திருக்கிறார் டைரக்டர்.
லண்டனில் இருக்கும் சாஃப்ட்வேர் ஆபீசும் இமிகிரேஷன் ஆபீசும் நம்ம ஊரு பஞ்சாயத்து போர்டு ஆபீசே தேவலை போலங்கிற ரேஞ்சுக்கு இருக்கு. நாலு டேபிள், நாலு சேர், ரெண்டு ஃபேன் போட்டு ஆர்ட் டைரக்டர் ஒப்பேத்தியிருக்காரு. அவரு என்ன செய்வார் பாவம்…? கொடுத்த காசுக்குத் தானே வேலை பார்க்க முடியும்.
லண்டனில் செம ரிச்சாக, சூப்பர் கிளாமராக கலக்கியிருக்கார் ஸ்ரேயா. இவருக்கு டஃப் கொடுத்திருக்கார் தயாரிப்பாளர் புன்னகைப் பூ கீதா. எப்படியும் இவருக்கு 50-55 வயசு இருக்கும். இந்த வயசிலும் ஸ்விம் ஷூட், டைட் பனியன்னு திகில் கிளப்புகிறார் கீதா.
ஹீரோ விமல், வழக்கம் போல ஒரே மாடுலேஷனில் வந்து போகிறார். கிராமத்தில் இவரது அப்பாவாக இளையதிலகம் பிரபு, அம்மாவாக உமா பத்மநாபன், அப்பத்தாவாக கே.ஆர்.விஜயா, வேலைக்காரராக கிரேன் மனோகர் ஆகியோர் இருக்கிறார்கள். இசை அம்ரிஷ்னு டைட்டிலில் பார்த்த ஞாபகம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் பார்த்த நாடகம் போல இடைவேளை வரையும், அதன் பின் இப்போதையை டி.வி.சேனல்களில் வந்துக்கிட்டிருக்கும் சீரியல்கள் போல ஓடி படம் சுபத்துடன் முடிகிறது.
அங்குசம் பார்வையில் ‘சண்டக்காரி’ 33/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.