பலரும் அறிந்திராத ரகசியம்…
பலரும் அறிந்திராத ரகசியம்…
கலைஞர் சொன்னது ……
சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர். கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார்.
கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.
இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண்டும். திடீரென அவர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை. அரசியல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள ‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்தது. அது, நீண்ட நாள்களாக யாரும் அடைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது.
அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக்க முடிவு செய்தேன். ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கினேன். தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிகள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பகலாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்னை அதிரவைத்தது… ‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.
என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்…
‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே… உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே. கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்கிறார். சிறையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன்.
அவர் சற்றே நிதானித்துவிட்டுப் பேசினார்…
‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்ய முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’’ என்றேன். ‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கிறேன்’’ என்றேன்.
‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற்று நீர்தான் அருந்துவேன்’’ என்றார். ‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.
தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்… அவருடைய ஒரு நாள் மொத்த உணவும் இவ்வளவுதான்.. இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?
எல்லாவற்றையும்விட அவருடைய பாதுகாப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை. ஆனால், வெளியிலிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக்கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கியக் காரணம்.
ஜெயேந்திரரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி எனக்குத் தொலைபேசியில் அன்புக்கட்டளை போட்டவர் #கலைஞர் .
அவர்தான் என்னிடம் பேசி, “அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள். எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். அதனால் அவரைக் காக்க வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி அவருக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கொள்கைக்கு முரணானவர்கள் செய்த காரியமாகக் கருதப்படவும் வாய்ப்புண்டு. அதில் உன் பெயரும் பழுதாகிவிடும்’’ என்று எச்சரித்தார்.
ஓர் இந்துமதத் துறவியை, ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்து அழகு பாத்த ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர்.
அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகோள்விடுக்கிறார் பகுத்தறிவு பேசும் அரசியல் தலைவர்.
ஆனால், இந்து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்ட ஒருவரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் தேசமோ என்று தோன்றியது எனக்கு. ஒரு உண்மையான மஹானுடன் சிறிது காலம் தனியே இருக்க எனக்களித்த ஒரு வாய்ப்பு. என்னால் முடிந்த அளவு அவருக்கு வசதிகள் செய்து தந்த பெருமை – இது போதும், காவல் துறை அதிகாரியாக என் கடமையை நிறைவேற்றினேன் என்பதை விட , ஒரு மனிதனாக இந்த நாட்டை நல்ல முறையில் நடத்துபவருக்கு என்னால் இயன்றது செய்தது பரம திருப்தி.
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற.டி.ஐ.ஜி.
சிறைத்துறை.








Comments are closed, but trackbacks and pingbacks are open.