அப்பாடா ! தமிழ்நாட்டில் ஒரு கட்சி குறைந்தது !
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியின் எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது என்பதைத் தவிர பாஜகவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியால் எந்த பயனும் கிடைக்காது என்ற வாதம் வலுப்பெறுமா?
அப்பாடா ! தமிழ்நாட்டில் ஒரு கட்சி குறைந்தது !
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் இயங்கி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவோடு கூட்டணி அமைக்க கடந்த வாரத்திலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (12.03.2024) பாஜக கட்சியோடு தன் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.
நடிகர் சரத்குமார் அகில இந்திய வானொலி தில்லியில் செய்தி வாசிப்பாளராக இருந்த எம் இராமநாதன் – புஷ்பலீலா இணையருக்கு மகனாக புதுதில்லியில் 1954 சூலை 14இல் பிறந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து திரைப்படங்களை விநியோகம் செய்யும் பணியைச் செய்துவந்தார். சூரியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து திமுகவில் இணைந்தார். 1996 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞரோடு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் திமுகவிலிருந்து வெளியேறினார்.
பின்னர் தன் மனைவி நடிகை இராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார். ஆனாலும் அதிமுக தோல்வியடைந்தது. அதன் பின்னர் அதிமுகவிலிருந்து சரத்குமார் விலகினார். 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவக் கட்சியைத் தொடங்கினார். 2011இல் அதிமுக கூட்டணியில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் கட்சியின் பொதுச்செயலளராக இருந்து கரு.நாகராசன் ஏற்கனவே பாஜகவில் இணைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி பேசிக் கொண்டிருந்த நிலையில், கட்சியை பாஜகவோடு இணைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசியல் விமர்சகர் தராசு ஷியாம் கருத்து தெரிவிக்கும்போது,“நடிகர் சரத்குமார் அதிமுகவோடு இணைந்து கூட்டணியில் வெற்றிப் பெற்ற கட்சி. இந்தக் கட்சிக்கு என்று வாக்குவங்கி கிடையாது. இதனால் சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைத்ததில் பாஜகவுக்கு எந்த இலாபமும் உடனே கிடைக்காது. நடிகர் சரத்குமார் டில்லியில் பிறந்தவர். இந்தி தெரியும் என்பதால் அவர் பாஜகவின் தேசிய செயலாளர் என்ற பெரிய பதவியைக் கட்சி தரும். அதை வைத்துக்கொண்டு, தேசிய அளவில் தேர்தல் பிரச்சாரம் செய்வார். அவ்வளவுதான்.” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியின் எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது என்பதைத் தவிர பாஜகவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியால் எந்த பயனும் கிடைக்காது என்ற வாதம் வலுப்பெறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– ஆதவன்