அங்குசம் பார்வையில் ‘சட்டமும் நீதியும்’
தயாரிப்பு : ’18 கிரியேட்டர்ஸ்’ சசிகலா பிரபாகரன், ரிலீஸ் : ஜி-5 ஓடிடி. டைரக்ஷன் : பாலாஜி செல்வராஜ், கதை : சூர்ய பிரதாப், ஆர்ட்டிஸ்ட் : ‘பருத்திவீரன்’ சரவணன், நம்ரிதா, அருள் டி.சங்கர், சண்முக, இனியா ராம், திருச்செல்வம். ஒளிப்பதிவு : எஸ்.கோகுல கிருஷ்ணன், இசை : விபின் பாஸ்கர், ஆர்ட் டைரக்டர் : பாவனா கோவர்த்தன், இணை இயக்குனர் : ரமேஷ் பிரபு, பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம் ].
வக்கீல் படிப்பு முடித்த புதிதில் ஒரு இளைஞனின் வழக்கில் தோற்றுவிட்டதால் அப்செட்டாகி, கோர்ட் வாசலிலேயே ரவுண்ட் சாமியானா போட்டு நோட்ரி பப்ளிக்காகி, மனு டைப் அடிப்பது, சீல் அடிச்சுக் கொடுப்பது என இருக்கிறார் வக்கீல் சுந்தரமூர்த்தி [ சரவணன்]. இவரின் வாதத்திறமை மீதும் சட்ட அறிவின் மீது நம்பிக்கை வைத்து இவரிடம் ஜூனியராக சேர்கிறார் நம்ரிதா.
ஆனாலும் இருவருக்கும் கேஸ் எதுவும் கிடைக்கவில்லை. வீட்டிலும் மனைவி, மகன், மகள் ஆகியோரின் ஏளனமும் சுந்தரமூர்த்தியை பாடாய்படுத்தும் நிலையில் தான் கோர்ட் வளாகத்திலேயே நடுத்தர வயதுள்ள ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது சுந்தரமூர்த்திக்கு. அவர் சாவதற்கு முன்பு தன்னிடம் ஒரு மனு டைப் அடிக்க வந்த போது, தனது மகளை சிலர் காரில் கடத்திக் கொண்டு போனதாகவும் அதை போலீசில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தும் ஆக்ஷன் இல்லாததால் தான் கோர்ட்டுக்கு வந்திருப்பதாகவும் கண்ணீருடன் அந்த நபர் சொன்னது மூளைக்குள் பளிச்சிட, உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு போடுகிறார் சுந்தரமூர்த்தி.
இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதால் அரசுத் தரப்பு அதிர்ச்சியாகிறது. அதன் பின் நடக்கும் அடுக்கடுக்கான சம்பவங்களும் சுந்தரமூர்த்தியின் சட்டப் போராட்டங்களும் தான் இந்த ‘சட்டமும் நீதியும்’.
மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி செல்வராஜையும் மனதாரப் பாராட்டலாம்.
வக்கீல் சுந்தர மூர்த்தியாக ’சித்தப்பு’ சரவணன் ஏழு எபிசோடுகளிலும் செம கெத்துப்பு என கைதட்ட வைக்கிறார். தனது ஜூனியர் நம்ரிதாவிடம், “நம்மளோட பதட்டம் தான் போலீசுக்கு சாதகமாப் போயிரும். நாம் தில்லா இருந்தோம்னா தான் போலீஸ் பயப்படும்” என சொல்லும் சீனிலும் அரசு வக்கீல் அருள் டி. சங்கரைப் பார்த்து, “நீதி எல்லோருக்கும் கிடைக்கணும், நான் சொல்றது எல்லோருக்கும்…” என கம்பீரமாக முறைத்தபடி சொல்வது, கோர்ட்டில் வாதாடும் போது நீதிபதிகளிடம், “விளிம்பு நிலை மனிதர்களுக்கும் நீதி கிடைப்பதற்கு சட்டத்தின் பாதையைத் திறந்துவிட வேண்டும்” என அழுத்தந்திருத்தமாக வாதிடுவது… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சித்தப்புவின் கெத்துவை. சரவணனுக்கு ‘பருத்தி வீரன்’ டிரேட் மார்க் என்றால், இந்த ‘சட்டமும் நீதியும் பெஞ்ச் மார்க்.
சரவணனின் ஜூனியராக வரும் நம்ரிதா, நடுத்தர வர்க்கத்தின் கோபம், “ஏழைகள்னா அவ்வளவு எளக்காரமா சார்?” என பரிதாபமாக சரவணனிடம் கேட்கும் போதும், தீக்குளித்து இறந்தவரின் மகள் வெண்ணிலாவைக் கண்டு பிடித்தபின் அவரிடம் பேசும் போதும், பல சீன்களில் ஜொலிக்கிறார் நம்ரிதா.
தீக்குளித்து இறந்த குப்புசாமி கேரக்டரும் ஃப்ளாஷ்பேக்கும் தான் இந்த ‘சட்டமும் நீதியும்’ ஜெயிப்பதற்கான மெயின் பாயிண்ட். அதை மிகச் சரியாக கேட்ச் பண்ணி ஜெயித்திருக்கிறார் டைரக்டர் பாலாஜி செல்வராஜ். இன்னும் சொல்லப் போனால் பொள்ளாச்சி கொடூரம் தான் இந்த வெப் சீரிஸின் ஸ்ட்ராங் பேஸிக்.
க்ளைமாக்ஸ் எபிசோட் பாடலில் கலங்க வைத்துவிட்டார் மியூசிக் டைரக்டர் விபின் பாஸ்கர். ஒரு எபிசோட் 20 நிமிடம் தான் என்பதால், எடிட்டர் ராவணன் ஷார்ப்பாக ஒர்க் பண்ணியுள்ளார்.
‘சட்டமும் நீதியும்’ அனைவரும் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்.
— மதுரை மாறன்