என் நெஞ்சார்ந்த அஞ்சலி மலர்கள் கலைஞனே !

ஏறக்குறைய இருபது
இருபத்தைந்து வருடங்களாக
ஒருவரை ஒருவர் அறிவோம்.

ஆனால் எப்போது சந்தித்தாலும்
உங்க பேர் என்னங்க என்பார்.

தப்பு என்னதுதான்.
எவ்வளவு நெருக்கமாக
நட்பு பாராட்டியிருக்கிறேன்
பாருங்கள்.

நடிகர் சத்யேந்திரா
மரணமடைந்தார் என்கிற செய்தியை
சற்று முன் கண்டதிலிருந்து
ஞாபகங்கள் கிளைக்கினறன.

பன்மொழி வித்தகர்.
பன்னாட்டு சினிமாக் காதலர்.
திரை மொழி பேசுகிறவர்.
திரைத் தொழில்நுட்பம் தெரிந்தவர்.
சினிமா விமரிசகர்.
டைரக்டர்.
அசிஸ்டன்ட் டைரக்டர்.
நடிகர்.

சத்யேந்திராவுக்கு
இப்படிப் பன்முகங்கள்.

சத்யஜித் ரேவுடனெல்லாம்
பணியாற்றியதாகச்
சொல்லக் கேள்வி.

பல மரம் கண்ட தச்சன்.

விக்குறது அல்வா
விக்காடடி அளுவா என்று
மண்வாசனையில் ஆடிப் பாடி –
நாஸரின் கேமராவைத் திருடி
இன்ஸ்பெக்டர் சத்யராஜால்
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டில் வெளுக்கப்பட்டு –
ராஜாதிராஜாவில் ரஜினியுடன்
வந்து போனாலும் –
கிடைக்காத ஒரு திரை அங்கீகாரத்தை எடிட்டர் லெனின் இயக்கிய –
‘நாக் அவுட்’ குறும்படம்
சத்யேந்திராவுக்கு வாங்கித் தந்தது.

தேசிய விருது பெற்ற அந்தப் படம்
இவரை நாடு முழுக்க
அறிமுகப்படுத்தியது.

ஆனாலும் –
முழு நேர சினிமாக் கலைஞனான
இவரை ஏனோ
சினிமா
அள்ளி அணைக்கவில்லை!

மனிதர் ஏராளமான
வாசிப்பறிவைக் கொண்டிருந்ததும் –
மனத்தில் பட்டதைப் போடடுடைத்ததும்-
முகத்துக்கு நேரே விமரிசித்ததும் –
இவரைப் பலர் நிராகரிக்கக்
காரணிகளாக இருந்திருக்கக்கூடும்.

என் கதையைக்
கேளுங்கள்.

நான் திரைப்படம் இயக்குவது
உறுதியானதும் –
ஒரு முக்கிய பாத்திரத்துக்கு
சத்யேந்திராவைத்தான்
மனதில் தேர்ந்திருந்தேன்.

சென்னை புத்தகக் காட்சியில்
எதிர்பாராமல் சந்தித்தபோது –
விஷயத்தைச் சொன்னேன்.

என்ன சொன்னார் தெரியுமா?

“பேஷா பண்ணுங்கோ.
ஆனா நான் இப்பல்லாம்
ஒரு சீன் ரெண்டு சீன் ஒப்புக்கறதில்லே. பேமண்ட்ல வெரி ஸ்ட்ரிக்ட்.
ஒரு நாளைக்கு
ட்வெண்டி ஃபைவ் தவ்ஸண்ட்
சம்பளம் தந்தா நடிப்பேன்”.

உண்மையில்
அந்தத் தகுதிக்குரிய
கலைஞன்தான்!

நானே உப்புமா கம்பெனி.
இவருக்கே ஒரு நாளைக்கு
இருபத்தஞ்சாயிரமா?
என்றால் –
வடநாட்டு ஹீரோயின்
எவ்வளவு கேட்பார்!

அப்புறம் சத்யேந்திராவை
யோசிக்கவில்லை.

கேரளத்தின்
நகைச்சுவை மேடைப் பிரபலமான
அய்யப்ப பைஜு
அந்த வேடத்தைச் செய்தார் ;
ஷூட்டிங்குக்குப் போதாமல்
பைஜுவிடம் கடன் வாங்கிய
நாற்பதாயிரத்தை இன்னமும் நான்
திருப்பித் தரவில்லை
என்பதெல்லாம் தனிக் கதை.

மாதங்கள் முன்பு சத்யேந்திராவை
சந்திக்க வாயத்தபோது
இதையெல்லாம்
நினைவுபடுத்தினேன்.

அவர் இப்படி
மறுமொழிந்தார் :

“ச்சேச்சே. ஒருநாளைக்கு
இருபத்தஞசாயிரம் வேணும்னு
நான் டிமாண்ட் பண்ணேனா?
நோ சான்ஸ்.
ஏதோ மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்!”

என்னத்த சொல்ல?

நான் சொன்னேன் :

“உண்மைதான் தலைவா.
சரி விடுங்கள்.
எங்கே போய் விடும் காலம்?
நாம திரும்ப ஒர்க் பணணுவோம்”

ஆனால் –
எங்கோ போய் விட்டது காலம்!

அவரைப் படத்தில்
நடிக்க வைக்க முடியாத நான்
அந்தப் பாத்திரத்துக்கு
சூட்டியிருந்த பெயர்
‘சத்யேந்திரா’!

‘சத்யேந்திரா எம்ஏ
கோல்ட் மெடலிஸ்ட்’.

என் நெஞ்சார்ந்த
அஞ்சலி மலர்கள் கலைஞனே!

ரத்ன சந்திரசேகர்
சினிமா இயக்குனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.