பேராசிரியர்கள் பணியை சீர்குலைப்பதா? உயர்கல்வித் துறை உத்தரவுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கடும் கண்டனம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் என்பவர் கல்வியியல் செயல்பாட்டிலும், ஆராய்ச்சியிலும் அத்துறையின் வல்லுநர். மாணவர்களை அத்துறையின் வல்லுநர் ஆக்குவது பேராசிரியர் மற்றும் துறைத் தலைவரின் பிரதான பணி.

சமூக பாகுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை எதிர்கொண்டு  உயர்கல்வி படிக்க வரும் மாணவர்கள், பாகுபாடுகளை களைந்து, சமத்துவ வாழ்க்கையை வாழ்வதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை தங்களின் வாழ்வியல் விழுமியங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டுதலை கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுடன் இணைந்து வழங்க வேண்டிய பொறுப்பு பேராசிரியர் மற்றும் துறைத் தலைவருக்கு உண்டு.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு வழிகாட்டுவது, பாடத்திட்டம் உருவாக்குவதில் தொடங்கி மதிப்பீடு வரை கல்வியியல் சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், அப்பணிகளுக்கு தொடர்புள்ள கல்வியியல் நிர்வாக பணிகளை மேற்கொள்வதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின்  பேராசிரியர் மற்றும் துறைத் தலைவருக்கு உரித்தான கடமைகள் ஆகும்.

ஆராய்ச்சியை வழிநடத்தும் திறன் படைத்த ஆளுமைகள் எளிதில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்து படிப்பதும், ஆய்வுகள் மேற்கொள்வதும், ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதும் போன்ற தொடர் கல்வியியல் செயல்பாடுகள்தான் ஒருவரை துறைசார்ந்த வல்லுநர் ஆக்குகிறது.

கல்வி வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிகளுக்கும் தங்களது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டிய பேராசிரியர்களை  வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களை மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை‌ ஏற்பதோடு, தொழில் நிறுவனங்களுடன் கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலைத் திறன்களை மாணவர்கள் பெற்றிருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை உத்தரவிட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

பாடத்திட்டம் எழுதும் பணியை மேற்கொள்ளும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு (Tamil Nadu State Council for Higher Education -TANSCHE) ஒரு ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரியை தலைமைப் பொறுப்பிலும், அரசின் பல்வேறு பொறுப்பில் உள்ள ஆட்சிப் பணி அதிகாரிகளை உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.

பாடத்திட்டத்தை தயார் செய்யும் பொறுப்பை ஆட்சிப்பணி அதிகாரிகளிடம் தந்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலர் செய்ய வேண்டிய பணியை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் துறைத் தலைவர்கள் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை உத்தரவிட்டிருக்கிறது‌.

தேசியக் கல்விக் கொள்கை 2020யின் முந்தைய வரலாறு எனும் பத்தியில் 1986 / 1992 கல்விக் கொள்கையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நோக்கங்களை தேசியக் கல்விக் கொள்கை 2020 நிறைவேற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.

1986 / 1992 கல்விக் கொள்கையில் கல்வியை வணிகமயமாக்கி (commercialisation), வேலை வாய்ப்பிற்கான திறன் (vocationalisation) பயிற்சி வழங்கிடும் மையங்களாக உயர்கல்வி நிறுவனங்களை மாற்றும் கூறுகள் இருந்ததால்தான், அன்றே அத்தகைய கொள்கைகளை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்தன. அதை மேலும் தீவிரத் தன்மையுடன் 2020 கல்விக் கொள்கை செய்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை என்று கூறும் தமிழ்நாடு அரசு அதன் அனைத்து அம்சங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

வேலைவாய்ப்பு அலுவலர் (Placement Officer) செய்ய வேண்டிய பணியினை ஒரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் செய்யலாம். ‌பேராசிரியர் செய்ய வேண்டிய ஆய்வை வேலைவாய்ப்பு அலுவலர் செய்ய முடியுமா?

எத்தகைய ஆற்றலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அடிப்படை கோட்பாடுகளை பற்றி கவலைப்படாமல் மனித வளத்தை முறையில்லாமல் பயன்படுத்துவது, மனித வளத்தை விரையமாக்குவது ஆகும்.

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அனுப்பி உள்ள‌ கடிதம் எண் 1775 / F / 2026-1 நாள் 30.10.2026 உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரந்திரப்பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள்‌ மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்திட, கல்விக் கூடங்களாக, ஆராய்ச்சி மையங்களாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் போல் வேலைவாய்ப்பு மையங்களாக அரசு உயர்கல்வி நிறுவனங்களை மாற்றி உயர்கல்வியின் நோக்கத்தை சிதைத்துவிடக் கூடாது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெருமையை காக்க, அரசு உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும்.

அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை பலவீனப்படுத்தும் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.