செவிலியருக்கு செக்ஸ் டார்ச்சர் ; மருத்துவரை தேடும் போலீஸ் !
செவிலியருக்கு செக்ஸ் டார்ச்சர் ; மருத்துவரை தேடும் போலீஸ் ! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூரில் ரவி என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இதில் லேப் டெக்னீஷியனாக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் G.R நிவேதன் என்ற மருத்துவர் தொடர்ந்து இளம்பெண்ணிற்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 15-ஆம் தேதி மீண்டும் எல்லை மீறிய பாலியல் தொந்தரவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், நேற்று அதிக மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனை அறிந்த அவரது பெற்றோர் உடனடியாக மீட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .
மேலும், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் நடந்த இடம் உமராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் அந்த புகார் உமராபாத் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. உமராபாத் போலீஸார் மருத்துவர் நிவேதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட மருத்துவர் நிவேதனை தேடி வருகின்றனர்.
– மணிகண்டன்.