‘சிறை’யின் மாபெரும் வெற்றி! உழைத்தவர்களை கெளரவித்த லலித்குமார்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து விக்ரம் பிரபுவின் 25-ஆவது படம் என்ற சிறப்புடன் கடந்த 2025 கிறிஸ்துமஸ் தினமான டிச.25-ஆம் தேதி ரிலீசானது ‘சிறை’. சுரேஷ் ராஜகுமாரி டைரக்ட் பண்ணிய இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் லலித்குமாரின் மகன் எல்.கே.அக்ஷய்குமார். தமிழ்நாடெங்கும் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய ‘சிறை’ , ஜி-5 ஓடிடி தளத்தில் ஜனவரி 23-ல் ரிலீசாகி, அங்கும் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது.
மீடியாக்களின் நேர்மறையான விமர்சனத்தால், பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து தயாரிப்பாளர் லலித்குமாரின் மனம் குளிரும் அளவுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது ‘சிறை’. தான் அடைந்த மகிழ்ச்சியை படத்தில் உழைத்த அத்தனை பேரும் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ‘சிறை’யின் 75-ஆவது நாள் வெற்றி விழாவை கடந்த 13-ஆம் தேதி மதியம் சென்னையில் மிகவும் கோலாகலமாக நடத்தினார் லலித்குமார்.
படத்தில் பணியாற்றிய அத்தனை நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள், படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருமே ஆஜராகியிருந்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் டி.சிவா ஆகியோர் வந்திருந்தனர்.
முதலில் பேசிய டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரி,
“லலித் சார் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம். தமிழ் ரசிகர்களும் மீடியாக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்து வெற்றி பெற வைத்தார்கள். இந்த மாதிரியான நல்ல கதைகளை மக்களை நம்பி எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இப்படமே சாட்சி” என்றார்.

கதாரிசியர் தமிழ்,
“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எழுத்தாளர்கள் உள்ளனர். இங்கு தான் அதிகம் புத்தகம் விற்பனையாகிறது. ஆனால் சினிமாவில் கதாசிரியர்களுக்கு மதிப்பில்லை. அதை மாற்றினாலே ஓடிடியையோ மற்ற வியாபாரங்களையோ நம்பாமல் தியேட்டர்களை மட்டும் நம்பி படங்களை ரிலீஸ் பண்ணி ஜெயிக்கலாம்”.
எல்.கே.அக்ஷய்குமார்,
“புதுப்பையனான என்னை ஏற்றுக் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு கோடானு கோடி நன்றி. அதே போல் எனக்கு ஆதரவாக நின்ற என் குடும்பம், டைரக்டர் சுரேஷ் சார், ஹீரோ விக்ரம்பிரபு சார் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி”.
பேச்சுகளுக்கிடையே… படத்தின் டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரி, இவரின் உதவியாளர்கள், பணியாற்றிய முதன்மை தொழில்நுட்பக் கலைஞர்கள், இவர்களின் உதவியாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், போஸ்ட் புரொடக்ஷன் தொழிலாளர்கள், பி.ஆர்.ஓ.யுவராஜ் மற்றும் இவரின் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், தமிழ்க்குமரன், டி.சிவா ஆகியோரின் கரங்களால் வெற்றிக் கேடயங்களை வழங்கி, மனம் குளிரவைத்து அனுப்பினார் லலித்குமார்.

விக்ரம் பிரபு,
“இந்த வெற்றிக்கு அச்சாரம் போட்டவர் லலித் சார் தான். சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷடம், வாய்ப்பு, இதெல்லாம் சேர்ந்த ஒரு துறை. நானும் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு தான் இங்கு வந்திருக்கேன். இந்த சிறையின் மாபெரும் வெற்றி புதிய ஆரம்பம் போல இருக்கு. எனது சினிமா பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது தனிநபரின் வெற்றியல்ல, ஒரு டீமின் வெற்றி”.
வெற்றிமாறன்,
“பட ரிலீசுக்கு முன்பு புரமோட் பண்ணியதுடன் நிக்காமல் அதற்குப் பின்னும் தொடர்ச்சியாக புரமோட் பண்ணினார் தயாரிப்பாளர் லலித்குமார். அதன் பலன் தான் இந்த மாபெரும் வெற்றி. தமிழ் சினிமாவின் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் நல்ல ரசனையுடையவர்கள் என அடிக்கடி சொல்வேன். அது இப்போது நிரூபணமாகியுள்ளது. இதே மாதிரியான கதை வேறு மொழியில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை”.

லலித்குமார்,
”ஒரு படத்தை எடுத்து முடிப்பது வரை தயாரிப்பாளரின் வேலை. அதன் பின் அப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்வது மீடியாக்களின் கைகளில் தான் உள்ளது. இந்த சிறையின் பிரஸ் ஷோ முடிந்ததுமே உங்களின் உணர்வுகளை நேர்மையான முறையில் விமர்சனம் பண்ணியதால் மக்களின் மனங்களில் சிறைப்பட்ட்டு இந்த மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மீடியாக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி”.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.