சிவகாசி லாரி குடோனில் தீ விபத்து பற்றி எரிந்த பட்டாசுகள் மற்றும் வாகனங்கள் !
வீடியோவை காண
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைப் பகுதியில் சேலத்தைச் சேர்ந்த உரிமையாளருக்கு சொந்தமான மேட்டூர் டிரான்ஸ்போர்ட் என்ற தனியர் லாரி செட் இயங்கி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி , சாத்தூர் , வெம்பக்கோட்டை சுற்றுபகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை இந்தியாவின் முக்கி வடமாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பட்டாசுகளை கொண்டு செல்ல லாரி செட்டில் வைத்துள்ளனர்.
இன்று மாலை 5 மணி அளவில் லாரியில் வெளியூருக்கு பட்டாசு பார்சல்களை அனுப்பி வைக்க லாரி செட்டில் இருந்த பட்டாசு பார்சல்களை அந்த வாகனத்தில் ஏற்றும் பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில்,
பல கோடி மதிப்பிலான பட்டாசுகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், எரிந்து சாம்பலாகி நாசமாகியது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல கோடி மதிப்பிலான பட்டாசுகள் தீக்கிரையான, இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பலரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பகுதியை சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.
— மாரீஸ்வரன்.