வசனங்கள் பேசி நடித்தது போதும் விஜய் !

அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறையிலிருந்து அரசியல் இயக்கம் கண்ட எம்.ஜி.ஆர். பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.இராஜேந்திரன், பாக்யராஜ், டி.இராஜேந்தர், மன்சூர் அலிகான் அரசியல் இயக்கம் தொடங்கியவர்கள் வரிசையில் நீங்களும் அரசியல் களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். தேர்தலில் நீங்கள் விரும்பும் வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம்.

நீங்கள் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்னும் தவெக கட்சியின் தொடக்கவிழாவில் உரையாற்றும்போது, “கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக” என்று பிரகடனப்படுத்தி உரையாற்றியபோது உங்களின் இரசிகர் பட்டாளம் பொங்கி எழுந்து ஆரவாரம் செய்து அரசியல் களத்தைத் திகைக்கச் செய்தீர்கள். தொடர்ந்து செல்லும் இடமெல்லாம் இரசிகர் கூட்டம் கூடியது உங்களை மகிழ்ச்சி கொள்ளவே செய்திருக்கும்.

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தமிழகத்தையே துயர் கொள்ளச் செய்தது. நீங்களோ அரசின் மீது பழி போட்டீர்கள்.  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆமாம் சாமி போட்டார். ஆனால், கரூர் கூட்டத்திற்கு 10.30 மணிக்கு வரவேண்டிய நீங்கள்,    மாலையாகி இரவு நெருங்கிய நேரத்தில்தான் கரூர் வந்தடைந்தீர்கள். இந்த காலதாமதத்திற்கு இதுவரை பதிலில்லை. இந்த பாரிய காலதாமதத்துக்கும் கரூர் துயருக்கும் துளி கூட தொடர்பில்லை அப்படித்தானா?

ஆளும் திமுகவும் அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜியும் சேர்ந்து செய்த சதி என்ற வெறுப்பு பிரச்சார அரசியலை முன்னெடுத்தீர்கள். இது அரசியல் அறம் தானா?

Vijay: The Indian superstar at the centre of crush deaths rowசமீபத்தில், தவெக மூன்றாம் ஆண்டு விழாவில், “திமுகவைத் தீய சக்தி” என்று வசைமாரி பொழிந்தீர்கள்.  பெரியார்தான் கொள்கைத் தலைவர் என்று சொல்லி கொண்டே, பெரியாரிய வழியில் ஆட்சி செய்யும் திமுகவைத் தீயசக்தி என்று வாய்கூசாமல் சொல்வதில் வெளிப்படுவது உண்மையா? உள் மனதின் வக்கிரமான?

இதுவரையிலான திமுக ஆட்சி காலத்தில், மக்களுக்கு எதிராக இயற்றிய சட்டங்கள் என்ன? எப்படியெல்லாம் மக்களை வதைத்தது என்று என்றாவது பட்டியலிட்டது உண்டா? ஆதாரமே இல்லாமல், சினிமா பாணியில் அடுக்கு மொழி பேசுவதுதான் உங்கள் அரசியலா?

நீங்கள் தீய சக்தி என்று குற்றம் சுமத்தும் திமுகவின் – அண்ணாவின் ஆட்சிக் காலத்தில்தான், பெரியாரின் மாபெரும் கனவாக இருந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்பூர்வமானது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து கலைஞர் ஆட்சிக் காலத்தில், தனியார் வசம் இருந்த பேருந்து சேவை அரசுடமையாக்கப்பட்டது. அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்பை மீறி, பண்ணையாளர்கள் வசமிருந்த விளை நிலங்களில் உழுபவனின் உரிமை நிலைநாட்டப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 55 ஆண்டுகாலம் கழிந்த பின்னரும் இந்தியாவின் எந்த மாநிலமும் இதுபோன்ற ஒரு புரட்சிகரச் சட்டத்தைக் கொண்டுவர முன்வரவில்லை.   அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டமும் அதில் ஒன்று. ஆக இதனையெல்லாம் சாத்தியமாக்கியது நீங்கள் மூச்சுக்கு ஒரு முறை வசைபாடும் தீய சக்தி திமுக தான்!

இயக்குநர்கள் எழுதி கொடுத்த வசனத்தை வரி மாறாமல், ஏற்ற இயக்கத்தோடு பேசி விட்டு செல்ல இது ஒன்றும் சினிமா அல்லவே! தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்மானமான அரசியல்!

 

தமிழன்புடன் : ஆதவன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.