சீட் வாங்கித்தருவதாக சொல்லி சீட்டிங்கா?
ஆளும்கட்சி தரப்பில் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் இந்தமுறை கடும் நிபந்தனைகளை கட்சித்தலைவர் விதித்திருப்பதுதான் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. சீனியர் தலைவர்கள் சிலருக்கு அவர்களது முகத்துக்கு நேராகவே உங்களுக்கு இந்தமுறை சீட் இல்லை என்றும்; சிலருக்கு உங்கள் மகனுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை நீங்கள் நில்லுங்கள் என்றும் வெளிப்படையாகவே பேசியிருப்பதும்தான் சீனியர் உடன்பிறப்புகள் மத்தியிலேயே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், மலைக்கோட்டை மாவட்டத்தில் மலைவாசஸ்தலத்தை கொண்ட தனித்தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித்தருகிறேன் என்று லோக்கல் உடன்பிறப்பு ஒருவர் பெரும் தொகையை உருட்டிவிட்டார் என்கிறார்கள்.
கட்சியின் நிறுவனரான மூன்றெழுத்து பெயரை கொண்ட அந்த நிர்வாகி, எம்.எல்.ஏ.வாக ஆசைப்படும் பெண் ஒருவருக்காக ரொம்பவே மெனக்கெடுகிறாராம். மாவட்டத்தின் மீசைக்கார அமைச்சரையும் பார்த்து சிபாரிசு கடிதத்தை நீட்டியிருக்கிறார். கடுப்பான, அந்த சீனியர் அமைச்சர், தனக்கே உரிய பாணியில் வறுத்தெடுத்துவிட்டாராம். இதில் ஹைலைட்டே, புதுசா 2-சிக்கு சொத்து வாங்கியிருக்கியாமே? எனக்கு தெரியாதுனு நினைச்சியானு ஜாதகத்தை வாசிக்க, உடன் வந்தவர்கள் வாயடைத்து நின்றார்களாம். அமைச்சருக்கு நெருக்கமானவன் என்று சொல்லியே, எதிர்க்கட்சி ஆட்சியிலும் டெண்டரை விடாமல் செய்தவர், அரசு வேலைக்கு கமிஷன், அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, ஆட்டையப் போடுவதில் கில்லாடியான அந்த மத்திய நிர்வாகிக்கு எதிராக சொந்தக் கட்சியினரே கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இப்படி சம்பவத்தை சொல்கிறார்கள்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.