கோவில்பட்டி அருகே வீடு புகுந்து ரூ.1.83 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் !
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்தவர் கோமதி என்பவர் மனைவி சுப்புத்தாய் (74), கோமதி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் சுப்புத்தாய் கயத்தாறு வடக்கு தெருவில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவரது ஒரே மகளான மூக்கம்மாள் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது பேரன் திருமணத்திற்காக சுப்புத்தாய் பெங்களூர் சென்றிருந்தார். அங்கு திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு இன்று கயத்தாறு திரும்பிய சுப்புத்தாய் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த பொழுது அங்கு தூக்கு வாளி மற்றும் துணி பைகளில் மறைத்து வைத்திருந்த ரொக்க பணம் ரூ.1.83 லட்சம் மற்றும் 10 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி கயத்தாறு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். இச்சம்பவம் பற்றி அறிந்த கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த சுப்புத்தாய் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இக்கொள்ளை குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிகுந்த, வீடுகள் அதிகம் உள்ள ஒரு பகுதியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது கயத்தாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி.