இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை !
இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை – தலைநகர் டில்லியில் ஐந்து இலட்சம் விவசாயிகள் கண்ணீர் புகைக் குண்டுகள், சாலையில் பதித்த குத்தீட்டிகள், காங்கிரீட் சுவர்கள் என பல தடைகளை மீறி குறைந்தபட்ச ஆதார விலைக்காகப் போராடிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்றைய ஆங்கில இந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது .
ஆனால் மகிழ்ச்சி இந்திய விவசாயிகளுக்கல்ல அமெரிக்க விவசாயிகளுக்கு.! அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் எக்ஸ்ட்ரா லாங்க் ஸ்டேப்பிள் காட்டன் என்ற ELS ரக இழை பருத்தி இறக்குமதி வரியை பூஜ்யமாக குறைத்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கும் உத்தரவு மத்திய நிதி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. அந்நடவடிக்கை இந்திய சந்தையை அமெரிக்க இறக்குமதியாளர்கள் பயன்படுத்த உதவுமென இந்து பத்திரிகை தெரிவிக்கிறது.

லாங்க் ஸ்டேப்பிள் காட்டன் என்ற பருத்தி இழைகள் 34 மில்லி மீட்டரை விட கூடுதல் நீளம் கொண்டவை அவை இந்தியா இறக்குமதி செய்யும் பருத்தியில் நான்கில் ஒரு பங்கு உள்ளன என்றும் , இந்தியாவில் நெட்டிழை ரக பருத்தி உற்பத்தி செய்யப்படுவதில்லை என நெசவாலைத் தொழில் அதிகாரி கூறுவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
இந்தியாவில் லாங்க் ஸ்டேப்பிள் காட்டன் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற தி இந்து செய்தியில் அதிகாரி கூறிய தகவல் தவறானது, கர்நாடகாவின் தார்வாட், ஹவேரி தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சுமார் 4.94 இலட்சம் ஏக்கர் நிலங்களில் நெட்டிழைப் பருத்தி பயிரிடப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு பயிரிடும் இரண்டு முதல் மூன்று இலட்சம் விவசாயிகள் நிலை என்னவாகும் .
இறக்குமதி வரியின்றி இந்தியா வரும் பருத்தியுடன் உள்ளூர் விவசாயிகள் போட்டிப் போட முடியுமா ? அவர்கள் கதி ? ஏற்கனவே இந்தியாவில் 1995 முதல் 2018 ஆம் ஆண்டு வரை (400000) நாலு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர், ஏறத்தாழ நாளொன்றுக்கு 48 தற்கொலைகள் நடந்தன.வாரங்கலில் மட்டும் 500 பருத்தி விவசாயிகள் 1998 ஆம் ஆண்டில் தற்கொலை செய்தனர் .

தேசிய குற்றப் பதிவுத் துறை பதிவேடுகள்படி 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு 154 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்.வருடத்திற்கு அரை இலட்சத்தை தாண்டும் தற்கொலைகள் பாஜக ஆட்சியில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதைக் காண முடியும் , விளைச்சலின்மை, கடன் எனப் பல காரணங்களைக் கூறினால் கூட விளைபொருளுக்கு உரிய விலையின்மையை முதன்மைக் காரணமாக கூற முடியும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அடிமடியிலே கை வைப்பது போல அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு வரியை முற்றிலுமாக இரத்து செய்தது அநியாயம்தான் . விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு, என் மண் என் மக்கள் ,சுதேசியம், குருகுலக் கல்வி என வார்த்தைஜாலங்களை செய்து கொண்டே இலட்சக்கணக்கான பருத்தி விவசாயிகள் வயிற்றில் அடிக்க முடியுமா என்றால் முடியும் . அதான் இராமர் கோயில் கட்டியாச்சே !
தலைப்பில் கதைக்கு நடுவில் ‘ழு’ வந்திருக்க வேண்டும்.
தி.லஜபதி ராய்
புதுத்தாமரைப்பட்டி