திமுக கூட்டணியும் – மனிதநேய மக்கள் கட்சி நெருக்கடியும் !
மனிதநேய மக்கள் கட்சியும் அடிமட்ட தொண்டர்களின் ஏக்கமும் ! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதெல்லாம் ஏறத்தாழ நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ”மக்களவை தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் எங்களை ஏமாற்ற மாட்டார்” என்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல்சமது பேசியிருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.
கம்யூனிஸ்டு கட்சியும் காங்கிரசும் கூட்டணியில் இல்லாதபோதும், பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததோடு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நட்புறவை பேணி வரும் கட்சியாக இருந்து வருகிறது, மனித நேய மக்கள் கட்சி.
திமுகவுடன் கூட்டணியில் அதிக கட்சிகள் இல்லாத போது துணையாக நின்று, 1 சீட்டை பெற்றாலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே நேரத்தில் இந்தமுறையும் எப்படியாவது 1 சீட்டையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்களாம் மமக தரப்பில்.
பாசிசம் – பாஜக எதிர்ப்பு என்ற அரசியல் செயல்திட்டத்தோடும், அகில இந்திய அளவிலும் ”இந்தியா” என்ற கூட்டமைப்பாக அரசியல் கட்சிகள் அணிதிரண்டிருக்கும் இந்த அரசியல் சூழலில், தொடக்கத்திலிருந்தே திமுகவுடன் பயணிக்கும் மமகவுக்கு கண்டிப்பாக 1 இடமாவது வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் முன்வைக்கப்படும் சமாதானங்களை மமக கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டாலும், கீழ்மட்டத்தில் களத்தில் கட்சிப்பணியாற்றும் மமக தொண்டர்களின் மனநிலை அதற்கு இடம் கொடுக்காது என்பதுதான் அவர்களுக்கு எதிரே இருக்கும் பெரும் சவால் என்கிறார்கள்.
பாஜக எதிர்ப்பு என்பதாக காட்டிக்கொள்ளும் எடப்பாடியாருடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஐக்கியமாகியிருப்பதும்; எப்படியும் அவர்களும் கோரும் நாகரீகமான தொகுதிகளை பெற்றுவிட முடியும் என்ற சூழல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதே நேரத்தில் தொடர்ச்சியாக சிறுபான்மையினருக்கு ஆதரவாக எடப்பாடி தமிழகம் முழுவதும் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரம் அரசியல் அரங்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அதிலும் மிக முக்கியமாக, கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் இல்லாத சமயத்தில்கூட, உடன் பயணித்ததோடு, கம்யூனிஸ்டு கட்சியினரைப் போலவே பாஜக எதிர்ப்பு அரசியலை கீழ்மட்டத்தில் பரவலாக எடுத்து சென்றதில் மமகவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
தனிப்பட்ட முறையில் பல்வேறு இழப்புகளையெல்லாம் எதிர்கொண்டு களப்பணியாற்றிய சாமான்ய தொண்டர்களின் மனம் ஏற்கும்படியான முடிவை திமுக தலைமை அறிவிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கிறார்கள் மமக தொண்டர்கள்.
– மித்ரன்.