R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!
R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்-15 பைக்கில் சாகசம் காட்டியபடி சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். அப்போது, அந்த வழியாக திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினத்தின் போலீசு வாகனத்தை கண்டதும், “எட்றா வண்டியனு” வடிவேலு சொல்றா மாதிரி சீறிப்பாய்ந்திருக்கிறார்கள். கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் சொல்லி, சீறிப்பாய்ந்த காளைகளோடு பைக்கை பறிமுதல் செய்திருக்கிறார்கள் கொள்ளிடம் போலீசார்.
இரண்டு பைக்குகளில் பயணித்த மூன்று இளசுகளை பிடித்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள் என்ற விவரம் தெரியவரவே, மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் அவர்களை நேரில் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார் எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
குறிப்பாக, கெத்து காட்டிய அந்த மூவரில் ஒரு மாணவரின் தந்தை விவசாயி, மற்றொரு மாணவரின் தந்தை ஜூஸ் கடை வைத்திருக்கிறார், இன்னொரு மாணவரின் தந்தை கல்லூரி பேராசிரியர். மாணவர்களின் குடும்ப பின்னணியை கேட்டு தெரிந்து கொண்ட எஸ்.பி., நீங்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு கடன்பட்டு உங்களை படிக்க வைக்கிறார்கள். நீங்கள் இப்படி பொறுப்பில்லாமல் செய்யலாமா? இது சாகசம் கிடையாது. தேசிய நெடுஞ்சாலையில் இதுபோல ஹெல்மெட் போடாமல் சாகச பயணங்களை செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதனை எடுத்து சொல்லுங்கள் என்பதாக புத்திமதியை எடுத்து சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

விதிமீறலுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வாகனத்தை திருப்பிக் கொடுக்கும்படியும் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் எச்சரித்து அனுப்பியும் இருக்கிறார்.
கல்லூரிகளில் மாணவர்களுக்காக தன்னம்பிக்கை வகுப்புகளை எடுத்துவரும் எஸ்.பி. செல்வநாகரத்தினம், விதிமீறலில் சிக்கிய மாணவர்களுக்கும் போலீசு வகுப்பு எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். சிறப்பு கவனத்தையும் பெற்றிருக்கிறார்
— ஆதிரன்