ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..
ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..
இதை எழுதுவதா ? வேண்டாமா? என்று நிறையக் குழம்பிய பின்னரே எழுதுகிறேன்.
20.05.2022 வெள்ளி முற்பகல் 10.20 தேர்வறைகளுக்கு கண்காணிப்பாளர்களும் மாணவர்களும் சென்றுவிட்டார்கள். மாணவர்களுக்கு வழங்கியது போக மிச்சம் இருந்த வினாத் தாட்களை பீரோவில் வைத்து பூட்டி சீல் வைத்த பின்புஅறைகளை சுற்றி வருவதற்காக கிளம்புகிறேன். மூன்றாம் எண் அறையில் இருந்த விஜயலட்சுமி அழைக்கிறார்.
“சார், ஒரு பையன் அப்படியே சரியறான் சார்”.. ஓடுகிறேன், கைத்தாங்கலாக பிடித்தபடியே, “என்ன ஆச்சு, சாப்டியா சாமி?” சிரிக்கிறான்.. “ரெண்டு நாளா ஜுரம் சார். மருந்து பையில் இருக்கு என்கிறான்”.. கைத்தாங்கலாகவே அவனை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வருகிறேன், சரிந்து விழுகிறான். மூச்சு விட இயலாமல் தவிக்கிறான். சூடான தேநீரைத் தருகிறோம். கொஞ்சம் தெம்பு வருகிறது. மீண்டும் தனது பையில் மருந்து இருப்பதாகவும் அது வேண்டும் என்றும் கேட்கிறான். மூச்சுவிட முடியாமல் போகிறது. தேர்வறைக்கு செல்லும் முன் குழந்தைகளின் புத்தகப் பைகளை ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுவோம். தேர்வு முடிந்ததும்தான் அதைத் திறக்க வேண்டும். அதற்கு முன்னர் திறப்பது குற்றம். ஆவது ஆகட்டும் என்று அறையைத் திறக்கிறோம். அவன் சொன்ன மருந்து “நிவாரண் 90”. நாங்கள் பஃப் வைத்திருப்பான் என்று எதிர்பார்த்தோம். எங்களது அலுவலக உதவியாளர் தங்கதுரை, ‘அவனை எதிரே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துப் போகலாம்’ என்கிறார்.
அவரும் இன்னொரு அலுவலக எழுத்தர் மீனாம்மாவும் கைத்தாங்கலாக அழைத்துப் போகிறார்கள். அப்படியே நாற்காலியில் சாய்கிறேன். கால்மணி ஆகியும் யாரும் வராமல் போகவே எங்கள் துறை அலுவலரிடம் “நேரமாகுது ரமீலா, பயமா இருக்கு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பாத்துக்கப்பா” “போய் பார்த்துட்டு வாங்க சார். பாத்துக்கறேன்”.. பையனுக்கு ஆக்சிஜன் ஏறிக் கொண்டிருக்கிறது. தங்கதுரை மருத்துவரோடு பேசிக் கொண்டிருக்கிறார். பையன் ஒரு இருதய நோயாளி. 10 வருடங்களாக மருந்துகள் எடுப்பவன். இரண்டு மாதமாக மருந்தெடுப்பதை நிறுத்தி இருக்கிறான். அம்மா வருகிறார். மருத்துவர் அவரோடு பேசி, திருச்சி KMC பரிந்துரைக்கிறார். ECG எடுத்திருக்கிறார்கள்.வெளியே வரக்கூடாது சார். வந்துவிட்டேன். போகவா சார்… எழுகிறார். கைளைப் பற்றிக் கொள்கிறார்.
‘இன்னும் கொஞ்சம் நேரம் வராமல் இருந்திருந்தால் ஒன்று அவன் முடிந்திருப்பான். அல்லது இன்னமும் கிரிட்டிகலாக ஆகி இருக்கும்’
‘இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லையே?’ ‘90 விழுக்காடு இல்லை சார். மிச்சத்த அவன் பார்த்துப்பான்’ என்று மேலே கைகளை உயர்த்துகிறார். ‘தைரியமா போங்க சார்’.. என்கிறார். அவன் அரசுப்பள்ளி மாணவன். பணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆக்சிஜன், ECG எல்லாம் எடுத்த அந்த மருத்துவரை கை எடுத்துக் கும்பிடுகிறேன்.
நடந்ததை எல்லாம் சொல்லிய போது என்னைவிட பதினைந்து வயதாவது இளையவராக இருக்கும் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர், ‘சரியா செஞ்சுருக்கீங்க சார்’ என்கிறார். மாவட்டக்கல்வி அலுவலர், ‘ஒரு பையனக் காப்பாத்தி இருக்கீங்க சார்’ என்கிறார்.
இப்படி தொடர் சிகிச்சையில் இருக்கும் பிள்ளைகளுக்கு மருத்துவர் சொல்லாமல் மருந்துகளை நிறுத்தாதீர்கள். நோய் குறித்த விவரங்களை தேர்வுப் பணிக்கு வருபவர்களிடம் கொடுங்கள்.
என்ன வேணா சொல்லுங்க எப்படி அறையைத் திறக்கலாம்? வெளியே மருத்துவமனைக்குப் போகலாம்? என்று யாரேனும் கேட்டால் அன்று மாலை அந்தக் குழந்தை மோகன்ராஜோடு பேசிய தெம்பில் தண்டனைக்கான தெம்போடுதான் இருக்கிறேன்.
-எட்வின்