யாருக்கு என்ன அடையாளம் என்பது முக்கியம் இல்லை ! அவர் கைக்கொள்ளும் அரசியல் தான் முக்கியம் ! நெஞ்சுக்கு நீதி

0

நெஞ்சுக்கு நீதி படம் எனக்குப் பிடித்தது. இந்தப் படம் சாதி எப்படி ஓட்டு அரசியலில், முதலாளித் துவத்தின் கருவியாக செயல்படுகிறது எனச் சொல்கிறது. இது தவிர அது செய்யும் ஒடுக்கு முறை தனி.

இந்தப் படத்தின் மையக்கரு, பட்டியல் பிரிவில் ஒன்றைச் சேர்ந்த மைனர் சிறுமிகள் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கிறார்கள். முப்பது ரூபாய் கூலி உயர்
வைக் கேட்டுவிட்டார்கள், மற்றவர்களைக் கூலி உயர்வு கேட்க தூண்டிவிட்டார்கள் என்ற காரணத்திற்காக வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப் படுகிறார்கள். இரண்டு பெண்கள் மரணிக்க, இந்த வழக்கை விசாரிக்கும், மூன்றாவது பெண்ணைத் தேடும் காவல் அதிகாரியாக உதயநிதி. இங்கே ஒரு முக்கிய வசனம் .”ரேப் பண்ண பொண்ணுங்களை எரிச்சிருக்கலாம், புதைச்சிருக்கலாம். அவங்க பகுதியில் ஏன் தொங்க விட்டாங்கன்னா இங்கே இருக்கும் சிஸ்டத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னுதான். எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கு. இந்த சமூகம் ஒரு பேலன்ஸில் இருக்கணும்னா அவங்க அவங்க இடத்தில இருக்கணும்”.

இந்தப் படத்தில் காமெடி, குத்துப் பாடல், டூயட், சண்டைக்காட்சி என ஏதும் இல்லை. உதயநிதி எந்த ஹீரோயிசமும் இல்லாமல்தான் வருகிறார். கூர்ந்து வசனங்களைக் கேட்டால் அதன் பொருளை, அரசியலை விளங்கலாம். இது கொஞ்சம் மெதுவாக நகரும் படம்.

ஒரு பள்ளியில் சுதந்திர தின உரைக்குத் தயார் செய்யும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்துதான் இந்தப் படம் விரிகிறது.

அன்று அவன் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், அவர் சார்ந்திருக்கும் சாதிப் பிரிவிற்காக அவமானப்படுத்தப்படுகிறார். மொத்தப் பள்ளிக்காக செய்து வைக்கப்பட்டிருக்கும் சூடான உணவு வெளியே தூக்கிக் கொட்டப்படுகிறது. சுதந்திரக் கொடி குத்தியிருக்கும் சிறுவன் கையில் வைத்திருக்கும் உரைக் காகிதம் கீழே விழுகிறது. அதில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என எழுதி இருக்கிறது.

வெளிநாட்டில் படித்து விட்டு ஐ.பி.எஸ். தேர்வாகி பொள்ளாச்சிக்கு பணியில் சேர வரும் உதயநிதி ஊருக்குள் நுழையும் போது மனைவியிடம், ‘இந்த ஊர் பசுமையா அழகா இருக்கு. பாரத ரத்னா அம்பேத்கரே என்னை வரவேற்கிறார்’ என சிலையைக் கடந்து கொண்டே தொலைபேசியில் சொல்வார்.
‘சிலை வெளியே இருக்கா, கூண்டுக்குள் இருக்கா?’

‘கூண்டுக்குள் இருக்கு’… ‘அப்படியா.. நீ இன்னும் ஊருக்குள் நுழையலை’ என்பார் தொலைபேசியில் இருக்கும் மனைவி.
ஒரு எஃப்.ஐ.ஆர் போட, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்க இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது எனப் படம் சொல்லத்தான் செய்கிறது. போஸ்ட் மார்ட்டம் செய்த பெண் டாக்டரை போலீஸ் மிரட்டுகிறது. அது பாலியல் வன்முறையல்ல, ஆணவக் கொலை எனச் சித்தரிக்கிறது. ‘கோட்டாவில் படித்த ஆட்கள் கோட் போட்டா இதான் பிரச்சினை’ என்கிறது. அந்தப் பெண் டாக்டரின் பெயர் அனிதா. “நீங்கள் கண்டறிந்ததை எழுதுங்கள், ஐ ஆம் வித் யூ டாக்டர் அனிதா” என்கிறார் உதயநிதி. மக்கள் புரிந்து கொண்டு கை தட்டுகிறார்கள். வெள்ளைக் கோட்டைப் போட்டுக் கொண்டு வந்து ரிப்போர்டைக் கொடுக்கிறார் டாக்டர் அனிதா. இந்தப் படம் ஒரிஜினலைப் போல பிற்படுத்த வகுப்பிற்குள் இருக்கும் பேதங்கள், அது எப்படி சாதீயத்தைக் கட்டிக் காக்கிறது, பட்டியல் பிரிவிற்குள் இருக்கும் பேதங்களையும் தொட்டுச் செல்கிறது. தனக்குக் கீழ் ஒருவர் வேண்டுமென்ற அந்த நிலை ஒருபெரும் அரசியல் என்பதையும் படம் தொட்டு விட்டுச் செல்கிறது. அந்தச் சிறுமிகளை வன்புணர்வு செய்வது நிலவுடமைச் சாதி மட்டுமல்ல.

உயர்த்திக் கொண்ட சாதியும், மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களும். அது ஒரு வசனமாகவும் வருகிறது. தீண்டாமை என்ன கொடுமைப்படுத்தினாலும் பெண் உடலுக்கு ஏது தீண்டாமை எனத் தெளிவாகவே சொல்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்து எதிர்குரலாக வரும் குமரன் (ஆரி) கதாபாத்திரத்தை இன்னும் நேர்த்தியாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. இந்தப் படம் இந்திய அரசியல் சாசனத்தின் ஆர்டிகிள் 15ஐ உயர்த்திப் பிடிக்கிறது. அந்த ஆர்டிகிள் இனம், மதம், சாதி, பாலினம் ஆகியற்றை அடிப்படையாய்க் கொண்டு இந்த நாட்டின் குடிமக்களைப் பாகுபாடு செய்யக் கூடாது என்பதாகும். அந்தச் சிறுவன் அனைத்து இழப்புகளுக்குப் பின் அடுத்த சுதந்திர தினத்தில் மனனம் செய்யாமல் உரையாற்றுகிறான். அப்போது ஆர்ட்டிகிள் 15ஐக் குறித்துப் பேசுகிறான். அந்த சத்துணவு அமைப்பாளர் கொடியை ஏற்றுகிறார்.

சட்டம் ஒரு தீர்வு என இந்தப் படம் முன் வைக்கிறது. அந்தக் கருத்திற்கு எதிர்கருத்து படத்திலேயே சொல்லப்படுகிறது. சட்டம் நியாயத்தைப் பெற்றுத் தராது. சட்டம் இங்கே இருக்கும் சிஸ்டத்தைக் காப்பாற்றும் என உதயநிதியின் மனைவி பேசுவதாக ஒரு வசனம் வரும். அதுதான் நிதர்சனம். இப்படி சில கருத்தியல் ரீதியாக விமர்சனங்களை வைக்க முடியும்.

படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் நேர்காணலைப் பார்த்தேன். யாருக்கு என்ன அடையாளம் என்பது முக்கியமல்ல, அவர்கள் கை கொள்ளும் அரசியல் தான் முக்கியம் என்றார். அந்தக் கருத்து முக்கியமானது. படத்திற்கும், கதைக்கும் கவசமே உதயநிதி தான். திமுகவின் அடுத்த அரசியல் பயணத்திற்கும், திமுகவின் இமேஜ்ஜிற்கும் இந்த படம் உதவலாம்.

-திருமதி கீதாநாராயணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.