இயக்குனர் மிஷ்கின் செய்த அடாவடித்தனமான செயல்!
சனி ஞாயிறுகளில் நான் தவறாமல் பார்த்து வரும் நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர்.
அது ஒரு போட்டி நிகழ்ச்சி என்றாலும் நமக்குப் பிடித்த பாடல்களை நினைவுகூறவும், அந்தந்த பாடல்களுடன் இணைந்த நம் வாழ்க்கைச் சம்பவங்களை அசை போடவும் வைக்கும் நல்லதொரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி.
இப்போதெல்லாம் டாப் பத்துக்கு வரும் போட்டியாளர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒவ்வொரு வகையில் சிறந்த பாடகர்களே.
ஒவ்வொரு சுற்றிலும் தகுதி வாய்ந்தவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிடக் கூடாதே என்று ஒரு தவிப்பு ஏற்படும்.
இறுதியில் ஐந்து பேர்கள் இறுதிப் போட்டியாளர்களாக மக்கள் முன்பு பாடி, மக்களின் ஓட்டுக்களின் அடிப்படையில் வெற்றிக் கோப்பைகளை அடைவார்கள்.
அந்த ஐந்து பேர்களை டாப் 10 பேர்களிலிருந்து தேர்வு செய்யும் நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
இதில் நேற்று பார்த்த பகுதியில் ஒரு விஷயம் என்னை மிகவும் தொந்தரவு செய்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியின் நான்கு நடுவர்களில் இயக்குநர் மிஷ்கினும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே அவரின் பேச்சும் செயல்பாடுகளும் டாமினண்ட்டாகவே இருந்து வருகிறது.
மற்ற நடுவர்களுக்கான ஸ்பேசையும் இவரே ஆக்கிரமித்து அதிகமாக தன் மீதே கேமிராவின், மக்களின் கவனம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்வார். தன் கருத்தை மற்ற நடுவர்கள் மீது திணிக்கும்விதமாக இவருக்கு லைட் அடியுங்கள் என்று ஆர்ப்பாட்டமாக சொல்லி இன்ஃப்லூயன்ஸ் செய்து வந்தார். தனக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு வாட்ச் கொடுப்பது, முத்தம் கொடுப்பது, டெடி பியர் கொடுப்பது என்று மக்கள் கவனம் எப்போதும் தன் மீதே இருக்கும்படி ஒரு திரைக்கதை அமைத்துக் கொண்டார்.
இதெல்லாம் அவரின் தனித்துவ பாணி என்று விட்டுவிடலாம். ஆனால் நேற்று அவர் செய்த காரியம்.. உச்சமான அத்து மீறல்!
ஏற்கெனவே முதல் ஃபைனலிஸ்ட் தேர்வாகிவிட்ட நிலையில்.. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஃபைனலிஸ்ட்ஸ் தேர்வுக்காக இந்த சனி,ஞாயிறு பகுதிகளில் மற்ற 9 பேர்களையும் பாடச் செய்து, இறுதியில் நடுவர்கள் விவாதித்து இருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
நேற்று சில பாடகர்களே பாடியிருந்த நிலையில், போட்டியாளர் டிசாதனா பாடி முடித்ததும்.. விடுவிடுவென்று மேடைக்குச் சென்ற மிஷ்கின் டிசாதனாவின் கையைப் பிடித்து அழைத்துச்சென்று இரண்டாம் ஃபைனலிஸ்ட் அமர வேண்டிய அலங்கார நாற்காலியில் அமரவைத்துவிட்டு, “இவள் இங்கேதான் அமரணும். ஸாரி..ஜட்ஜஸ்! நீங்களும் ஒத்துக்குவிங்கன்னு நினைக்கிறேன்” என்றார்.

இன்னும் பலர் பாட வேண்டியிருக்க.. இவரின் இந்த அழிச்சாட்டியமான தனிப்பட்ட முடிவும், அதை மற்ற நடுவர்கள் மீது அப்பட்டமாகத் திணித்ததும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. மற்ற நடுவர்களான உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் சுஜாதா மூவருக்கும் அதிர்ச்சியும், தர்மசங்கடமும். வேறு வழியில்லாமல் சின்ன தயக்கத்துடன் அவர்களும் அதை ஏற்றார்கள்.
அனுராதா ஸ்ரீராம் மட்டும் சன்னக் குரலில் பலமே இல்லாமல் இன்னும் மற்றவர்கள் பாட வேண்டியிருக்கும்போது முன்னதாக இப்படி முடிவெடுப்பது unfair என்று தயங்கினேன் என்றார். ஆனால் அதை உறுதியாகச் சொல்லவில்லை.
நான்கு நடுவர்கள் இருக்க..ஒருவரின் தனி விருப்பத்தின் படி மட்டும் தேர்வுசெய்யப்பட்ட அந்தப் பெண் டிசாதானாவுக்கும் தர்மசங்கடம். கண்களில் நீரோடு அவர் இன்னும் மற்றவர்களும் பாட வேண்டியிருக்கிறதே என்று அந்த முடிவை ஏற்கத் தயங்க..அவரிடமிருந்து மைக்கை வாங்கி இது இவளின் நல்ல மனசைக் காட்டுகிறது என்கிறார் மிஷ்கின்.
கடைசியாக மிஷ்கின் ஏற்படுத்திய சங்கடத்தால் கிட்டத்த எமோஷனல் பிளாக் மெயில் போன்ற செயலால் வேறு வழியின்றி அந்தப் பெண்ணையே இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக அறிவித்தார்கள்.
திரு.மிஷ்கின் அவர்களே..இது அத்துமீறல், அதிகப்பிரசங்கித்தனம், மற்ற நடுவர்கள் மற்றும் இன்னும் பாடாத மற்ற போட்டியாளர்களுக்கு இழைக்கும் அநீதி என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
பிறகு எதற்கு நான்கு நடுவர்கள்? மிஷ்கின் ஒருவரை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நடத்தலாமே விஜய் டிவி.
ஒரு போட்டி நிகழ்ச்சியின் சட்டதிட்டங்கள் படியும் இது விதி மீறல்!
மற்ற போட்டியாளர்கள் விரும்பினால் கூட்டாக எதிர்வினை ஆற்ற முடியும்.
ஒரு பார்வையாளனாக மிஷ்கின் செய்த அடாவடித்தனமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.