அங்குசம் பார்வையில் ‘சரண்டர்’ – திரை விமர்சனம் !
தயாரிப்பு : ‘அப் பீட் பிக்சர்ஸ்’ வி.ஆர்.வி.குமார். டைரக்ஷன் : கெளதமன் கணபதி, ஆர்ட்டிஸ்ட் : தர்ஷன், லால், சுஜித் சங்கர், அருள் டி.சங்கர், முனீஸ்காந்த், பாடினி குமார், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன்,கவுசிக். ஒளிப்பதிவு : மெய்யேந்திரன், இசை : விகாஸ் படிசா, எடிட்டிங் : ரேணு கோபால், ஆர்ட் டைரக்டர் : ஆர்.கே.மனோஜ்குமார், ஸ்டண்ட் : ‘ஆக்ஷன்’ சந்தோஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஆர்.செந்தில்குமார், பி.ஆர்.ஓ. : ‘எஸ்2’ சதீஷ்.
தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணப்பட்டுவாடாவை ஆரம்பிக்கிறது ஆளுங்கட்சி. சோழிங்கநல்லூர் தொகுதிக்கான 10 கோடியை பிரபல தாதா கனகுவிடம் (சுஜித் சங்கர்) ஒப்படைக்கிறார் ஆளுங்கட்சித் தலைவர். அதை தனது நம்பிக்கையான ஆள் மூலம் ஒரு போலீஸ் அதிகாரி மூலம் டிஸ்ட்ரிபியூட் பண்ண ஏற்பாடு செய்கிறார் கனகு. போலீஸ் ஜீப்பில் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் போகும் போது ஆக்சிடெண்ட் ஆகிறது.

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் லைசென்ஸ் துப்பாக்கிகளை சரண்டர் பண்ணும் உத்தரவுப்படி திருமழிசை போலீஸ் ஸ்டேஷனில் தனது கைத்துப்பாக்கியை ‘சரண்டர்’ பண்ண வருகிறார் நடிகர் மன்சூரலிகான் [ படத்திலும் நடிகராகவே வருகிறார்] ஸ்டேஷனில் 30 வருடங்களாக ஹெட்கான்ஸ்டபிளாக இருக்கும் பெரியசாமியிடம் [ லால் ] அதை ஒப்படைத்து கையெழுத்துப் போட்டுவிட்டுக் கிளம்புகிறார் மன்சூரலிகான். அதை ஸ்டேஷன் லாக்கரில் வைத்துப் பூட்டுகிறார் லால். அதே ஸ்டேஷனுக்கு டிரெய்னிங் எஸ்,ஐ.யாக வருகிறார் புகழேந்தி [ தர்ஷன் ]. அங்கே இருக்கும் பெண் எஸ்,ஐ.க்கும் லாலுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.
இந்த நேரத்தில் தான் லாக்கரில் இருந்த மன்சூரலிகான் துப்பாக்கி காணாமல் போகிறது. அதைப் பற்றி விசாரிக்க சில ஐடியாக்களைச் சொல்கிறார் தர்ஷன். ஓட்டுப் பதிவு நாளுக்குள் துப்பாக்கியைக் கண்டுபிடிக்க உத்தரவு போட்டு ஒத்துழைக்கிறார் இன்ஸ்பெக்டர் சடையாண்டி [ அருள் டி சங்கர் ]. அதன் பின் இரண்டேகால் மணி நேரம் நடக்கும் சூப்பர் ட்விஸ்ட் க்ரைம் த்ரில்லர் தான் இந்த ‘சரண்டர்’.
‘டேக் டைவர்ஷன்’, ‘யு டர்ன்’, ‘நோ எண்ட்ரி’ எதுவுமே இல்லாத நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பது போல வெகு சிறப்பாக திரைக்கதையைக் கொண்டு போய் அசத்தியிருக்கிறார் டைரக்டர் கெளதமன் கணபதி. மிக நேர்த்தியான ‘நேரேஷன்’ அமைந்த படங்களில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் நாம் பார்த்த அருமையான ‘நேரேஷன்’ கொண்ட படம் என்றால் அது இந்த ‘சரண்டர்’ தான்.
படத்தின் முக்கியக் கேரக்டர்களான தர்ஷன், லால், சுஜித் சங்கர், அருள் டி.சங்கர், அந்த லேடி எஸ்.ஐ. ஆகியோர் மட்டுமல்லாது, ஒரு ஏழைப்பெண், அவரது ஐந்து வயது மகன், ஸ்டேஷனுக்கு டீ கொண்டு வரும் இஸ்லாமிய பெரியவர், திருச்சியில் அரசியல்வாதியாக இருக்கும் முனீஸ்காந்த், சுஜித் சங்கருக்கு நம்பிக்கையான விசுவாசியாக இருக்கும் குமார் கேரக்டர், 10 கோடியை ஆட்டையப் போடும் போலீஸ் அதிகாரி, அதை அவரிடமிருந்து அமுக்க நினைக்கும் வர்கீஸ் கேரக்டர் என எல்லா கேரக்டர்களையும் முதலில் ஒன் பை ஒன்னாக ஸ்கிரிப்ட்டுக்குள் கொண்டு வந்து, அவர்களை படம் முழுவதும் லாவகமாக உள்ளே நுழைத்து ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் கொடுத்துள்ள டைரக்டர் கெளதமன் கணபதியைக் கட்டிப் பிடித்துப் பாராட்டலாம்.

தர்ஷனுடனும் இரண்டு போலீஸ்காரர்களுடனும் சரக்கடிக்கும் போது லால் சொல்லும் கண்ணீர்க்கதை உருக வைக்கிறது. “போலீசில் நல்லவனா இருக்குறதவிட வல்லவனா இருக்கணும். உன்னிடம் சூது இருந்தா தான் உன்னைச் சுத்தி நடக்கும் ஆட்டத்தைச் சமாளிக்க முடியும்” என பொங்கி வெடிக்கும் லாலின் நடிப்பு அபாரம்.
சினிமா ஹீரோ போலீஸ் போல இல்லாமல், நிஜ போலீஸ் போலவே ஒட்டவெட்டிய முடி, ஆஜானுபாகுவான தோற்றம் என தர்ஷனின் பெர்ஃபாமென்ஸ் நச்சுன்னு பொருந்திருக்கு. லாலை அவமானப்படுத்திய சில்லு வண்டு ரவுடியைப் போட்டுத் தள்ளிவிட்டு, சக நண்பனிடம் அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கும் சரண்டருக்கு நச்சுன்னு கனெக்ட் ஆகியிருக்கு. தர்ஷனின் அப்பா பெயரும் பெரியசாமி என்பதை க்ளைமாக்ஸில் அருமையாக மேட்ச் பண்ணியுள்ளார் டைரக்டர்.
ஹீரோயின் பாடினி குமாருக்கு ஏழெட்டு சீன்கள் தான் என்றாலும் க்ளைமாக்ஸில் அவருக்கான முக்கியத்துவமும் இருக்கிறது. ஹீரோயின் ஒருவர் இருக்கிறார் என்பதாலேயே லவ் ட்ராக் வைக்காமல் விட்டதற்காகவும் டைரக்டரைப் பாராட்டலாம்.
இந்த ‘சரண்டருக்கு’ மிகப்பெரிய சப்போர்ட்டர்ஸ்னா அது கேமராமேன் மெய்யேந்திரனும் மியூசிக் டைரக்டர் விகாஸ் படிசாவும் தான். சில்லு வண்டு ரவுடியான சுஜித்தின் தம்பியை தர்ஷன் ட்ரேஸ் பண்ணிப் போகும் இரவு நேரத்தின் லைட்டிங் சென்ஸுடன் களம் இறங்கியிருக்கார் மெய்யேந்திரன். செமத்தியான பேக்ரவுண்ட் ஸ்கோரால் சூப்பர் த்ரில்லிங் எஃபெக்ட் கொடுத்து அசத்திவிட்டார் விகாஸ் படிசா.
ரவுடிகள், தாதாக்கள், அரசியல் புள்ளிகளிடம் மண்டியிடும் போலீசை இந்த சரண்டரில் காட்டியிருந்தாலும் நேர்மையாக இருக்கும் போலீசின் புத்திசாலித்தனம், அவர்களுக்குள் இருக்கும் மனிதாபிமானம், டிபார்ட்மெண்டின் கண்ணியத்தைக் காக்கும் குணம், புலன் விசாரணையில் போர்க்குணம் இவற்றையெல்லாம் உயர்த்திப் பிடித்திருக்கும் இந்த ‘சரண்டர்’—க்கு தாராளமாக சபாஷ் போடலாம்.
–மதுரை மாறன்