உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்) உயிர் காக்கும் அவசர கால 4 புள்ளிகள்-2
-ராச ஈசன்
நம் உடலில் உள்ள உறுப்புகளில் சிறந்தது எது..? என்ற அழகாபுரி நாட்டின் மன்னனின் கேள்விக்கு யோகியின் பதிலால் வியந்தான் மன்னன். உடன் வந்த அமைச்சர், “உயிரின் தன்மைகளை விளக்கி உயிரின் தத்துவத்தை தெளிவுபடுத்திட வேண்டுகிறேன்” என யோகியிடம் கேட்டுக் கொண்டார்.
அமைச்சரின் வேண்டுகோளைக் கேட்டு புன்முறுவல் பூத்த யோகி, “அமைச்சரே, நான் உயிரை விளக்கும் முன் தாங்கள் இறைவனின் தன்மைகளாக தாம் கற்று அறிந்தவற்றை கூறுங்கள்” என எதிர்கேள்வி விடுத்தார்.
எதிர்க்கேள்வியில் துணுக்குற்ற அமைச்சர் தயங்கியபடி அப்பனே இறைவனின் தன்மைகளாக நான் அறிந்தவை
- இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்.
- எல்லை அற்றவன்
- படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழில்களை செய்பவன்.
- சிறுதுயில், பெருதுயில் இல்லாதவன்
- தேவைகள் அற்றவன்
- படைப்புகள் அனைத்துக்கும் மூலமாய் விளங்குபவன்.
- ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன், அலியும் அல்லன்
- தனக்கென பெயர், அடையாளம், ஓர் உருவம் அல்லாத ஏகமானவன்.
- அளவில்லா கருணை உடையவன். சொல்லிலடங்கா பெருமை உடையவன்.
- படைப்புகள் அனைத்துக்கும் ஒரே தலைவன், ஏக இறைவனாய் விளங்குபவன் என விளக்கி முடித்தார். இவ்விளக்கத்தைக் கேட்டு யோகி அமைச்சரை வெகுவாக பாராட்டினார். “அற்புதம் அமைச்சரே அற்புதம்! அனைத்துக்கும் ஆதாரமாய் விளங்கும் ஏக இறைவனை அற்புதமாய் விளக்கினீர்.
இறைவனின் முழு படைப்புகளை யும் அண்டம் எனும் வார்த்தையால் குறிக்க இயலும். அவ்வாறே இந்த உயிர் கொண்ட இந்த உடலானது பிண்டம் என அழைக்கப்படும்.
அண்டத்தில் உள்ள யாவும் இப்பிண்டத்திலும் உண்டு. அண்டத்தின் மையமாய் இறைவன் விளங்குவதை போல இப்பிண்டத்தின் மையமாய் உயிர் விளங்குகின்றது. தாம் இறைவனின் தன்மைகளாக கூறிய அனைத்தும் தம் உடலில் விளங்கும் இந்த உயிருக்கும் பொருந்தும். சிந்தித்து உணருங்கள் என விளக்கினார்.
- உயிர் என்பது சூட்சும ஆற்றலாக இயங்குவது, உயிருக்கு பிறப்பு இறப்பு என்ற தன்மைகள் கிடையாது. உயிர் உடலை விட்டு நீங்கினால் உடல் இறக்கிறது. உயிர் கருவினுள் குடிகொண் டால் உடல் பிறக்கிறது.
- உடலுக்கு என எல்லைகள் இருப்பது போல் உயிருக்கு எந்த எல்லையும் கிடையாது.
- உயிர் உடலை படைத்து, காத்து, அழிக்கும் செயலை மேற்கொள்கிறது. மறைவாகவே இருக்கின்றது. உயிரின் அருளாலேயே உடல் வாழ்கிறது. எனவே ஐந்தொழில்களையும் செய்கிறது.
- உடல் உறங்கினாலும் உயிர் ஒரு போதும் உறங்குவதில்லை.
- உடலுக்கு என தேவைகள் இருப்பது போன்று உயிருக்கு தேவைகள் எதுவும் இல்லை.
- உடலுக்கு மூலமாய் விளங்குகின்றது.
- உயிர் ஆண், பெண், அலி என்ற பாலினம் கடந்தது.
- பெயர், அடையாளம், உருவம் அற்றது உயிர்.
- உயிர் உடலின் மீது கொண்ட கருணை எல்லையற்றது. உயிரின் பெருமைகளை கூற எண்ணிக்கை போதாது.
- இந்த உடலுக்கு ஒரே தலைவனாய், ஏக இறைவனாய் உயிர் விளங்குகின்றது. இறைவ னில் அளப்பறிய அருட்கொடையே உயிராகும் என விளக்கினார் மௌன யோகி.
இவ்விளக்கத்தை கேட்ட அனைவரின் கண்களும் அகல விரிந்தன.
“உள்ளம் பெருங்கோயில், ஊண்உடம்பு ஆலயம்
வள்ளல் பிராணார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே”
என்ற பாடலை மௌன யோகி பாடிக்காட்டி, “உடலே ஆலயம், உயிரே இறைவன்” என தெளிவுபடுத்தினார்.
யோகியார் கூறி முடித்ததும் அங்கு திடீரென சலசலப்பு. ஆய்வாளர் ஆனந்தன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மருத்துவர் மார்க்கண்டேயன் அவரது நாடியை பரிசோதித்தார். நாடித்துடிப்பு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. வழக்கமான முதலுதவிகள் செய்தார். இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மௌன யோகியார் மெல்ல எழுந்து மயங்கி விழுந்து கிடந்த ஆனந்தனுக்கு அருகே வந்தார். ஆனந்தனின் உள்ளங்காலில் தனது விரல்களைக் கொண்டு அழுத்தினார். பின்னர் அவரின் நடு நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்தார். பின்னர் நாசிக்கு கீழே மேலுதட்டின் நடுவில், நடுவிரலில் அழுத்தினார். இறுதியாக அவரின் உச்சந்தலையில் ஒரு அழுத்தம் கொடுத்தார்.
அடுத்த வினாடி ஆனந்தன் தூக்கத்தில் இருந்து விழிப்பது போன்று விழித்தார். இப்போது நாடியை பரிசோதிக்குமாறு மார்க்கண்டேயனை அறிவுறுத்தினார் யோகி. நாடியை பரிசோதித்து விட்டு அவர் நலமாக உள்ளதை அறிவித்தார் மார்க்கண்டேயன். அங்குள்ள அனைவரும் நடந்ததை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருக்க, மன்னர் பேசலானார். “அப்பனே தங்களது வல்லமையை புகழ வார்த்தைகள் இல்லை. ஆனந்தனை காப்பாற்றிக் கொடுத்தமைக்கு நன்றி” என கைகூப்பினார்.
மன்னன் கூப்பிய கரங்களை இறக்குமாறு சைகை காட்டிய யோகி, “மன்னா ஆனந்தனை காப்பாற்றியது எனது வல்லமை அன்று. அவருடைய உயிரின் வல்லமை. அவரது உயிரின் ஆற்றலை வரையறுத்து உடலின் சில பகுதிகளை சீர்படுத்தும் வகை மட்டுமே எமது செயல் அவரது உயிரின் ஆற்றலே அவரை குணப்படுத்தியது.
“உடலின் நோய்க்கு உயிரே மருந்து” உடலின் எந்த ஒரு நோயையும் சீர்படுத்த உயிராலே மட்டுமே முடியும். ஆனந்தன் தன்னுடைய உயிரை பேணி வளர்க்காமல் உடலை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதுவே அவரது உடலில் நோய் தோன்றிடக் காரணம். அவரது உயிர் ஆற்றலை உடலின் ஒரு சில பகுதிகளில் அழுத்தம் மூலம் விழிப்படைய செய்து அங்குள்ள தேக்கங்களை நீக்கியவுடன் அவர் நலம் பெற்று விட்டார். இதில் எமது வல்லமை ஏதும் இல்லை என விளக்கினார் யோகி.
குறிப்பு: வாசகர்களே ! யோகியார் பயன்படுத்திய இந்த அவசர கால சிகிச்சை முறையை நாம் அனைவரும் கற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். உயிர் காக்கும் நான்கு முக்கிய அவசரகால புள்ளிகள்.
1) உள்ளங்காலில் கட்டை விரலுக்கு கீழே ஒரு மேடும், மற்ற விரல்களுக்கு கீழே ஒரு மேடும் காணப்படும். இவ்விரு மேடுகளின் மையத்தில் ஒரு பள்ளம் காணப்படும். இதுவே உயிர்காக்கும் முதல் புள்ளி. இது உயிரோட்டத்தையும், நாடி துடிப்பையும் தூண்டும்.
2) நடு நெஞ்சு பகுதியில் இரண்டு மார்பு காம்புகளின் மத்தியில் அமைந்துள்ள புள்ளி. இது சுவாசத்தை சீரமைக்கும்.
3) நாசிக்கு கீழே மேலுதட்டின் மத்தியில் அமைந்துள்ள பள்ளம். இது நரம்பு மண்டலங்களை சீரமைத்து சுயநினைவுக்கு கொண்டு வரும். வெட்டுக் காயங்களால் அதிகமான உதிரப் போக்கு ஏற்படுமேயானால் இப்புள்ளியை தூண்டிட உடனே உதிரப்போக்கு நிற்கும்.
4)நடுஉச்சி பள்ளம். இப்புள்ளி உடலின் சகல ரோகங்களையும் தீர்க்கும். உடலுக்குள் உயிரோட்டத்தை ஊக்குவிக்கும்
தொடரும்…