எஸ்.வி.எஸ். வெறும் பிராண்ட் அல்ல ; பாரம்பரிய பிணைப்பு !
எஸ்.வி.எஸ். வெறும் பிராண்ட் அல்ல; பாரம்பரிய பிணைப்பு!
அன்றைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு மளிகை பொருள் கேட்டாலும் முகம் சுழிக்காமல் பக்குவமாய் நியூஸ்பேப்பரில் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சிக் கடைகள் இருந்தன. இன்று அண்ணாச்சி கடைகளில்கூட சரம் சரமாக மளிகை சாமான்கள் பாக்கெட்டுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. சில்லறை விற்பணையில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிக்க தொடங்கியதையடுத்து, பேக்கிங் செய்யப்பட்ட பாக்கெட்டில் கிடைக் காத பொருள் என்று ஒன்றுமில்லை என்றாகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டி போட்டுக் கொண்டு பாரம்பரியமான தமது சந்தையை தக்கவைத்துக் கொள்வதென்பது நிச்சயம் சவாலான ஒன்றுதான். இந்த சவால் நிறைந்த சந்தைப்போட்டியில் தரத்தில் சற்றும் குறைவைக்காமல் நான்காவது தலைமுறையாகவும் விடாது தொழிலை தொடர்ந்து வருகின்றனர் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த 1934-ம் ஆண்டில், அருப்புக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.வி.சங்கரலிங்க நாடார் என்பவரால், மதுரையில் உருவாக் கப்பட்ட மாவு மில் இன்று நான்கு தலைமுறைகளை கடந்து எஸ்.வி.எஸ். பிராண்டாக பிரம்மாண்ட வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வெறும் கடலை மாவு மட்டுமே இவர்களது பிசினஸாக இருந்திருக்கிறது. அதுவும் 50 கிலோ, 100 கிலோ மூட்டைகளில் மொத்த வியாபாரமாகவே செய்து வந்திருக் கின்றனர்.
1960-களில் இரண்டாவது தலைமுறையாக வியாபாரத்தில் இறங்கிய வி.எஸ்.சுந்தரமூர்த்தி அடிப்படையில் வழக்கறிஞர் என்பதால் நிர்வாக ரீதியில் சட்டப்பூர்வமான மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறார். அதற்கு முன்னர் வரையில் வெறும் கடலைமாவு மட்டும் என்றிருந்ததை, படிப்படியாக அரிசிமாவு, பட்டாணி மாவு, கோதுமை மாவு என விரிவுபடுத்தியிருக்கிறார். மிக முக்கியமாக, 50 கிலோ, 100 கிலோ மூட்டைகளில் நடைபெற்று வந்த வியாபாரத்தை ஐந்து கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைத்து விற்பது என கீழ் மட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருக்கிறார். அதுவரையில் சாக்கு மூட்டையில் அடையாளத் துக்காக ”எஸ்.வி.எஸ்.” என்று இடம்பெற்று வந்ததை, தனித்த வணிக முத்திரையாக மாற்றிக்காட்டியவரும் அவரே.
1980-களில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.எஸ்.வேல்சங்கர் களத்தில் நுழைகிறார். தொழில் போட்டிகள் நிறைந்த அந்த காலகட்டத்தில் தனது கல்வி அனுபவத்தை கொண்டு மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தாமல் போயிருந்தால் நான்காவது தலைமுறையை இந்நிறுவனம் தொட்டிருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். பட்டிதொட்டியெங்கும் ஸ்டிக்கர் அடித்து ஒட்டி பரவலாக விளம்பரப் படுத்தியிருக்கிறார். முக்கியமாக, அந்த காலத்தில் ஆண்ட்ராய்டு போனும் கிடையாது; கேபிள் கணெக்ஷனும் கிடையாது. பெரும்பாலும் ரேடியோ பெட்டிகள்தான் பொழுதுபோக்கு சாதனம். அப்போதே, சிலோன் ரேடியோ-வில் விளம்பரங்களை ஒலிபரப்பியிருக்கிறார். அக்மார்க் தரச்சான்று வாங்கி நிறுவனத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்று கொடுத்தவர், எஸ்.வி.எஸ்.எஸ்.வேல்சங்கர்.
பள்ளிக்கூட காலத்திலிருந்தே அப்பா பிசினஸ் மீது ஆர்வம் கொண்டு, மாவு அரைப்பது, பேக்கிங் செய்வது, அதன் தரத்தை பரிசோதிப்பது என உடன் இருந்து கற்றுத்தேர்ந்த சுராஜ் சுந்தர சங்கர் கல்லூரி படிப்பையும் தமது பாரம்பரிய தொழிலுக்கு உதவிகரமாக அமையும் வகையில் வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) என்பதாக தேர்வு செய்து படித்துள்ளார். அப்பா காலத்தில் மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தியது போலவே, தனது ஆன்ட்ராய்டு காலத்தில் டிஜிட்டல் பக்கம் கவனம் செலுத்தியிருக்கிறார். டிஜிட்டல் மயமான விளம்பரங்களால் மட்டுமின்றி; டிஜிட்டல் மார்க் கெட்டிங்கிலும் கால்தடம் பதித்திருக்கிறார்.
கொள்ளுதாத்தா காலத்தில் கடலை மாவில் ஆரம்பித்த பிசினஸ், சுராஜ் சுந்தர சங்கர் மற்றும் சர்வேஸ் ஸ்வரூப் சங்கர் ஆகிய நான்காம் தலைமுறை சகோதரர்களின் காலத்தில் கடல் கடந்தும் விற்பனையில் ஈடுபடும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. 80-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 89 வருடங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை சம்பாதித்திருக்கிறது. கொள்ளு தாத்தா – தாத்தா – அப்பா – மகன் என நான்கு தலைமுறைகளாக வியாபாரத்தில் தொடர்வதற்கான இரகசியம் ஒன்றிருக்கிறது. கொள்ளு தாத்தா காலத்தில் எந்தெந்த விவசாயிகளிடம் வியாபாரிகளிடம் மூலப்பொருட்களை கொள்முதல் செய்தார்களோ, அதன் பாரம்பரியம் விட்டுப் போகாமல், தரம் கெட்டுப் போகாமல், அந்த குடும்ப உறுப்பினர்களிடமே இன்றுவரையில் மூலப்பொருட்களின் கொள்முதலை தொடர்ந்து வருகின்றனர் என்பதுதான் எஸ்.வி.எஸ். என்ற வெற்றியின் இரகசியம்.
பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளித்து சுதேசி நிறுவனமாக வளர்ந்து நிற்கும் எஸ்.வி.எஸ். என்ற பிராண்டின் வழியே இழையோடுவது வெறுமனே வியாபார யுத்திகள் மட்டுமல்ல; பாரம்பரிய பிணைப்பும்தான்!
-ஷாகுல், படங்கள்: ஆனந்த்
வீடியோ லிங்: