திருச்சி – சுவாமி விவேகானந்தர், 150வது பிறந்தநாள் நினைவார்த்த நாணயம் குறித்த சொற்பொழிவு!
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்தநாள் நினைவார்த்த நாணயம் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்வினை நடத்தியது.
நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் துவக்க உரையில், தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது .
1984 ஆம் ஆண்டு,இந்திய அரசாங்கம் இந்நாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது மற்றும் 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. விவேகானந்தர் குறித்த நூல்கள் நூலகத்தில் உள்ளன. ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒரு நூல் என்ற வகையில் நூலகத்தில் உறுப்பினராகி நூல்களை வாசிக்க வேண்டும். வாசிப்பு பழக்கத்தை நேசிக்க வேண்டும் என்றார்.

விவேகானந்தர் நினைவார்த்த நாணயம் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா ஜனவரி 12, 2013 அன்று ஐந்து ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டது. ஐந்து ரூபாய் நாணயம் நிக்கல் பித்தளை கலவையில் ஆறு கிராம் எடையில் 23 மி.மீ விட்டத்தில் 1.92 மி.மீ தடிமன் சுற்று வட்டத்தில் வெளியிடப்பட்டது என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க செயலாளர் குணசேகரன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், வரலாற்று துறை மாணவர் அரிஸ்டோ உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
— அங்குசம் செய்திகள்.