எலும்புத் துண்டுகளுக்காக வஞ்சிக்கப்பட்ட அப்துல் காதர்.!
எலும்புத் துண்டுகளுக்காக
வஞ்சிக்கப்பட்ட அப்துல் காதர்.!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் ‘அதிரை’ அப்துல் காதர் என்கிற முகமது அப்துல் காதர். வயது 46.
ரியல் எஸ்டே தொழிலில் ஈடுபட்டு வரும் அப்துல் காதர் தற்போது தஞ்சையில் வசித்து வருகிறார்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். பாஜக பிரமுகர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து சுமார் 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடத்தை சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி விற்ற வகையில் கிடைத்த லாபத்தை பங்கிட்டுக் கொள்வதில் அவ்விருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்விடத்தை வாங்கி விற்ற வகையில் தனக்கு தர வேண்டிய அசல் மற்றும் லாபத்தில் கிடைத்த பங்கை தராமல் கரம்பயம் தங்கவேல் தன்னை ஏமாற்றி விட்டார் என்பது அப்துல் காதரின் குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டை கரம்பயம் தங்கவேல் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் அலுவலகத்தில் அப்துல் காதர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்துல் காதருக்கு 2022 மார்ச் 26-ம் தேதி ஒரு சம்மன் வந்துள்ளது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாலும், இவரால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 107-ன் படி நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டிணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முன்பாக 30.03.2022 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மன் நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.
“என் மீது எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டிராத நிலையில் இப்படியொரு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டு எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த சம்மனில் அறிவுறுத்தியிருந்தபடி மார்ச் 30-ம் தேதியன்று அப்போதைய பட்டுக்கோட்டை ஆர்டிஓ முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டு என்னை அங்கிருந்து புறப்பட அனுமதித்தார்,” என்கிறார் அப்துல் காதர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் அதிருப்தி அடைந்த அப்துல் காதர், கரம்பயம் தங்கவேல் மீது அப்போதைய திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் என்பவரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளார்.
மத்திய மண்டல ஐஜியின் உத்தரவின்பேரில், அப்போதைய வல்லம் உட்கோட்ட டிஎஸ்பி ஆர்.பிருந்தா 22.07.2022 அன்று இரு தரப்பினரையும், சாட்சிகளையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பிய தனது அறிக்கையில், ‘எதிர்மனுதாரர் (கரம்பயம் தங்கவேல்) மோசடி செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்தில் செயல்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் எதிர் மனுதாரர் ரியல் எஸ்டேட் நடத்தி இதேபோன்று செயல்படுவதாக விசாரணையில் தெரிய வருகிறது’ என டிஎஸ்பி பிருந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இம்மனுவை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு எதிர்மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆவணம் செய்யுமாறு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார் டிஎஸ்பி பிருந்தா.
இதையடுத்து அப்துல் காதரின் புகார் மனு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 20.09.2022 அன்று மாலை 7.15 மணியளவில் பட்டுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் இருந்து அப்துல் காதரின் மொபைலுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய நபர், ‘உங்கள் மீது ஒரு புகார் வந்துள்ளது. நீங்கள் பட்டுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் கரம்பயம் தங்கவேல் என்பவரை இன்று மாலை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் புகார் மனு அளித்துள்ளார். அதுபற்றி உங்களிடம் விசாரிக்க வேண்டியிருப்பதால் நாளை (21.09.2022) மாலை பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வாங்க’ எனக் கூறியுள்ளார்.
“அதனடிப்படையில், மறுநாள் மாலை 5 மணியளவில் எனது வழக்கறிஞருடன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஆஜரானேன். அங்கே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகிய இருவரும் என்னிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நான் எவ்வளவோ கெஞ்சியும் தங்கவேலுவின் புகாரை என்னிடம் காட்ட மறுத்துவிட்டனர். விசாரணை முடிவில், சம்பவத்தன்று மட்டுமல்லாது கடந்த ஒரு மாத காலமாகவே நான் பட்டுக்கோட்டை பக்கமே வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட போலீஸார் என்னை விரைவில் அங்கிருந்து அனுப்பி வைப்பதாக கூறினர். நானும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல காத்திருந்தேன்.
ஆனால் இரவு 10 மணி வாக்கில் என் மீது மேலிடத்தில் இருந்து வழக்குப் பதிவு செய்யச் சொல்லியதாகக் கூறி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் என்னை மிரட்டினர்.
என் மீது எந்த தவறும் இல்லை எனத் தெரிந்த பிறகும் எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என நான் கேட்டேன்.
அதற்கு, ‘உனக்கு பதில் எல்லாம் சொல்ல முடியாது. உன் மீது வழக்கு பதிய சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. மேலிடத்தில் இருந்து என்ன உத்தரவு வருகிறதோ அதன்படிதான் நாங்கள் நடக்க முடியும்’ என்றனர் அவ்விரு போலீஸ் அதிகாரிகளும்.
எனது மனைவி இல்லாத நிலையில், பள்ளியில் படிக்கும் எனது மகன் மட்டும் வீட்டில் தனியாக எனக்காக காத்திருப்பதைக் கூறி கெஞ்சிக் கூத்தாடி மறுநாள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவதாக கூறி ஒருவழியாக அன்றிரவு தஞ்சாவூர் திரும்பினேன்.
மறுநாள் மீண்டும் நான் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கிருந்த போலீஸார் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பிரபாகர் முன்பு ஆஜர்படுத்தினர்.
நான் எவ்வளவோ கெஞ்சியும் போலீஸார் எனது இரு கைகளையும் பின்புறமாக இழுத்து முறுக்கி பலவந்தப்படுத்தி குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 107ன் கீழ் என்னிடம் பிணைப்பத்திரத்தில் கையெழுத்திடச் செய்தனர்,” என்கிறார் அப்துல் காதர்.
போலீஸாரின் அடாவடி நடவடிக்கைகளால் நொந்துபோன அப்துல் காதர் இதுகுறித்து அதற்கடுத்த நாள் (23.09.2022) அப்போதைய மாவட்ட எஸ்.பி. ரவளிப்ரியாவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார்.
“ஆனால் எனது புகார் மனு மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வளவு ஏன்? குறைந்தபட்சமாக, விசாரணை கூட நடத்தப்படவில்லை. அந்த மனு என்ன ஆனது என்றே தெரியவில்லை,” என்கிறார் அப்துல் காதர்.
இதற்கிடையே, குற்றச்சாட்டுக்குள்ளான இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தற்போது பதவி உயர்வு பெற்று சேலம் மாநகரில் காவல்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த மாவட்டத்தில் நடைபெற்ற ஈமு கோழி மோசடியில் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக தஞ்சை காவல் சரகத்துக்கு பந்தாடப்பட்டு பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு நேர்ந்த அவலத்தை சட்டரீதியாக தட்டிக் கேட்க முடிவு செய்த அப்துல் காதர், 21.09.2022 அன்று பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் இரவு 11 மணி வரை சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை குறித்த ஆவணங்கள், தன்னிடம் எழுதி வாங்கிய விசாரணை அறிக்கை நகல், தங்கவேல் கொடுத்த புகார் மனுவின் நகல், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு, பட்டுக்கோட்டை நகர காவல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் வடிவேல் காமெடியை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
‘உங்கள் மீது எந்தவொரு புகாரும் வரவில்லை. தங்கவேல் என்பவர் உங்கள் மீது புகார் மனு எதுவும் கொடுக்கவில்லை. அதோடு, மனுதாரர் கோரியுள்ள கடந்த 21.09.2022 அன்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் பதிவான தேதியில் இருந்து 18 நாட்கள் மட்டுமே சேமிப்பில் இருக்கும்’ எனக் கூறியுள்ளனர் போலீஸார்.
இதில் உச்சகட்ட காமெடி என்னவெனில்,
‘பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் மனுதாரரை விசாரணை செய்யவில்லை. மனுதாரரிடம் வட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் எந்த விசாரணையும் செய்யவில்லை’ என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர் போலீஸார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மற்றொரு மனுவிற்கு, ‘20.09.2022 அன்று கரம்பயம் தங்கவேல் என்பவர் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளதாக’ பதில் அளித்துள்ளனர் போலீஸார். பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய மனு ரசீது எண்.523/22-ன் கீழ் நடவடிக்கைக்காக அப்துல் காதர் மீது பட்டுக்கோட்டை வட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் பேரில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அவர்களால் M.C.NO 159/22 dt 22.09.2022-ன்படி நிறைவேற்றப்பட்டுள்ளது உண்மை என பதில் அளித்துள்ளார் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் .
இதற்கிடையே பிணைப் பத்திரத்தில் தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டது தொடர்பாக காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல் வழங்குமாறு கேட்டு பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார் அப்துல் காதர்.
அதற்கு, குமுவிச 107ன் படி எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8 (1)h ன் கீழ் மனுதாரருக்கு வழங்கிட வழி இல்லை என பதில் அளித்துள்ளார் பொதுத் தகவல் அலுவலரான வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ்.
அதுகுறித்து அனுப்பிய மேல் முறையீட்டு மனுவிற்கு, ‘மனுதாரர் கேட்டிருந்த தகவல் ஏற்கெனவே பொதுத் தகவல் அலுவலரால் அனுப்பப்பட்டுவிட்டது’ என பதில் அளித்துள்ளார் தற்போதைய வருவாய்க் கோட்டாட்சியர் அக்பர் அலி.
கோட்டாட்சியர் அக்பர் அலி, அவரது நேர்முக உதவியாளர் அருள்ராஜ் ஆகிய இருவருமே ‘பெரிய தில்லாலங்கடிகள்’. அவர்களது சொத்துப் பட்டியல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாலே அவ்விருவரும் எவ்வளவு பெரிய தில்லாலங்கடிகள் என்பது வெளிச்சத்துக்கு வரும் என ஒருவித நமட்டுச் சிரிப்புடன் கூறுகின்றனர் சக வருவாய்த்துறை அதிகாரிகள்.
எதிர் தரப்பு சார்பில் வீசப்பட்ட சில எலும்புத் துண்டுகளுக்காக ஆசைப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு தனக்கு அநீதி இழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில மனித உரிமைகள் ஆணைத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார் அப்துல் காதர்.
“அதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விரைவில் உயர் நீதிமன்றத்தில் ரிட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்.
உரிய நீதி கிடைக்கும்வரை இவர்களுக்கு எதிரான எனது சட்டப் போராட்டம் தொடரும்,” என்கிறார் அப்துல் காதர்.