முதல்வர் கேட்ட பிறந்தநாள் பரிசு ; சிக்கலில் மாவட்ட செயலாளர்கள் !
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் கழக உடன்பிறப்புகள் எனக்கு கொடுக்கும் பரிசு இதுதான் என்று அழுத்தமான வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளில் வெற்றி பெற்ற நபர்கள் பதவியேற்பு விழா நாளை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு 4ஆம் தேதி மேயர், துணை மேயர். பேரூராட்சி சேர்மன், துணைச் சேர்மன். நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான பதவி ஏற்பு நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழா அமைதியாகவும் தலைமை விருப்பப்படும் நபர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதில் எந்தவித சச்சரவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் உடன்பிறப்புகளுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.
தலைவரே இப்படி பேசி விட்டார் என்று ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகானத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி காட்ட வேண்டும் என்று ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகிகளையும் தனித்தனியே தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். இதில் மாநகராட்சி பொருத்தவரை பிரச்சினைக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் நகராட்சி, பேரூராட்சி பதவிக்கான போட்டியை எப்படி அமைதியாக நடத்துவது என்று ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும், மாவட்ட அமைச்சர்களும் டென்ஷனில் உள்ளார்களாம்.