நிறம் மாறிய ஆளுநர் மாளிகை
ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவன் இல்லத்தில் 22.02.2022ஆம் நாள் நடைபெற்றது. இந்தத் திருமணம் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 17 ஆம் தேதியே கோத்தகிரி உதகை ராஜ்பவன் வந்து விட்டார். ஆளுநர் உத்தரவின்படி ராஜ்பவனின் பாரம்பரிய பச்சை நிறத்தை மாற்றி பளிச்சென்று தெரியும் வெண்மை நிறத்திற்கு மாற்றப்பட்டது.
இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிற மாற்றம் திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆளுநரின் உத்தரவுப்படியே ராஜ்பவனின் நிறம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தனர். உதகை ராஜ் பவன், 1876ம் ஆண்டு, டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் என்ற பிரிட்டிஷ் ஆளுநரால் உருவாக்கப்பட்டது.
அன்று இந்த மாளிகையின் பெயர் “கவர்மண்ட் அவுஸ்.” இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாளிகை ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ராஜ்பவன் கட்டடத்தின் பாதுகாப்பு கருதியே, 145 ஆண்டுகளாக வெளிப்பக்க சுவர் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஜ் பவனில் 14 அறைகள், பெரிய விருந்து கூடம், பால்ரூம் மற்றும் வரவேற்பு அறைகள் உள்ளன. ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஜ்பவனில் தோட்டக்கலைத் துறையினர் தோட்டத்தை பராமரித்து வரும் நிலையில், பாரம்பரிய கட்டிடத்தின் பராமரிப்பை பொதுப்பணித்துறையினர் கவனித்து வருகின்றனர்.