தங்கலான் – திரைப்படம் அல்ல – ஆவணப்படம் !
தங்கலான் – திரைப்படம் அல்ல; ஆவணப்படம் – திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் முதுநிலை கணினியியல் படித்து, தற்போது சென்னையில் தனியார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் நெ.நிலவன் (24) தங்கலான் திரைப்படம் குறித்து அங்குசம் செய்தி இதழுக்குத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதிலிருந்து…..
திருச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் பார்ப்பது என்று திருச்சியில் மெகாஸ்டார் திரையரங்கிற்கு முன்பதிவு செய்திருந்தேன். தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட்டு 15ஆம் நாள் வெளிவந்ததால், திரைப்படம் குறித்த பல்வேறு விமர்சனங்களைச் சமூக ஊடகங்களில் படித்தேன்.
அதில் பலர் திரைப்படத்தின் ஆக்கத்தையும் அதன் நோக்கத்தையும் பாராட்டியிருந்தனர். சிலர் திரைப்படம் புரியவில்லை, இடைவேளைக்குப் பின் படத்தின் போக்கு மெதுவாக இருந்தது. சாதி வைத்து ஏன் இன்னும் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
தங்கலான் திரைப்படம் குறித்த சமூக ஊடகங்களில் வெளிவந்த எதிர்மறை கருத்துகளைப் பின்வருமாறு:
·படத்தில் கதையே இல்லை, படத்தில் கதை புரியவில்லை.
·படம் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தை நினைவூட்டுகின்றது
·வசனங்கள் புரியவில்லை, வசனங்கள் தெளிவாகக் கேட்கவில்லை
·இது “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தைப் போலக் கதையமைப்பு உள்ளது
·பா.இரஞ்சித் பறை(ரை)யர் அரசியல் பேசியுள்ளார்.
·தங்கலான் அப்பா எப்படி இறந்தார் என்பதைக் காட்டிவிட்டு மீண்டும் அதே காட்சியை இடைவேளைக்குப் பின் காட்டுவது அலுப்பை ஏற்படுத்துகின்றது.
·காட்சிகள் ஒரே இடத்தில் நடைபெறுவது நாடகம் போல் உள்ளது.
·சட்டை அணிந்துகொண்ட பெண்கள் மார்பகங்களின் அடியில் கையை வைத்துக்கொண்டு மார்பகங்களை இரசிப்பது, கங்கம்மா ‘மொல பெரிசா இருக்குதுல்ல…’ என்று ஆபாசமாகக் கூறுவதை இரஞ்சித் எப்படிப் படமாக்கினார்?
·சீயான் விக்ரம் என்ற மனுஷன் உயிரைக்கொடுத்து நடித்ததை இரஞ்சித் வீணாக்கிவிட்டார்.
இந்தக் கருத்துகளை மனதில்கொண்டு அடுத்தநாள் தங்கலான் திரைப்படம் பார்க்கச் சென்றேன். படம் திரையிட்டவுடன் தங்கலான் என்ற பெயரைப் பார்த்தவுடன் இளைஞர் கூட்டம் எழுப்பிய கூச்சலுக்கு அளவேயில்லை. தொடர்ந்து சீயான் விக்ரம் என்ற பெயருக்கும் இயக்கம் பா.இரஞ்சித் என்ற பெயருக்கும் இசை ஜி.வி.பிரகாஷ் என்ற பெயருக்கும் பலத்த கைத்தட்டலும், எழுப்பிய கூச்சலும் அடங்க வெகுநேரம் ஆயிற்று.
அதன்பின் திரைப்படம் தொடங்கியது. 1800களில் வடஆற்காட்டில் குடியாத்தம் பகுதியில் அம்மண்ணின் பூர்வீகக்குடிகளாகப் பறையர் சமூகம் வயல்வெளிகளில் நாற்று நட்டு, களையெடுத்து, நெல்லை அறுவடை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள பண்ணையார் இவர்களிடம் உள்ள நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தோடு செயல்படுகிறார்.
பின்னர்ப் பிரிட்டிஷ் அரசின் உத்தரவின்படி நில வரி கட்டவேண்டும் என்று அறிவிப்பு வருகின்றது. பண்ணையார் விளைந்த வயல்வெளிகளைத் தீயிட்டு எரித்துவிடுகிறார். வெள்ளையர்களுக்கு நிலவரி கொடுக்கமுடியாமல் பூர்வீகக் குடிமக்கள் தவிக்கும்போது பண்ணையார் நிலவரியைச் செலுத்தி. பூர்வீகக்குடி மக்களை அடிமையாக மாற்றிக் கொள்கிறார். இந்தக் காட்சியமைப்பு எவ்வாறு அடித்தட்டு மக்கள் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்தனர் என்பதை விளக்குகிறது.
அன்றைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கோலாரில் தங்கத்தை வெட்டியெடுப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்ற குடியாத்தம் பகுதி பறையர்களை ஆங்கிலேயர் அணுகுகிறார். ஆங்கிலேயரோடு இணைந்து தங்கலான் தன் உறவினர்களை அழைத்துக்கொண்டு தங்கம் வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கலான் நினைத்ததுபோல் ஆங்கிலேயனும் வெட்டியெடுத்த தங்கத்தில் உரிமை தரமறுக்கிறான். சண்டை மூள்கிறது.
இறுதியில் தங்கலான் சண்டையில் வெற்றிபெற்று, சுரங்கத்திற்குள் சென்று தங்கத்தை எடுத்துவருகிறார் என்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகின்றது என்பதுதான் கதையும் திரைக்கதையும் ஆகும். கதை இல்லை, திரைக்கதை தெளிவாக இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை.
தங்கலான் திரைப்படம் கார்த்திக் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை நினைவுபடுத்தலாம். அதன் களம் வேறு, தங்கலான் கதைக் களம் வேறு. இரண்டிலும் இருக்கும் ஒற்றுமை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருப்பார்கள். ஆதிக்கவாதிகள், ஆதிக்கச் சாதியவாதிகள் போராட்டத்தைக் கடுமையாகவும் கொடுமையாகவும் ஒடுக்கிக்கொண்டே இருப்பார்கள் என்பதேயாகும்.
படத்தில் வசனங்கள் தெளிவாகக் கேட்கவில்லை. புரியவில்லை என்பதில் தெளிவாகக் கேட்கவில்லை என்பதற்குத் திரைப்படம் எடுத்தபின் நடைபெறும் ‘டப்பிங்’ தங்கலானில் நடைபெறவில்லை. காட்சியில் உணர்ச்சியோடு பேசுவதை நேரடியாகப் பதிவு செய்துள்ளனர். அதனால் தெளிவில்லை என்பதை ஏற்கமுடியும். புரியவில்லை என்பதை ஏற்க இயலவில்லை. டப்பிங்கில் பேசி வசனங்களைத் தெளிவாக இரஞ்சித் போன்ற திரைக்கலைஞனால் கொடுத்திருக்கமுடியும்.
அப்படிச் செய்தால் உலகத் திரைப்பட விழாக்களில் தங்கலான் இடம்பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும். கதை மாந்தர்கள் சொந்தக்குரலில் பேசியிருக்கவேண்டும் என்பதும் திரைப்படவிழாவில் கலந்துகொள்ளும் திரைப்படங்களுக்கான விதியாகும். இந்த விதியைப் புரிந்துகொண்டுதான் இரஞ்சித் நேரடியாக வசனங்களைப் பதிவு செய்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்டால் இது ஒரு பிரச்சனை இல்லை என்பது தெளிவாகிவிடும்.
இயக்குநர் இரஞ்சித் தங்கலான் படத்தில் எங்கேயும் பறையர் அரசியல் பேசவில்லை. அரசியல் குறிப்பாக நுண்அரசியல் பேசியுள்ளார் என்பதே உண்மை. குடியாத்தம் பகுதியில் வாழ்ந்த மக்கள் கோலார் சென்று தங்கம் தோண்டச் சென்றார்கள் என்பதற்காக ஆவணம் இருக்கின்றது. அவர்களின் பெயர்களும் இருக்கின்றன. அவர்களின் ஒளிப்படங்களும் உள்ளன. அவற்றைப் படம் முடிந்தபின் எழுத்து ஓடும்போது அந்த ஆவணங்களை இரஞ்சித் இடம் பெறச் செய்திருப்பார்.
இந்த ஆவணப்படுத்துதல் எப்படிப் பறையர் அரசியலாக இருக்கமுடியும் என்பதே கேள்வி. தங்கலான் ஒரு இடத்தில்.“வருண தர்மத்தை ஏற்றுக்கொண்டு, பண்ணையாருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? அல்லது வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து உரிமையோடு வாழப்போகிறோமா?” என்று இரஞ்சித் நுண்அரசியல் பேசியுள்ளார். மற்றபடி பறையர் அரசியலை எங்கும் பேசவில்லை.
தங்கலான் அப்பா தங்கம் எடுக்கப்போய்ப் பௌத்தத் தேவதையால் தடுக்கப்படுகிறார். என் நிலம்,. என் மக்களுக்குரியது. என் மண்ணைத் தோண்டி வளங்களை எடுக்கக்கூடாது என்றே தேவதை கூறுகிறாள். அவளைத் தங்கலான் அப்பா கத்தியால் குத்திக் கொலை செய்கிறார். தங்கலானும் வெள்ளைக்காரனுக்காகத் தங்கம் தோண்டச் செல்லும்போது அதே தேவதை தடுக்கிறாள்.
தங்கலான் தேவதையைக் கொலை செய்து தங்கம் தோண்டுகிறான் என்பதிலிருந்து வளங்கள் சுரண்டப்படுவதைத் தேவதை தடுக்க…. தேவதைகள் கொலை செய்யப்படுவது தொடர்கதை என்பதை வலியுறுத்தியே இக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் படம் நீளம், தொய்வாக இருக்கிறது என்பது மசாலா படங்களுக்குப் பொருந்தும். தங்கலான் போன்ற ஆவணப்படங்களுக்குப் பொருத்திப் பார்ப்பது விவேகம் இல்லை.
திரைப்படத்தின் முதல் பகுதி வடஆற்காடு குடியாத்தம் பகுதியில் நடைபெறுகின்றது. இடைவேளைக்கு முன்பு தங்கலான் சிலர் கோலார் தங்க வயலுக்குச் செல்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு தங்கலான் மற்றும் அவரின் உறவினர்களை அனைவரும் கோலார் செல்கிறார்கள். தங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுகின்றார்கள்.
அங்கே நடக்கும் கொடுமைகள், உரிமை இழப்பு போன்றவற்றைக் கோலார் தங்க வயலைவிட்டு வேறு களத்தில் கதையை எப்படி நகர்த்தமுடியும்? படம் நாடகத்தன்மையாக இருக்கவில்லை. உயர்ந்த தொழில்நுட்பத்தோடு, தேர்ந்த ஒளிப்பதிவோடும், கதாபாத்திரங்கள் அனைவரும் உயிரைக் கொடுத்து நடித்தது எப்படி நாடகத் தன்மையைப் பெறும். வசனங்கள் குறைவு. உணர்ச்சிகள் வெளிப்பாடுகள்தான் அதிகம்.
பெண்கள் சட்டை அணிந்துகொண்டு மார்பகத்தைக் கையில் ஏந்திக்கொண்டு, ‘இறுக்கமாக இருக்குதுல்ல… மொல பெரிசா இருக்குதுல்ல…’ என்று உரையாடி, பெண்கள் அனைவரும் ‘அன்னகிளி… மினுக்கி… மினுக்கி…’ என்று பரவசம் பொங்க நடனம் ஆடுவது பெண்களை ஆபாசப்படுத்துவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. காலம்காலமாகக் கீழ்ச்சாதி பெண்கள், தீண்டத்தகாத பெண்கள் மேல் சட்டை அணியும் வழக்கமில்லை. முந்தானையால் மார்பகத்தை மறைந்துகொள்ளலாம். ஆதிக்கச்சாதியினர் வந்தால் மார்பகத்தை மறைத்திருக்கும் முந்தானையை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
முந்தானையை இடுப்பில் சுற்றிக்கொள்ளவில்லை என்றால் ’முலை வரி’ வசூல் செய்யப்பட்டது. சட்டை போட்டுக் கொண்ட பெண்களின் முலைகள் அறுக்கப்பட்டன’ என்பதுதான் 1825 – 1875ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ‘தோள்சீலைக் கலகம்’ என்பதாகும். 1875இல்தான் பிரிட்டிஷ் அரசு ‘பெண்கள் மேலாடை என்னும் குப்பாயம் அணிந்துகொள்ளலாம்’ என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்தியாவுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் சட்டை போட்டுக் கொண்டு வந்தால்தான் அவர்கள் ‘சட்டைக்காரன்’ என்றும் பெண்கள் ‘சட்டைக்காரி’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு அறியாமல் சட்டை போட்டுக்கொண்ட பெண்களின் கொண்டாட்டத்தை இரசிக்கலாம்… உணர்ந்துகொள்ளமுடியாது.
சீயான் விக்ரம் உயிரைக் கொடுத்து நடி என்று வேலை வாங்கியவர் இயக்குநர் ரஞ்சித். அவர் எப்படி விக்ரமின் உழைப்பை வீணாக்குவார் என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. இரஞ்சித்தை மட்டம் தட்ட விக்ரம் நடிப்பை உயர்த்திப் பிடிப்பதை எதிர்மறைக் கருத்தியலாளர்கள் கையாளுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சீயான் விக்ரம் மட்டுமல்ல, திரைப்படத்தில் நடித்த அத்தனைப்பேரும் உயிரைக்கொடுத்துத்தான் நடித்துள்ளார்கள். திரைக்கு வெளியே ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், உதவி இயக்குநர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், உடை அலங்காரம் செய்பவர்கள், காட்சிக்குத் தேவையான 3 கிலோமீட்டருக்குச் செட் போட்டவர், ஒப்பனைக் கலைஞர்கள் என எல்லாரும் உயிரைக் கொடுத்துத்தான் பணியாற்றியுள்ளனர் என்பதையும் எதிர்மறை கருத்துகொண்டோர் புரிந்துகொள்ளவேண்டும்.
தங்கலான் திரைப்படம் அல்ல. இஃது ஓர் ஆவணப்படம். ஆவணப்படத்தைக் கொஞ்சம் மெருகேற்றி, வசனம், இசை, பாடல், ஒளிப்பதிவு என்று திரைப்படத்திற்கான கூறுகளையும் இணைத்து இரஞ்சித் வரலாற்றை உணரும் வண்ணம் தங்கலான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமான சினிமா பார்முலா படங்களைப் பார்த்துக் கைதட்டி இரசிப்பவர்களுக்கு மீண்டும் சொல்ல விரும்புவது, தங்கலான் திரைப்படம் அல்ல… ஆவணப்படம்தான் என்பதை உணர்ந்துகொண்டு படம் பார்க்கச் செல்லலாம். தங்கலான் இரசிப்பதற்காகப் படம் அல்ல… மனிதகுல வரலாற்றில் பூர்வீகக்குடி மக்கள் எப்படி நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு, அடிமைகளாக மாற்றப்பட்டார்கள் என்பதை வலியோடு சொல்வதை உணர்ந்துகொள்ள வேண்டிய படம்.
– நெ.நிலவன்