அடைமழைக்கு நடுவே பெண் ஆசிரியர்களை அழைத்து அவசரத் கூட்டம் அவசியமா? சர்ச்சையில் தஞ்சை ஆட்சியர்!
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு பள்ளி பெண் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப. நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலருமான வா.அண்ணாமலை.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு வெள்ளப் பாதிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பெருமிதம் கொள்கிறோம்.*
தஞ்சை மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு பிரியங்கா பங்கஜம் இஆப அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒன்று இரண்டு மூன்று வகுப்பாசிரியர்களை சந்தித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்துகிறார். 19.10.2024 சனிக்கிழமை அன்று தஞ்சை சங்கீதா மஹாலில் நடைபெற உள்ளது.
கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்ணாசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை எச்சரிக்கை, பள்ளி விடுமுறை நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வெள்ளப் பாதிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
திருமானூர் பாலம் தொடங்கி கல்லணை வரை ஆய்வு செய்ய வேண்டிய பணி மாவட்ட ஆட்சியர் பணி. பள்ளிப் பார்வையில் தேவையற்ற வார்த்தைகளை ஆசிரியர்களிடம் பேசி தந்தி தொலைக்காட்சி, மீடியாக்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.
நான்கு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களை அடுத்த கூட்டத்தில் சந்திக்கிறாராம். தலைமை ஆசிரியர்களை மற்ற பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தி வருகிறார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே மாணவர்களுக்கு மழைக்காக விடுமுறை விடப்பட்ட சமயத்தில் கட்டாயமாக இணைய வகுப்புகள் நடைபெறக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிக்கல்வித்துறை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமாம்.
மாவட்ட ஆட்சியர்களிடம் கல்வித்துறை தாரைவார்க்கப்பட்டு வருகிறதா?
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி உள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளது. நிர்வாகத்திற்கு இயக்குனர்கள் தனித்தனியாக நிர்வகித்து வருகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அவர்களே தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவல் துறையினரை கூட்டம் கூட்டி காவல் துறைக்கு நீங்கள் பயிற்சி கொடுப்பீர்களா?
தஞ்சை மாவட்ட ஆட்சியரைப் பற்றி ஆதாரப்பூர்வமாக பல புகார்களை பட்டியலிட்டு வருகிறார்கள். எங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.
மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை செயல்பாடுகளை தானே கையில் எடுத்துக் கொள்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.
கனிவான வேண்டுகோள்:
*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களும், மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அவர்களும், மதிப்புமிகு கல்வித்துறை இயக்குனர்களும் பள்ளிக்கல்வித்துறையின் தனித்தன்மையினை பாதுகாத்திட வேண்டுகிறோம்.” என்பதாக குறிப்பிடுகிறார்.
-அங்குசம் செய்தி பிரிவு.