கோடிக்கணக்கில் குவிந்து கிடக்கும் TELC திருச்சபையின் சொத்துக்கள் – அபகரிக்கும் கும்பல் பின்னணி என்ன?

0

கோடிக்கணக்கில் குவிந்து கிடக்கும் TELC திருச்சபையின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி…? பின்னணி என்ன?
கும்பகோணம் மகாமகம் குளக்கரை அருகில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்றை, பள்ளி நிர்வாகத்திற்கே தெரியாமல் மோசடியாக சிலர் கூட்டுச் சேர்ந்து விற்றுவிட்டார்கள் என்று பகீர் கிளப்புகிறார், கும்பகோணத்தைச் சேர்ந்த TELC சபைச்சங்க உறுப்பினர் சுகுமாரன்.

TELC சபைச்சங்க உறுப்பினர் சுகுமாரன்.
TELC சபைச்சங்க உறுப்பினர் சுகுமாரன்.

https://businesstrichy.com/the-royal-mahal/

TELC (Tamil Evangelical Lutheran Church) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தமிழகத்திற்கு பரிச்சயமான ஒன்று. இந்தியாவில் முதன்முதலாக அச்சுப்பிரதியை அறிமுகப்படுத்தியவர்களே இவர்கள்தான் என்பதுதான் இவர்களது தனித்த அடையாளம். தமிழகத்தில் தரங்கம்பாடியை தலைமையகமாகக் கொண்டு, 1718 ஆம் ஆண்டு முதலாக TELC திருச்சபை இயங்கி வருகிறது.

திருச்சியில் இயங்கிவரும் ஜோசப் கண் மருத்துவமனை இந்த திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருச்சபைக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் பல நூற்றுக்கணக்கான தேவாலயங்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரி, மருத்துவமனைகள், தொழிற்பயிற்சி பள்ளி, பாலர் பள்ளிகள், மாணவ,மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இதன் வழியே, ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விச் சேவையை வழங்கி வருகிறார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகிப்பதற்கென்றே தனிச்சிறப்பான சட்டத்திட்டங்களையும் கொண்டிருக்கிறது. இதன்படி, பேராயரின் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை சங்கம் ஒன்று செயல்படுகிறது. மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய பேராயர்களை தேர்வு செய்தும் வருகிறார்கள்.

இந்த திருச்சபையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளுள் ஒன்றுதான், கும்பகோணம் விடிவெள்ளி தொடக்கப்பள்ளி. 4452 சதுர அடி நிலப்பரப்பில், மகாமகம் குளக்கரைக்கு அருகே அமைந்திருக்கிறது இந்த தொடக்கப்பள்ளி. அரசு பதிவேடுகளின்படி, இந்தப் பள்ளி இயங்கிவருகிறது. ஆனால், நடைமுறையில் போதிய மாணவர் சேர்க்கை இன்றி, இங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அனுப்பியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியிலிருந்துதான், பழைய காலத்து கட்டிடமாக இருந்தாலும் பள்ளிக்கட்டிடமாகவே காட்சியளிக்கும் இந்த இடத்தை, காலி மனை என்பதாக குறிப்பிட்டு விற்றிருக்கிறார்கள்.

புகார் கொடுத்திருக்கும் TELC ஜான்சன் சாமுவேல்
புகார் கொடுத்திருக்கும் TELC ஜான்சன் சாமுவேல்

பத்திரப்பதிவு ஆவணங்களின்படி, TELC சார்பில் 13-ஆவது பிஷப் டேனியல் ஜெயராஜ் என்பவர் TELC இன் சொத்து அதிகாரி என்பதாக ஜெ.ஜான்சாமுவேல் என்பவரை நியமிப்பதாக கடித எண்:1281 இன்படி 21.01.2022 என்ற தேதியில் லெட்டர் பேடில் கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

இந்த லெட்டர்பேடு கடிதத்தை ஆவணமாக ஏற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்டுள்ளபடி TELC இன் சொத்து அதிகாரியாக ஜெ.ஜான்சாமுவேல் என்பவரையும் பதிவுத்துறை அங்கீகரித்திருக்கிறது. மேலும், 2024 ஆம் வருடம் ஏப்ரல் 04 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா கடிச்சம்பாடியைச் சேர்ந்த சாமிநாதன் உடையார் மகன் சக்தி என்பவருக்கு TELC இன் சொத்துக்கள் குறித்து அதிகாரம் அளித்து அவரை பவர் ஏஜெண்ட் என்பதாக பதிவுத்துறை ஆவணங்களின்படியே அறிவிக்கிறார் ஜெ.ஜான்சாமுவேல் .

4452 சதுர அடி பரப்பு கொண்ட அந்த குறிப்பிட்ட TELC இன் சொத்துக்கான பவர் ஏஜெண்டான சக்தி என்பவர், 2024 ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி சாலிகிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு பத்திரப்பதிவு ஆவண எண்: 2038/2024 இன்படி, வெறும் 17,81,200 ரூபாய்க்கு கிரையம் பேசி விற்றுவிடுகிறார்.

தற்போது, இடத்தை விலைக்கு வாங்கிய சாலிகிராமத்தை சேர்ந்த ரவியும், பவர் ஏஜெண்டான சக்தி என்பவரும் சேர்ந்து பள்ளியை இழுத்து மூடி பூட்டுப் போட்டிருக்கிறார்கள்.

கும்பகோணம் சக்தி காட்டிய ஆதாரம்
கும்பகோணம் சக்தி காட்டிய ஆதாரம்

“முதலில் 13-ஆவது பிஷப் டேனியல் ஜெயராஜ் கையெழுத்துப் போட்டதாக சொல்லி பதிவுத்துறையில் சமர்ப்பித்திருக்கும் ஆவணமே மோசடியானது. அது எனது கையெழுத்தே இல்லை என்று சம்பந்தபட்ட டேனியல் ஜெயராஜே போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அடுத்து, TELC சார்பில் சொத்து அதிகாரியாக தன்னை பிஷப் நியமித்திருக்கிறார் என்று ஒரு லெட்டர் பேடில் கொடுத்த கடிதத்தை சொத்து தொடர்பான உரிமையியல் ஆவணமாக எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது. அடுத்து, இப்பொழுதும் பள்ளிக்கட்டிடமாக இருக்கும் அந்த இடத்தை காலி மனை என்பதாக பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் கள ஆய்வுக்கூட செய்யாமல் எப்படி பத்திரம் பதிவு செய்தார்கள். அடுத்து, கும்பகோணத்தில் மிக முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அந்த இடத்தை வெறும் 17 இலட்சம் சொச்சத்துக்கு விற்றிருப்பதாக பதிவு செய்திருக்கிறார்கள். பதிவுத்துறையின் ஒத்துழைப்போடு இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். TELC சொத்தை மீட்க வேண்டும். ” என்கிறார், சுகுமாரன்.

TELC சொத்து பத்திரப்பதிவு ஆவணங்கள் (2)
TELC சொத்து பத்திரப்பதிவு ஆவணங்கள் (2)

இந்த மோசடி விவகாரம் தொடர்பாக TELC திருச்சபையின் சார்பாக புகார் அளித்திருக்கும் பாஸ்டர் ஜான்சன் சாமுவேலிடம் பேசினோம். “இந்த விவகாரத்தில் எல்லாமே இல்லீகல்தான். நூறு வருடமாக இந்த பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 2023- ஜூலையில் இங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலில் சென்றுவிட்டார். நிர்வாகம் சார்பில் புதிய தலைமையாசிரியரை நியமிக்கவில்லை. ஒரே ஆசிரியரால் பள்ளியை சமாளிக்க முடியவில்லை.

எனவே, பள்ளியில் இருந்த 10 பிள்ளைகளை பக்கத்து பள்ளிக்கு மாற்றிவிட்டோம். அந்த ஒரு ஆசிரியரையும் டெபுடேசனில் வேறு பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். இந்த கல்வியாண்டில் இந்த சிக்கலை சரிசெய்து மாணவர் சேர்க்கையை தொடங்க திட்டமிருந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சினையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

முதலில், இவ்வளவு பெரிய கட்டிடங்கள் இருக்கும் இந்த இடத்தை காலி மனை என்று பதிவு செய்திருக்கிறார்கள். அடுத்து பள்ளி இருப்பது காசி விஸ்வநாதன் தெருவில். ஆனால், ஆவணங்களில் பக்கத்து தெருவான பிச்சை பிராமண தெரு என்பதாக காட்டியிருக்கிறார்கள்.

TELC சொத்து பத்திரப்பதிவு ஆவணங்கள் (2)
TELC சொத்து பத்திரப்பதிவு ஆவணங்கள் (2)

திருச்சபைக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம். விற்பதற்கு அல்ல. அப்படி விற்பதாக இருந்தாலும், திருச்சபை நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும். அந்த முடிவை,அனைத்து சர்ச்சுகளிலும் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அறிவிப்பு செய்தாக வேண்டும். அடுத்து, TELC திருச்சபையின் சொத்துக்களை விற்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கிறது. 2017 –இல் பதிவுத்துறை தலைவரே அனைத்து பதிவாளர்களுக்கும் அனுப்பி வைத்த சுற்றறிக்கை அமலில் இருக்கிறது.

இதனையெல்லாம் மீறித்தான், இந்த மோசடியை நடத்தியிருக்கிறார்கள். மிக முக்கியமாக, கும்பகோணம் -1 சார்பதிவாளர் ஷோபனா என்பவரை விடுமுறையில் அனுப்பிவிட்டு, வேறு எங்கிருந்தோ சக்திபாலன் என்பவரை கொண்டுவந்து இந்த ஆவணங்களை உருவாக்கியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு ஆவணங்களையுமே சக்திபாலன் என்ற சார்பதிவாளர்தான் அதுவும் வழக்கமான சார்பதிவாளர் ஷோபனா விடுமுறையில் சென்ற நாளாக பார்த்து அந்த நாளில் பதிவு செய்திருக்கிறார். இந்த விசயத்தை மாவட்டப்பதிவாளர் ராஜராஜேஸ்வரியின் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறோம். ” என்கிறார், பாஸ்டர் ஜான்சன்சாமுவேல்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

TELC - விடிவெள்ளி துவக்க பள்ளி
TELC – விடிவெள்ளி துவக்க பள்ளி

பவர் ஏஜெண்டாக இருந்து சாலிகிராமம் ரவி என்பவருக்கு சொத்தை கிரயம் செய்து கொடுத்த, கும்பகோணத்தை சேர்ந்த சக்தி என்பவரிடம் பேசினோம். “கும்பகோணத்தில் சக்திவேல் ஜவுளி என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறேன். நடந்துகிட்டு இருந்த ஸ்கூலை மூடிவிட்டேன் என்கிறார்கள். பள்ளியைக் காணோம்னு நியூஸ் போடுறாங்க. நீங்களே விசாரித்து பாருங்கள், ஸ்கூல் நடந்ததா இல்லையானு. இந்த குறிப்பிட்ட இடத்தை அவங்க தேவைக்கு விற்பனை செய்வதுன்னு அப்பவே முடிவு பன்னிட்டாங்க. TELC சொத்தை விக்கனும்னா அதுக்குனு சில விதிமுறைகள் இருக்கு.

அதன்படி, 2015 இலேயே மார்ட்டின் என்பவர் பிஷப்பா இருந்தப்பவே முடிவு எடுத்துட்டாங்க. நான்தான் அந்த இடத்தை குடவுனா பயன்படுத்த வாடகைக்கு எடுத்திருந்தேன். அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். பத்துவருஷமாக வாடகை கட்டிட்டு வரேன். இப்போ, எழுதி கொடுத்திருக்காங்க. அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை, நிர்வாகம் மாறும். அதனால, இப்போ மாத்தி பேசுறாங்க. இதுக்கு முன்ன இருந்த பிஷப் டேனியல் ஜெயராஜ் மேல் நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்குது.

நான் பணம் கொடுத்ததுக்கு எல்லாமே ஆதாரம் இருக்கு. இல்லைனு சொல்ல சொல்லுங்க. நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். சட்டப்படி சந்திப்போம். இப்பவும் ஒன்னும் கெட்டுவிடவில்லை. இதுவரைக்கும் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க. இடத்தை விட்டுட்டு போயிடுறேன். ” என்கிறார், சக்தி.

மூடப்பட்ட TELC - விடிவெள்ளி துவக்க பள்ளி
மூடப்பட்ட TELC – விடிவெள்ளி துவக்க பள்ளி

சக்தியின் குற்றச்சாட்டு குறித்து, 13-வது பேராயர் டேனியல் ஜெயராஜிடம் பேசினோம். “அது நான் போட்ட கையெழுத்தே இல்லை. அந்த ஜான் சாமுவேல் மோசடியானவர். அவர்மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. போலீசிடமும் தெரிவித்து விட்டேன். நான் பணம் வாங்கினேன் என்று இப்போது என்னையும் அவதூறு செய்கிறார்கள். அதில் உண்மை இல்லை.” என மறுக்கிறார், அவர்.

TELC திருச்சபை நிர்வாகத்தில் 9 வருடங்களாக செயலராகவும், 4 வருடங்கள் நிர்வாக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்ட அனுபவமுள்ள ED சார்லஸிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “இந்தப் பிரச்சினையை நானும் கேள்விபட்டேன். நான் நிர்வாகத்தில் இருந்த சமயத்திலும் இதேபோல சில மோசடிகள் அரங்கேறின. குறிப்பாக, பட்டுக்கோட்டை, கொடைக்கானல், சாலிகிராமம், பரமக்குடி, விடையூர், பொள்ளாச்சி, போத்தனூர், விழுப்புரம் போன்ற இடங்களில் திருச்சபைக்குச் சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கில் சிலர் மோசடிகளில் ஈடுபட்டார்கள். இதே ஜான்சாமுவேலும், இப்போது இறந்துவிட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்துகொண்டு அப்போதும் போர்ஜரி கையெழுத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டார்.

வாங்கவோ - விற்கவோ முடியாது மூடப்பட்ட TELC - விடிவெள்ளி துவக்க பள்ளி
வாங்கவோ – விற்கவோ முடியாது மூடப்பட்ட TELC – விடிவெள்ளி துவக்க பள்ளி

எங்களது திருச்சபையின் வளர்புறம் பள்ளி உள்ளிட்டு பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியவர்தான் இந்த ஜான்சாமுவேல். அப்போதே, நான் கையெழுத்துப் போட்டதாக ஒரு ஆவணத்தை பதிவுத்துறையில் சமர்ப்பித்திருந்தார்கள். என்மீதே எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்திருந்தார்கள்.

நான் கெயெழுத்துப் போட்டதாக அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆவணத்தில், 10 வரியில் 12 எழுத்துப்பிழைகள் இருந்தது. அதை வைத்தே பதிவாளரிடம் கேள்வி எழுப்பினேன். இவ்வளவு எழுத்துப்பிழைகளுடன் இருப்பதை வைத்தே, இது போலி ஆவணம் என்பதாக உங்களால் யூகிக்க முடியவில்லையா, என்று? மேலும், எனது கையெழுத்தை ஸ்கேன் செய்து ஒட்ட வைத்திருந்தார்கள்.

இதுபோன்று திருச்சபையின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பவர்களின் செயலை எதிர்கொள்வதற்காகவே, “சொத்து மீட்புக்குழு” என்ற குழுவை ஏற்படுத்தி செயல்பட்டோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பல இடங்களில் சொத்துக்களை மீட்டிருக்கிறோம். அதுபோல, இப்போது இருக்கும் நிர்வாகமும் சரியான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு திருச்சபையின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.” என்பதாக தெரிவிக்கிறார், ED சார்லஸ்.

தலித் கிருஸ்தவர்கள் தேசிய பேரவையின் மாநில தலைவர் மற்றும் தேசிய ஆலோசகருமான சார்லஸ்
தலித் கிருஸ்தவர்கள் தேசிய பேரவையின் மாநில தலைவர் மற்றும் தேசிய ஆலோசகருமான சார்லஸ்

”பேராயர் தேர்தலே பெரும் பஞ்சாயத்துக்களுக்கு மத்தியில்தான் நடைபெற்றிருக்கிறது. 13-வது பேராயர் பதவிக்காலம் முடிந்தும் ஓராண்டு நீட்டித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்க, ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் பொறுப்பில் சில காலம் நிர்வாகம் இருந்தது. பின்னர், அவரது தலைமையில் 14-வது பேராயர் தேர்வு செய்யப்பட்டு தற்போது நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

திருச்சபையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் இன்றி நான்கு மாநிலங்களிலும் சொத்துக்கள் இருப்பதாலும், நூற்றக்கணக்கான பள்ளிகளும் இயங்கி வருவதாலும், மிக முக்கியமாக அவை அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என்பதால் பணியிடங்களை நிரப்புவதில் பதவிக்காலத்தில் இருக்கும் பேராயர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு பணியில் அமர்த்துகின்றனர்.

சில இடங்களில், அந்த காலத்தில் பதவியில் இருக்கும் பேராயருக்கு தெரிந்தோ அல்லது அவருக்குத் தெரியாமலோ திருச்சபைக்கு சொந்தமான இடத்தை ஒருவருக்கு குத்தகைக்கு விடுவது அல்லது விலை பேசுவது என்பதை செய்கின்றனர். அடுத்த நிர்வாகம் மாறும்பொழுது, அவர்கள் எடுத்த முடிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று புதியதாக பொறுப்புக்கு வரும் பேராயர்கள் மற்றும் நிர்வாகிகள் மறுப்பதும் அதுவே சிக்கலுக்கு வழிகோலுவதாகவும் இருக்கிறது.” என்பதாக தெரிவிக்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத திருச்சபையைச் சேர்ந்த சிலர்.

மூடப்பட்ட TELC - விடிவெள்ளி துவக்க பள்ளி
மூடப்பட்ட TELC – விடிவெள்ளி துவக்க பள்ளி

இந்தப்பிரச்சினையில் தொடர்புடைய ஜான்சாமுவேலை தொடர்புகொள்ளவே முடியவில்லை. பத்திரப்பதிவு ஆவணங்களில் ஜான்சாமுவேலின் தொடர்பு எண் என்பதாக குறிப்பிட்டிருந்த எண்ணில் அழைத்தால், பவர் ஏஜெண்டான சக்தி என்பவர் பேசுகிறார். ஜான் சாமுவேலின் எண் என்பதாக சக்தி கொடுத்த எண்ணில் அழைத்துப் பேசினால், மகேஸ் மூர்த்தி என்பவர் பேசுகிறார்.

”ஜான்சாமுவேலின் நெருங்கிய நண்பர்தான், என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்” என்கிறார். ”அந்த இடத்தை எனது நண்பர் ரவி என்பவர்தான் வாங்கியிருக்கிறார். தெரியாத்தனமாக மாட்டிக்கொண்டோம் ” என்கிறார். விளக்கம் பெறுவதற்காக அங்குசம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தால், பதிலுக்கு ”திருச்சபை நிர்வாகத்தில் பேசினீர்களா? இதை அவர்களிடம் கேட்டீர்களா?” என்று எடக்கு மடக்காக கேள்வி கேட்கிறார், மகேஸ் மூர்த்தி.

தற்போது திருச்சபை பொறுப்பில் இருக்கும் 14-ஆவது பேராயரை தொடர்பு கொள்வதற்கு அங்குசம் சார்பில் நீண்ட முயற்சிகளை எடுத்தோம். பேராயரின் சார்பில், போர்டு சேர்மன் ஆண்ட்ரூஸ் ரூபன் உங்களிடம் பேசுவார் என்று பதிலளித்தார்கள். கடைசிவரை அவரும் நம்மை தொடர்புகொள்ளவில்லை.

TELC - 14வது பிஷப்கிறிஸ்டியன் சாம்ராஜு
TELC – 14வது பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜு

அங்குசம் நடத்திய விசாரணையிலிருந்து, TELC திருச்சபையின் கோடிக்கணக்கிலான சொத்துக்களை அபகரிப்பதற்கென்றே திருச்சபையின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்பதும்; கும்பகோணம் சக்தியிடம் இடத்தை வாங்கித்தருவதாக வாக்களித்து தரகராக செயல்பட்ட நபர் உள்ளிட்டு இதற்கு நிர்வாகத்தில் இருக்கும் சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதும்; திருச்சபையின் பேராயர் உள்ளிட்டு நிர்வாகக் குழுவில் அங்கம் வகிப்பதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது என்பதும்; குறிப்பாக, கடந்த காலத்தில் பேராயர்களாக பணியாற்றியவர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பபட்டிருக்கிறது என்பதும் தெரியவருகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான், இந்த கும்பகோணம் விடிவெள்ளி பள்ளி சர்ச்சை கவனத்திற்கு வந்திருக்கிறது.

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாரம்பரியமான திருச்சபை என்பதோடு, நான்கு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களை நடத்தி கல்விச் சேவையாற்றிவரும் திருச்சபை என்பதையும் கருத்திற்கொண்டு, கோடிக்கணக்கிலான இந்த திருச்சபையின் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்பதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு தனிக்கவனம் கொடுத்து ஆவண செய்ய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!

– ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.