அங்குசம் பார்வையில் ‘டென் ஹவர்ஸ்’[ Ten Hours ]
தயாரிப்பு : ’டுவின் ஸ்டுடியோஸ்’ லதா பாலு, துர்க்காயினி வினோத், எழுத்து & இயக்கம் : இளையராஜா கலியபெருமாள். நடிகர்-நடிகைகள் : சிபிராஜ், கஜராஜ், ஜீவாரவி, ராஜ் அய்யப்பா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், திலீபன், தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா, உதயா. ஒளிப்பதிவு : ஜெய் கார்த்திக், இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டிங் : லாரன்ஸ் கிஷோர், ஆர்ட் டைரக்டர் : அருண்சங்கர் துரை, ஸ்டண்ட் : சக்தி சரவணன், புரொடக்சன் கண்ட்ரோலர்: பாரதி ராஜா, தமிழ்நாடு ரிலீஸ் : ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில், பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டிலிருந்து இரவு 8 மணிக்கு ஐம்பொன் டிராவல்ஸ் பஸ் ஒன்று கோவைக்குக் கிளம்புகிறது. அதே நேரத்தில் சேலம் ஆத்தூர் காவல்நிலையத்திற்கு பதறியடித்து ஓடிவரும் இருவர் தங்களது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை என புகார் கொடுக்க வருகின்றனர். அந்தப் பெற்றோரின் புகாரின் பேரில் வழக்கை விசாரிக்க களமிறங்குகிறார் ஐயப்பனுக்கு விரதம் இருந்து மறுநாள் சபரிமலைக்கு கிளம்பத் தயாராகும் இன்ஸ்பெக்டர் கேஸ்ட்ரோ [ சிபிராஜ் ]. இவருக்குத் துணையாக சப்-இன்ஸ்பெக்டர் மணி [ கஜராஜ் ]யும் இணைகிறார்.
அந்த இளம்பெண்ணைத் தேடி நூல் பிடித்தது போல் விசாரணையைத் தீவிரப்படுத்தி, குற்றவாளியை நெருங்கும் போது, “சார் ஐம்பொன் டிராவல்ஸ் பஸ்ஸில் ஒரு இளம்பெண்ணை டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க சார், பஸ் இப்ப கள்ளக்குறிச்சி டோல்கேட்டுக்கு அஞ்சு கிலோ மீட்டர் முன்னால போய்க்கிட்டிருக்கு , பஸ் நம்பர் இதான் சார்” என்ற ஒரு ஆணின் செல்போன் அலறல் குரல் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு வருகிறது.
உடனே போலீஸ் படையை உஷார்படுத்தி அந்த ஆம்னி பஸ்ஸை மடக்கி, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வருகிறார் கேஸ்ட்ரோ. பஸ்ஸின் உள்ளே போய்ப்பார்த்தால், இளம் வயது ஆண் ஒருவன் கழுத்தில் ரத்தக்காயத்துடன் இறந்துகிடக்கிறான். கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க பஸ்ஸின் டிரைவர், கண்டக்டர் அதில் பயணித்தவர் என அனைவரையும் ஸ்டேஷனுக்குள் உட்கார வைத்து ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
அதன் பின் விடிவதற்குள் நடக்கும் ’ஹை ஸ்பீட்’ சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் பிரிலியண்ட் ஸ்கிரிப்ட் தான் இந்த ‘டென் ஹவர்ஸ்’ .
படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்திலேயே, இரண்டு மணி நேரம் ஓடும் ‘டென் ஹவர்ஸ்’ கதைக்குள் நம்மை டிராவல் பண்ணத் தயாராக்கிவிடுகிறார் டைரக்டர் இளையராஜா கலியபெருமாள். இடைவேளை வரை, பல்வேறு கோணங்களில் விசாரணை, ஒவ்வொரு அடெம்ப்ட்டிலும் ஒருவன் சிக்குவது, அதிலிருந்து விலகுவது, அதன் பின் வேறொரு ஆங்கிளில் விசாரணை, அப்போது இன்னொரு புது பூகம்பம், ஐம்பொன் பஸ்ஸில் டார்ச்சர் செய்யப்பட்டதாக போன் பண்ணியவனே கொலையாகிக் கிடப்பதால், அப்படின்னா அந்த இளம் பெண் யார்?அவள் எங்கே? என்பதைத் தெரிந்து கொள்ள சென்னை வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரை கேஸ்ட்ரோ கம்யூனிகேட் பண்ணுவது என பக்கா பிரிலியண்ட் போலீஸை கண் முன் நிறுத்துதற்காக நல்ல மனம் கொண்ட புத்திசாலி & உண்மையான போலீஸ் டீமின் உதவியுடன் திரைக்கதையை உருவாக்கி இந்த ‘டென் ஹவர்ஸ்’ ஐ ‘கோல்டன் ஹவர்ஸாக்கி’விட்டார் டைரக்டர் இளையராஜா கலியபெருமாள். இன்ஸ்பெக்டர் சிபிராஜின் கேரக்டருக்கு கேஸ்ட்ரோ என பெயர் வைத்ததற்காகவே இளையராஜாவைப் பாராட்டலாம்.
முழுப்படமும் இரவு நேரத்தில் நடந்தாலும் எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு வராத அளவுக்கு நேர்த்தியாக திரைக்கதையைக் கொண்டு போனதுடன், பஸ் பயணிகள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் இருக்கும் போது சொல்லும் ஃப்ளாஷ்பேக்குகளைக் கூட இரவில் நடப்பது போல் மேட்ச் பண்ணி சபாஷ் வாங்குகிறார் இளையராஜா கலியபெருமாள். என்ன ஒண்ணு இவ்வளவு பெரிய சம்பவங்கள் நடக்கும் போது சேலம் மாவட்ட போலீஸ் மேலதிகாரிகள் யாரும் கேஸ்ட்ரோவை கேள்வி கேட்காதது மட்டும் தான் லாஜிக் ஓட்டை.
சிபிராஜின் சினிமா கேரியரில் இதான் பெஸ்ட் என்றே சொல்லலாம். சபரிமலைக்குக் கிளம்பும் நேரத்தில் வரிசைகட்டி நிற்கும் வழக்குச் சிக்கல்களை ரொம்பவும் டேக்டிக்கலாக கேண்டில் பண்ணி, அதே நேரம் அவ்வப்போது நெற்றில் திருநீறு பூசிக் கொண்டே விசாரணையில் அடுத்த ஸ்டெப் வைப்பது என நன்றாகவே ஸ்கோர் பண்ணிவிட்டார் கேஸ்ட்ரோ [எ] சிபிராஜ். சில நேரங்களில் அவருக்குள் இருக்கும் தடுமாற்ற பெர்ஃபாமென்ஸும் எட்டிப் பார்த்துவிடுகிறது. மற்றபடி சிபிராஜ் சபாஷ்ராஜ் போட வைக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிபிராஜுக்கு அடுத்து படத்தின் செகண்ட் ஹீரோ என்றால் சப்-இன்ஸ்பெக்டர் மணியாக வரும் கஜராஜ் [ நம்ம டைரக்டர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா ] தான். “அண்ணே” என சிபிராஜ் இவரை அழைக்கும் போதெல்லாம், “உங்களால முடியும் சார்” என நம்பிக்கையூட்டுவது, க்ளைமாக்ஸில் கஜராஜின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, “அண்ணே… உங்களுக்கு என்ன தோணுதோ, அதை செய்யுங்க” என சிபிராஜ் சொல்லும் போது நல்ல போலீசுக்குரிய சிலிரிப்பை வெளிப்படுத்தும் சீனில் கலக்கிட்டார் கஜராஜ்.
’டென் ஹவர்ஸ்’-க்கு மிகப்பெரிய சப்போர்ட்டர்ஸ் என்றால் கேமராமேன் ஜெய்கார்த்திக், மியூஸிக் டைரக்டர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் ஆகிய மூவர் கூட்டணி தான். அதிலும் லாரன்ஸ் கிஷோரின் ‘ஷார்ப் & க்ரிப்’ எடிட்டிங் படத்தின் ’டெம்ப்ட்’க்கு க்யாரண்டி தருகிறது.
நம்ம விஸ்வகுருவின் ‘வோட்டிங் மிஷின்’ திருட்டு ஆட்டத்தை க்ளைமாக்ஸில் போட்டுத் தாக்கியதற்காகவே இந்த ‘டென் ஹவர்ஸ்’-ஐ பார்க்கலாம், ரசிக்கலாம், பாராட்டலாம்.
— மதுரை மாறன.