“நாங்கதான் பெரிய ரவுடி – நாங்க தான் கெத்து” ஆட்டோ டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள்!
நாங்கதான் பெரிய ரவுடி – நாங்க தான் கெத்து – மது அருந்த சைடிஷ்க்காக ரயிலை தவற விட்டு, ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது .மது போதையில் யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் கோவில்பட்டியில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காளை முத்து என்ற காளைபாண்டி. (வயது 50). இவர் கூடுதல் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். வியாழக்கிழமை இரவு கூடுதல் பேருந்து நிலையத்திற்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு ஆட்டோ உடன் சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் கண்மாய் பகுதியில் காளை பாண்டி பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காளை பாண்டியை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தலை பகுதியில் பலத்த காயம் அடைந்து இருந்த காரணத்தினால் காளை பாண்டி சுயநினைவினை இழந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்த புறக்காவல் நிலைய பகுதியில் சட்டையில் ரத்தகறையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்த போலீசார், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்த தேவராஜ், (வயது 26), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் (வயது 21), முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ராமலட்சுமணன் (வயது 29) என்பது தெரியவந்தது.

மேலும் கோவில்பட்டியில் வியாழக்கிழமை இரவு மது போதையில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் ஒருவரை அடித்து கொலை செய்து விட்டதாக 3 பேர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை கைது செய்தது மட்டுமின்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த 3 பேரும் தாக்கியது ஆட்டோ டிரைவர் காளை பாண்டியை என்பதும், அவர் இறந்து விட்டதாக நினைத்து 3 பேரும் தூத்துக்குடிக்கு சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் வியாழக்கிழமை இரவு விருதுநகருக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து இரயில் மூலம் கிளம்பியுள்ளனர். புறப்படுவதற்கு முன்பு 3 பேரும் மது அருந்தியது மட்டுமின்றி ரெயிலில் சாப்பிடுவதற்காக மது பாட்டில்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சைடிஸ் வாங்க மறந்து விட்டனர். ரெயிலில் ஏறி 3 பேரும் பயணித்துள்ளனர்.
கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நின்றதும் மது அருந்துவதற்கு சைடிஸ் வாங்க 3 பேரும் கீழ இறங்கி உள்ளனர். சைடிஸ் வாங்கி வருவதற்குள் ரயில் கிளம்பி சென்றுள்ளது. இதனால் ரெயிலை தவறவிட்ட மூன்று பேரும் பேருந்தில் செல்ல முடிவெடுத்து ரெயில்வே நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது கூடுதல் பேருந்து நிலையத்தில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த காளைபாண்டியை பார்த்த மூன்று பேரும் மது அருந்துவதற்கு ஒதுக்குப்புறமாக ஏதாவது இடம் இருக்கிறதா ? என்று கேட்டுள்ளனர். அருகில் அத்தை கொண்டான் கண்மாய் கரை பகுதியில் மது அருந்தலாம் என்று காளை பாண்டியன் கூறியுள்ளார்.
இதையடுத்து 3 பேரும் தங்களை அங்கு விடும்படியும் பணம் தருவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காளை பாண்டி ஆட்டோவில் மூன்று பேரையும் அத்தை கொண்டான் கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மூன்று பேரும் அங்கு அமர்ந்து மது அருந்துள்ளனர். அப்போது காளை பாண்டியனையும் மது அருந்த சொல்லி உள்ளனர். தன்னிடம் ஏற்கனவே மது பாட்டில் இருப்பதாக கூறிய காளை பாண்டி அவர்களுடன் அமர்ந்து தான் வைத்திருந்த மது பாட்டில் வைத்து மது அருந்தியுள்ளார்.
நான்கு பேரும் நல்ல மதுபோதையில் இருந்த நிலையில் காளை பாண்டி சீக்கிரம் கிளம்புங்கள் போகலாம், தன்னுடைய ஆட்டோ வாடகை பணத்தையும் தாருங்கள் என்று கேட்டதாக தெரிகிறது.
நாங்க பெரிய ரவுடி எங்களிடமே வாடகை கேட்பதா என்று மூன்று பேரும் கூற, நானும் இங்கே பெரிய ரவுடிதான் இந்த வேலையெல்லாம் வேறு எங்காவது வச்சுக்கணும் என்று காளை பாண்டி கூற, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று பேரும் ஆட்டோ டிரைவர் காளை பாண்டியை மது பாட்டில்கள், கீழே கிடந்த கற்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காளை பாண்டி கீழே விழுந்து மயக்கம் அடைந்து விடவே, அவர் இறந்து விட்டதாக நினைத்து மூன்று பேரும் அங்கிருந்து கிளம்பி உள்ளனர்.
அங்கு நின்ற ஆட்டோவை 3 பேரும் எடுத்துக்கொண்டு மது போதையில் எங்கு செல்கின்றோம் என்று தெரியாமல் இளையரசனேந்தல் சாலையில் சென்றுள்ளனர். ஆட்டோ சிறிது தூரம் சென்ற நிலையில் பெட்ரோல் இல்லை என்பதால் இளையரசனேந்தல் சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு , அப்பகுதியில் இரவில் படுத்து உறங்கி உள்ளனர். காலையில் எழுந்து போதை தெளிந்தும் பேருந்தில் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மது அருந்த சைடிஸுக்காக ரயிலைத் தவற விட்டு யார் பெரிய ரவுடி என்று கெத்து காட்டுவதாக நினைத்து மது போதையில் ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி.