பணிநீக்க உத்தரவின் வழியே பாடம் கற்பித்த அரசு !
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 23 பேரை நிரந்தர பணிநீக்கம் செய்து அதிரடி காட்டியிருக்கிறது, பள்ளிக்கல்வித்துறை. அதுபோலவே, கஞ்சா வியாபாரிகளுடன் நெருக்கமாக இருந்ததோடு மட்டுமின்றி வழக்கில் இருந்து தப்பவைக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீசு இன்ஸ்பெக்டர் ஒருவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் விவகாரமும் கவனத்தை பெற்றிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே, அடுத்தடுத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினரின் முதற்கட்ட விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதை உறுதி செய்யப்பட்ட நேர்வுகளில் சம்பந்தபட்ட ஆசிரியர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் 256 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதாகவும்; போலீசார் மற்றும் துறை ரீதியான விசாரணையில் குற்றச்சம்பவம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்திருந்தார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதனை தொடர்ந்து, தற்போது முதற்கட்டமாக 26 பேருக்கு எதிரான பாலியல் புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், 23 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த பின்னணியில்தான், குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 பேரை நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது, பள்ளிக்கல்வித்துறை.
திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் போலீசு நிலையத்தின் ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியசாமி, கடந்த 2020-22 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் போலீசு ஆய்வாளராக பணியாற்றி வந்த சமயத்தில், 400 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட கஞ்சா கடத்தல் கும்பலுடன் நட்புபாராட்டி, அவர்களை வழக்கிலிருந்து தப்புவிக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நிரந்தர பணிநீக்க தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார்.
அரசியல்வாதிகளிடத்திலாவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களை சந்தித்தாக வேண்டுமென்ற அச்சம் நிச்சயம் இருக்கும். பதவியும் பவிசும் அடுத்த தேர்தல் வரைக்கும்தான் என்ற யதார்த்தத்தை அறிந்தவர்கள். ஆனால், அரசு உத்தியோகத்தில் பியூனாக வந்தமர்ந்துவிட்டாலே, 58 வயசு வரைக்கும் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற ஆணவமும் சேர்ந்துவிடுகிறது. பியூன் தொடங்கி, உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகள் வரையில் மக்களுக்கு கட்டுபட்டவா்கள் என்பதை மறந்து, மிஞ்சி போனால் சஸ்பென்சன் செய்வார்கள் இல்லையா, இடமாற்றம் செய்வார்கள் அவ்வளவுதானே? என்ற தைரியத்தில் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் வசூல் வேட்டை முதற்கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் துணிச்சலை இயல்பாகவே தந்தும் விடுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த அசட்டு துணிச்சலை அசைத்து பார்க்கும் வகையில்தான், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ், ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அதன் தொடர்ச்சியாக, தற்போது இன்ஸ்பெக்டர் பெரியசாமி பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அரசு ஊழியராக பணியில் சேர்ந்து, தனது ஓய்வுக்காலம் வரையில் யாரும் அசைத்துவிட முடியாது என்றிருந்த அவர்களது இருமாப்பை தகர்த்திருக்கிறது, இந்த இருவகையான பணிநீக்க நடவடிக்கைகள்.