இந்த தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ! கலகலப்பாக்கிய கே.என். நேரு !
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு மார்ச்-30 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்திற்கான 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
திருச்சி மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார்.
இந்த ஆண்டு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளே கே.என். நேரு வேட்புமணு தாக்கல் செய்தார். வருவாய் கோட்டாட்சியர் சாலை தவ வளவனிடம் தன்னுடைய வேட்புமனுவை அமைச்சர் கே. என்.நேரு வழங்கினார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கே.என். நேருவை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
100 மீட்டருக்கு உள்ளாக வேட்பாளருடன் ஐந்து பேர் தான் வர வேண்டும் என்கிற தேர்தல் விதி உள்ளதை அடுத்த அமைச்சர் கே என் நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தொழிலதிபர் ரவிச்சந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தேர்தலில் யாரும் எங்கும் போட்டியிடுவதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வகையில் விஜய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். களத்தில் மக்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். மக்களுடைய ஆதரவு முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு தான் உள்ளது, என்பது எங்களின் முழு நம்பிக்கையாக உள்ளது.
பயத்தின் காரணமாக கூட விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பொழுதும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றது. எனவே, அந்த தொகுதி தி.மு.க.வின் பக்கம் இருக்கும் என்கிற முழு நம்பிக்கையோடு நாங்கள் தேர்தல் பணி ஆற்றுவோம்.
தேர்தல் அறிக்கையில் மகளிருக்காண திட்டங்கள், பொதுமக்களுக்கான திட்டங்கள் விவசாயிகளுக்கான திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்கள்.
திமுகவின் தேர்தல் கதாநாயகனாக தேர்தல் அறிக்கை உள்ளது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மிக சிறந்த ஆட்சியை உருவாக்க நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.” என்றார்.
இந்த நிகழ்வில் அருண் நேரு எம்.பி ,மேயர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட பொருளாளர் துரைராஜ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ரெக்ஸ், மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் அகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் , வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி , ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர் மோகன் தாஸ், இளங்கோ, காஜாமலை விஜய், கமால் முஸ்தபா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.