‘படே ஹழ்ரத்’ என்று திருச்சி மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டவரும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக பெரும் அளவில் பொருளாதாரத்தை செலவு செய்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஹழ்ரத் சையத் முர்த்தஜா.
மேலும் சையத் முர்த்தஜாவுடன் இணைந்து திருச்சியைச் சேர்ந்த வி.எஸ்.முகம்மது இப்ராஹிம், உறையூர் ஆர்மோனியம் காதர்பாட்சா, வரகனேரி முகம்மது சுல்தான் (நேதாஜியின் கொரில்லா படை பிரிவு சிப்பாய்), டாக்டர் அப்துல் சுப்ஹான், எஸ்.ஏ.முகம்மது சாஹிப், எம்.எம்.பாஜான், எம்.ஷேக் பாவா, பாலக்கரை அப்துல் ரஹ்மான், குலாம் காதர்,தங்கமீரான் ராவுத்தர், முர்ஷா ராவுத்தர், ஷேக் தாவூது ஸாஹிப், பெரிய சௌராஷ்ட்ரா தெரு அப்துல் அஜீஜ், அப்துல் காதர், கே.எம். ஹமீத் கான் போன்று பலரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கணக்கிடமுடியா பங்களிப்பு செய்யுதுள்ளனர்.
மேலும் ஹழ்ரத் சையத் முர்த்தஜாவின் முக்கால் நூற்றாண்டு கால சுதந்திரப் போராட்ட வரலாறு மிக நீண்டது. இன்றுள்ள ஹஜ் கமிட்டி அமைக்கப்பட காரணமாய் இருந்தவர் இவரே, இரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு அமைக்கப்பட காரணமாய் இருந்தவர் இவரே, பயணிகள் வசதி மற்றும் நிர்வாக வசதிக்காக திருச்சி இரயில்வே கோட்டம் இங்கு வருவதற்கு உழைத்துள்ளார் (முதலில் நாகப்பட்டணத்தில் இருந்ததாக வரலாறு).
1912ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தந்த, அந்தக்காலங்களில் பெருமைமிக்க கௌரவமான “ஹானரபிள்” பட்டத்தை கௌரவத்திற்கு ஆசைப்பட்டு பொதுவாழ்க்கைக்கு வரவில்லை என்று கூறி மறுத்தவர்.
இந்திய அளவில் கல்விக்கு புகழ்பெற்ற நகரங்களில் திருச்சி முக்கிய இடத்தில் உள்ளது. இதற்கான விதைகளில் ஒன்று ஹழ்ரத் சையத் முர்த்தஜா அவர்களாகும். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சி விதை இவராலேயே திருச்சியில் விதைக்கப்பட்டது. 1905ல் இஸ்லாமிய கல்வி மாநாடு ஹழ்ரத் தலைமையில் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 15,000 வசூல் செய்யப்பட்டு “இஸ்லாமிய கல்வி நிறுவனம்” டிரஸ்ட் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.
பின்னாளில் வள்ளல் காஜாமியான் அவர்கள் ஜமால் முகம்மது கல்லூரியை தொடங்குவதற்கும் ஹழ்ரத் பெருந்தகை ஒரு உந்துதலாய் இருந்தார். ஆனால் அதற்கு முன்னரே ஹழ்ரத் பெருந்தகை தனிப்பட்ட முறையில், 1887-&88 காலத்தில் “ஹழ்ரத் ஸம்ஸ் பீரான்” (இன்றைய சமஸ்பிரான்) தெருவில் தொடங்கப்பட்ட “இஸ்லாமியா பள்ளி”யானது நாளடைவில் இடநெருக்கடி காரணமான 1900களில் தற்போதுள்ள பாலக்கரை மரக்கடை பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
பின்னர் எதிர்காலத்தில் வியாபார நோக்கமோ, வாரிசு சண்டைகளோ வந்து கல்வி கற்பித்தல் என்ற உன்னதமான நோக்கத்தில் குறைவு வந்துவிடக்கூடாது என்பதால் பள்ளியை 1918ல் அரசிடமே ஒப்படைத்துவிடுகிறார். பள்ளியை அரசிடம் ஒப்படைத்து, மேலும் பள்ளி இயங்கி வந்த இடம் முழுவதையும் அரசிடமே ஒப்படைத்துவிடுகிறார். இந்த இடத்தின் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? சுமார் 38 ஏக்கர். திருச்சியின் இதயம் போன்ற இந்த இடத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். இந்த இடமானது திருச்சியில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், வரலாறு தெரிய வாய்ப்புகள் குறைவு. தென்வடலாக கிழக்கில் சப் ஜெயில் ரோடு, தென்வடலாக மேற்கில் “பாலக்கரை – மரக்கடை” ரோடு, கிழமேற்காக “காந்திசந்தை – மரக்கடை” ரோடு என ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்த இடத்தின் பரப்பளவு 38 ஏக்கர்.
இந்த இடத்தில் தான் “அரசினர் சையது முர்த்துஜா பள்ளி” மட்டுமல்ல மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், வேளாண் சந்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளான்சந்தை நுண்ணறிவு மேம்பாட்டு மையம், மாநகராட்சி நுண் உரசெயலாக்க மையம், மாநகராட்சி வாகனங்கள் பழுதுபார்க்கும் பணிமனை(Depot), சிந்தாமணி கூட்டுறவு எரிவாயுக் கிடங்கு (Gas Godown), கிட்டத்தட்ட 300 குடியிருப்புகள் கொண்ட தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், அரசினர் மஜ்லிசுல் உலமா தொடக்கப்பள்ளி, மாநகராட்சி மருந்தகம், அரசு கால்நடை மருத்துவமனை, மகளிர் தனிச்சிறை, காவலர் குடியிருப்புகள், காந்தி சந்தை காவல் நிலையம், காவல்துறை இணை ஆணையர் அலுவலகங்கள் என இத்துணை அரசு அலுவலகங்கள் உள்ளன. பள்ளிக்கூடத்திற்கு மட்டுமல்ல, திருச்சி மாநகரின் கட்டமைப்பு, வளர்ச்சிக்கும் அந்த இடம் முக்கிய பங்காற்றி வருகிறது.
மேலும், சிங்காரத் தோப்பு நுழைவு பகுதியில் உள்ள யானைக்குளம் பகுதியில் உள்ள பூம்புகார், தொலைபேசி இணைப்பகம் உள்ள கட்டிடம், தமிழ்ச்சங்க கட்டிடம் அனைத்துமே ஹழ்ரத் பெருந்தகையால் அரசிற்கு பிரதிபலன் ஏதுமின்றி வழங்கப்பட்டவைகளே. சமூக நல்லிணக்கம் என்று வரும்போது, இந்தியாவே திரும்பிப்பார்த்து வியக்கும் ஒரு முன்னுதாரண நகரம் திருச்சியாகும். இந்த சமூக நல்லிணக்கத்திற்கு விதையிட்டவரும் ஹழ்ரத் சையது முர்த்தஜா அவர்களே. இந்திய விடுதலைப்போரில் முக்கிய பங்காற்றியது முஸ்லிம்களின் கிலாபத் இயக்கம். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1919ல் தொடங்கப்பட்டது. இந்த கிலாபத் இயக்கத்திற்கு நிதி திரட்ட அண்ணல் காந்தியடிகளும் அவருக்கு உறுதுணையாக சுதந்திரப்போராட்ட தியாகி ஷௌகத் அலி அவர்களும் 1920ல் நிதி திரட்டும் பொதுக்கூட்டத்திற்கு திருச்சிக்கு வருகின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் வைத்து ஹழ்ரத் சையது முர்த்தஜா அவர்கள் 20,000 ரூபாய் (அன்றைய காலகட்டத்தில் ஒரு பவுன் விலை 20 ரூபாய் 58 காசுகள் என்பதை நினைவிற் கொள்க.) நிதியைத் திரட்டித் தருகிறார்கள்.
நூற்றாண்டை கடந்த கிலாபத் இயக்க பொதுக் கூட்டம் மற்றும் அண்ணல் காந்தியடிகள், தியாகி ஷௌகத்அலியை திருச்சி இரயில்வே ஜங்சனில் 10,000 பேர் வழியனுப்பிய இந்த வரலாற்று நிகழ்வு திருச்சியின் சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டது. அண்ணல் காந்தியடிகளும் இந்த நெகிழ்வான நிகழ்வை அடிக்கடி நினைவு கூர்ந்து திருச்சி மக்களின் சமூக நல்லிணக்கத்தை நினைத்து சிலாகிப்பார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவார். இதனாலேயே மூன்று தலைமுறை தாண்டி நான்காவது தலைமுறையாக திருச்சியானது சமூக நல்லி ணக்க அடையாளமாக இருக்கிறது.