கன்னட ஹீரோவுக்கு தன்னம்பிக்கை கொடுத்த தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.!
‘விர்த்தி கிரியேஷன்ஸ்’ & ’சதீஷ் பிக்சர் ஹவுஸ்’ பேனரில் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் தயாரித்து கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும் பிப்ரவரி மாதம் ரிலீசாகப் போகும் படம் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’. கன்னடத்தில் 13 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் சதீஷ் நினாசம், முதல்முறையாக தமிழில் ‘அசோகா’ மூலம் எண்ட்ரியாகிறார். சதீஷுக்கு ஜோடியாக ‘காந்தாரா’ புகழ் ஹீரோயின் சப்தமி கெளடா நடிக்கிறார். இவர்களுடன் மற்ற கேரக்டர்களில் கன்னட நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் டைரக்ஷன் : வினோத் தொண்ட்லே, ஒளிப்பதிவு : லவித், இசை : பூர்ணசந்திர தேஜஸ்வி, தமிழ்ப் பதிப்பின் புரமோஷன் பி.ஆர்.ஓ.வாக ‘எஸ்-2’ சதீஷ் பணியாற்றுகிறார்.
படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் 2026 ஜனவரி 21-ஆம் தேதி மதியம் நடந்தது. இதில் படத்தின் தயாரிப்பாளர் வர்தன் ஹரி, ஹீரோ சதீஷ் நினாசம், ஹீரோயின் சப்தமி கெளடா, ஒளிப்பதிவாளர் லவித், இணைத் தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

“இது தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞனின் போராட்டத்தைப் பேசும் படம். தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி இங்கு வந்துள்ளோம். மீடியாக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என சுருக்கமாகப் பேசினார் தயாரிப்பாளர் வர்தன் ஹரி.
சப்தமி கெளடா, “90-களில் நடக்கும் இக்கதையில் அம்பிகா என்ற கேரக்டரில் நடித்திருக்கேன். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மக்களிடம் நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்”.
சதீஷ் நினாசம், “முதல்முறையாக தமிழ்நாட்டில் எனக்கு இது மிகப்பெரிய நிகழ்வு. நான் கன்னட ஹீரோவாக இருந்தாலும் தமிழில் என்னை யாருக்கும் தெரியாது. இயற்கையின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டு மக்களிடம் வந்துள்ளேன். பத்து ஆண்டுகளாக கன்னடத்தில் நடித்தாலும் பதிமூன்று படங்கள் தான் நடித்துள்ளேன். ஏன்னா எனக்கான கதை செட்டானால் தான் நடிப்பேன். என்ன்னால் வருசத்துக்கு மூன்று—நான்கு படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்ப கஷ்டம்.
இந்தப்படம் கூட தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் நடக்கும் கதை என்பதால், குறிப்பாக சாம்ராஜ்நகர் பகுதியில் நடக்கிறது. அந்த மண்ணின் நிறம், மனிதர்களின் நிறம், என்னுடைய நிறம் எல்லாமே இங்கு இருப்பதைப் போல் ஒத்துப் போகிறது. அங்குள்ள மக்கள் பேச்சில்கூட தமிழ் கலந்திருக்கும். தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஒலி தான் வேறுபாடே தவிர, உணர்வு ஒன்று தான். இந்தப் படம் பேசும் அரசியல் புதுசு. பொதுவாக எல்லா சினிமாக்களிலுமே கண்டிப்பாக அரசியல் இருக்கும். அரசியல் இல்லாமல் சினிமா எடுக்க முடியாது.
தமிழர்களை நம்பி இங்கு வந்துள்ளேன். இங்கே படத்தை எப்படி புரமோட் பண்ணுவது, யாரை அணுகுவது என ரொம்பவே யோசனையிலும் கவலையிலும் இருந்தேன். அப்ப தான் பி.ஆர்.ஓ. நண்பர் சதீஷ் என்னைச் சந்தித்து, “வாங்க சார் பார்த்துக்கலாம், சிறப்பா புரமோஷன் பண்ணிரலாம். என்னை நம்பி வாங்க சார், நான் பார்த்துக்குறேன்” என தன்னம்பிக்கை கொடுத்தார். சதீஷின் தன்னம்பிக்கையும் தமிழர்களின் மீதுள்ள பெரும் நம்பிக்கையும் தான் நான் சென்னை வரக்காரணம். எனவே இங்கு அரங்கத்தில் நிரம்பியிருக்கும் மீடியா நண்பர்கள், புதியவனான எனக்கு ஆதாவு தாருங்கள், படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என முழுக்க முழுக்க தமிழில் பேசினார் சதீஷ் நினாசம். இடையிடையே சில தமிழ் வார்த்தைகளை தொகுப்பாளினி கவிதாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அதன் பின் பேசினார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.