தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவனை குப்பை அள்ள சொல்லி அவமானப்படுத்திய ஆசிரியர் – எக்விடாஸ் குருகுல பள்ளி சர்ச்சை !
திருச்சி ஆயில் மில் சாலையில் இயங்கிவரும் எக்விடாஸ் குருகுல பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராக பணியாற்றக்கூடிய ராஜா என்பவர் மாணவர்கள் இடையே பாகுபாட்டினை உண்டாக்கக் கூடிய விதத்தில் நடந்து கொண்டதாகவும்; தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை திட்டமிட்டு கட்டாயப்படுத்தி குப்பைகளை அள்ள வைத்துதாகவும்; உளவியல் ரீதியாக மாணவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தியதாகவும்; மாவட்ட அளவிலான போட்டிகளில் திட்டமிட்டு ஒரு சில மாணவர்களை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்நிலையில், இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அரியமங்கலம் போலீசு ஆய்வாளர் ரமேஷ் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துள்ளார். மாணவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைக்கு பள்ளி நிர்வாகம் வர மறுத்துவிட்ட நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும்; குற்றச்சாட்டு உறுதிபடுத்தும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும்; மிக முக்கியமாக, பள்ளிக்கு சற்றும் தொடர்பில்லாத இடத்தில் விளையாட்டு மைதானம் அமைந்திருப்பதையும்; வாகன நெரிசலான சாலையை கடந்துதான் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல முடியும் என்பதோடு, பள்ளியின் விளையாட்டு மைதானத்துக்கு மிக அருகாமையிலேயே பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் குடவுன் செயல்படுவதையும் சுட்டிக்காட்டி இவற்றையெல்லாம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பள்ளி நிர்வாகத்துக்கு பிறப்பிக்க வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
உரிய நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எடுக்க தவறும்பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நடத்த போவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறிவித்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜி.கே மோகன் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.