பள்ளிகள் இணைப்பு என்பதற்கும் பள்ளிகளை மூடுவதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை ! – ஐபெட்டோ வா.அண்ணாமலை !
ஒரே பள்ளி வளாகத்தில் நடுநிலை பள்ளியும் தொடக்கப்பள்ளியும் தனித்தனியாக இயங்கி வருமேயானால், இரண்டு பள்ளிகளையும் இணைப்பதான பள்ளிக்கல்வித்துறையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும் ஐபெட்டோ அகில இந்திய பொதுச்செயலருமான வா.அண்ணாமலை.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் பூ.அ.நரேஷ் அவர்களை அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் 29.10.2024 அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கையினை முற்றிலும் கைவிட வேண்டுமென வலியுறுத்தினார்.
ஒரே பள்ளி வளாகத்தில் நடுநிலை பள்ளியும் தொடக்கப்பள்ளியும் தனித்தனியாக இயங்கி வருமேயானால் இரண்டு பள்ளிகளையும் இணைத்து உயர்நிலைப் பள்ளியாக உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று இயக்குனர் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் பல தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நாங்கள் இழந்து ஒரு உயர்நிலைப் பள்ளி உருவாக்குவதால் என்ன பயன்?.. என்று கருத்து தெரிவித்தார்கள்.
குறிப்பாக கும்பகோணம் மாநகராட்சியில் ஐந்து பள்ளிகளை இணைக்கும் முடிவில் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று கணக்கெடுத்து பார்ப்போமேயானால் சென்னை மாநகராட்சி வேலூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடவேண்டிய அபாயம் நேரிடும் என்பதை ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் இயக்குனர் அவர்களிடம் தெரிவித்தார்.
இத்தனை ஆண்டு காலமாக முந்தைய ஆட்சிக்காலத்திலும் சரி திராவிட மாடல் ஆட்சிக் காலத்திலும் சரி, இதுவரை இணைப்பு கொள்கையினை எந்தத் தொடக்கக் கல்வி இயக்குனரும் வலியுறுத்தவில்லை. காரணம் ஆளும் அரசின் மீது பள்ளிகளை மூடுகிறார்கள் என்ற கடுமையான விமர்சனம் வெளியில் வரும்.
நூறு பள்ளிகளை இணைத்தால் கூட நூறு பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறையும் என்றார். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காலிப் பணியிடங்கள் நிறைய இருக்கிறது. அவர்களுக்கு மாறுதலில் செல்ல வாய்ப்பு அளிக்கலாம்!. என்று கூறினார். அந்த பேச்சுக்கே இடமில்லை!. என்று அகில இந்திய செயலாளர் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
திராவிட மாடல் அரசு அமைந்ததற்குப் பிறகு புதிய தொடக்கப் பள்ளிகள் எதையும் தொடங்கவில்லை. தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை. உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்படவில்லை.
சுமார் 30 கிராமங்களில் பள்ளிகளே இல்லாமல் அந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் வெளியூரில் சென்று படித்து வருகிறார்கள். இந்த நிலைமையில் திராவிட மாடல் அரசு காமராஜர் அவர்கள் காலத்தில் தொடங்கி நடத்தப்பட்டு வரக்கூடிய பள்ளிகளை இணைப்பு என்ற பெயரால் மூடுகிற அந்த எண்ணம் அரசுக்கு தீராத பழியினை கொண்டு வந்து சேர்க்கும்… என்பதையும் அகில இந்திய செயலாளர் அவர்கள் இயக்குனர் அவர்களிடம் தெளிவுபடுத்தினார்கள்.
இந்தக் கொள்கை முடிவு தேசிய கல்விக் கொள்கையில் இருந்து வெளிவரக்கூடிய முடிவாகும். தேசியக் கல்விக் கொள்கையினை மறைமுகமாக அமல்படுத்துவது போன்ற தோற்றத்தினை உருவாக்கும்.
தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு அய்யாக்கண்ணு அவர்கள் பள்ளிகள் வாரியாக சென்று பள்ளிகளை இணைப்பதற்கு எழுதி கொடுங்கள் என்று சொல்லி வருகிறார்.
மேயர், மாநகராட்சி உறுப்பினர் ஆகியோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் கொடுத்து வருகிறார்கள். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்கள்.
காமராஜர் மாதிரி தொடக்கப்பள்ளியினை முதலில் மூடுவதாக அந்த மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்து சென்றுள்ளார். கடுமையான எதிர்ப்புக் கனல் வெளியில் வந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு அய்யாக்கண்ணு அவர்கள் தொடக்கக் கல்வித்துறையில் கலவரத்தினை தஞ்சாவூரில் அடிக்கடி ஏற்படுத்தி வருகிறார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 1, 2,3 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு 4,5 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு கூட்டம் நடத்தி சந்திக்க இருப்பதாக வாய்ஸ் மெசேஜ் கொடுத்து பிரச்சனையை ஏற்படுத்தியவரும் இவர்தான். பிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இப்போது பள்ளிகளை மூடுவதற்கான அபாய சங்கை ஊதி வருகிறார்.
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் இப்பிரச்சினையினை நாங்கள் தமிழ்நாடு அரசின் பார்வைக்கும் மீடியாக்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லாமல் இணைப்பு முயற்சிகளை தடுத்து நிறுத்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பத்துக்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளியாக இருந்தாலும் ஐந்து வகுப்புகள்தான் நடத்துகிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கை ஒன்பது இருக்கும் பள்ளிகளிலும் ஐந்து வகுப்புகள் தான் நடைபெற்று வருகிறது. மிகவும் குறைவாக இருக்கக்கூடிய பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறார்கள். அதற்கு பெரிதாக எதிர்ப்பு இல்லை. தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்து அந்த பள்ளியின் வகுப்புகளை நடத்துவதற்கு தீர்வு காண வேண்டுமாய் மீண்டும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மகிழ்வுடன் வரவேற்று பாராட்டுகிறோம்.
புலனங்கள் வழியாக அனுப்பப்படுகிற கோரிக்கை விண்ணப்பங்களை கூட உடன் பரிசீலனை செய்து தீர்வு கண்டுவரும் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை பெரிதும் பாராட்டி மகிழ்கின்றோம்!” என்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.