“போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத அவலம்”ஒப்புக்கு சப்பாணியாக ஒரு பாலம்

0

“போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத அவலம்”ஒப்புக்கு சப்பாணியாக ஒரு பாலம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர் ந்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பதி மற்றும் வடமாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் தஞ்சாவூர் மாவட்டம், கீழணை என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கரை, கொள்ளிடம் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

கடந்த 1836ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணைக் கரை, கொள்ளிடம் பாலம் குறைந்த அளவு தண்ணீரைத் தேக்கும் வசதியோடு அப்போதைய ஆங்கில அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் மேல் பகுதியில் பிரிட்டிஷார் தங்கள் குதிரை வாகனங் களை ஓட்டிச் செல்வதற்காக சாலையை அமைத்து பயன்படுத்தி வந்தனர். அந்த சாலை தான் பின்னர் தார்ச் சாலையாக மாறி இன்றளவும் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட இந்த பாலத்தின் ஸ்தரத்தன்மை மிகவும் மோசமாக இருப்பதால் இந்தப் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அரசுக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அணைக்கரை பழைய பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. திண்டிவனத்தில் இருந்து தஞ்சாவூர் வரை நான்கு வழிசாலை அகலப்படுத்தும் பணிகளும் ஆமை வேகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அணைக்கரை பாலத்துக்கும் புதிய பாலம் கட்டப்படுகிறது.

தா.பழூர் கொள்ளிடம் பாலத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்
தா.பழூர் கொள்ளிடம் பாலத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்

 

- Advertisement -

- Advertisement -

ஏற்கனவே அணைக்கரை பழைய பாலம் மிகவும் பழுதான நிலையில் இருந்து வருவதால் இந்த பாலத்துக்கு மாற்று பாலமாக கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் விருத்தாசலம் வழியாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் ஒன்றை அப்போதைய முதல்வர் கருணாநிதி நிர்மாணித்தார்.

இந்த பாலம் திறக்கப்பட்டால் அரியலூர் மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று கருணாநிதி குறிப்பிட்டார். ஆனால் இந்த பாலமே வேஸ்ட் என்று பின்னர் ஆட்சியமைத்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விமர்சனம் செய்தார். ஜெயலலிதா கூறியதை உறுதி செய்வது போல் பாலம் திறக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் போதிய போக்குவரத்து இல்லாததால் இந்த பாலம் இன்று வரை ஒப்புக்கு சப்பாணியாகவே காட்சியளிக்கிறது.
தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருவையாறு, ஜெயங்கொண் டம், அரியலூர், புதுச்சேரி, கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், விருத்தாசலம், காட்டு மன்னார்குடி போன்ற அரசு போக்குவரத்து கழக கிளை பேருந்துகள் அணைக்கரை பாலம் வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் வேலூர், காஞ்சிபுரம், சென்னை கோயம்பேடு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளியூர் கிளை பேருந்துகளும் அணைக்கரை பாலம் வழியாக இயக்கப்படுகின்றன.

ஒப்புக்கு சப்பாணி நீலத்தநல்லூர்- தா.பழூர் கொள்ளிடம் பாலம்
4 bismi svs

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தில் கடுமையான பழுது ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. என்றாலும் மாற்றுப்பாதையில் கும்பகோணம், தா.பழூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம் அல்லது சேத்தியாத்தோப்பு தடத்தில் வாகனங்கள் சென்றன. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை இந்த பாதையில் வாகனங்கள் சென்றன.

இந்நிலையில் திமுக அரசு அமைந்ததும் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த முக்கிய வர்த்தக சங்கத்தினர், அணைக்கரை பாலம் வழியாக பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும் சரக்கு வாகனங்களை தா.பழூர் தடத்தில் இயக்க வேண்டும் என்றும் திமுக முக்கிய புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். அரசு கொறடா, கும்பகோணம் எம்,எல்.ஏ உள்ளிட்டோர் அப்போதைய போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்தவருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன் விளைவாக தென் மாவட்டங்களிலிருந்து மாற்றுப்பாதை தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளும் அணைக்கரை தடத்தில் இயக்க உத்தரவிடப்பட்டது. அணைக்கரை பாலம் பழுது… எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்த எச்சரிக்கைகளை மீறி அணைக்கரை தடத்தில் வாகனங்கள் இன்றளவும் இயக்கப்படுகின்றன.

தா.பழூர், ஜெயங்கொண்டம் தடத்தில் பேருந்துகள் இயக்கப் பட்டபோது பெரும்பாலான பேருந்துகள் அமைச்சர் சிவசங்கர் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிமடம் ஒன்றிய பகுதி வழியாக சென்றன. 24 மணி நேர போக்குவரத்து சேவை இந்த பகுதிகளுக்கு கிடைத்தது. நள்ளிரவாக இருந்தாலும் வீடு போய் சேரலாம் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு இருந்தது.

அணைக்கரை பாலத்தில் மாற்றுப்பாதை அறிவிப்பு பேனர்.. மற்றும் போலீஸ்.

ஆனால் தென்மாவட்ட பேருந்துகள் யாவுமே தற்போது அணைக்கரை பாலத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் வசதி இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் குன்னம் போன்ற தொகுதிகளை சேர்ந்த எந்த ஊருக்கும் இரவு 10 மணிக்கு மேல் பேருந்து வசதி கிடையாது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கை கண்ட மாவட்ட நிர்வாகம் வெள்ளம் வடியும்வரை அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து சேவை இல்லை என்று அறிவித்துள்ளது.

இதைக்கண்ட அரியலூர் மாவட்ட பொதுமக்கள், “உங்களுக்கு அவசரம் என்றால் மட்டும் எங்கள் பகுதி வழியாக பேருந்துகளை இயக்குவதா…. ஒப்புக்கு சப்பாணியாக எங்கள் பகுதியை கருதாமல் 50 சதவீத பேருந்துகளை ரெகுலராக இந்த தடத்தில் இயக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அரியலூர் சட்டநாதன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.