திருச்சியில் கட்டணமில்லா திருக்குறள் வகுப்புகள் … யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் !
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னெடுப்பில், மாவட்டம் தோறும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் குறித்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், ”திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி, இலால்குடி, முசிறி என மூன்றுபகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒருகுழு என 03 குழுக்கள் அமைக்கப்பெற்றுள்ளன. திருச்சிராப்பள்ளி வாசவி வித்யாலயா பள்ளி பள்ளி மற்றும் முசிறியிலுள்ள எஸ்.பி பதின்மப் பள்ளி வகுப்புகள் ஆகஸ்ட் திங்கள் முதல் வாரம் முதல் இக்குழுக்களைக்கொண்டு இலால்குடியிலுள்ள நெஸ்ட் பதின்மப் ஆகியவற்றில் திருக்குறள் பயிற்சி நடத்தப்பெறவுள்ளன.
பயிற்சிக்கட்டணம் ஏதுமின்றி நடத்தப்பெறும் இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடத்தப்பெறும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பெற்று நிறைவு நாளன்று பயிற்சி பெற்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிப்பவர்கள் தங்களின் தன்விவரக்குறிப்புடன் ஆதார் அட்டையின் படியினை இணைத்து tamilvalar.try@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக மாவட்டத்திலுள்ள தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், திருச்சிராப்பள்ளி தமிழமைப்புகள் (பதிவுசெய்யப் பெற்றவை, பதிவுசெய்யப் பெறாதவை) அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் மேற்கூறிய அனைவரும் தங்களின் தன்விவரக்குறிப்பினைத் துணை இயக்குநர் அலுவலகம், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு அஞ்சல் வழியோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பெறுகின்றது. திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மாணவ / மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சிபெற்று பயனடையலாம்.” என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.