தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு
தமிழகத்தைச் சேர்ந்த
மேலும் 3 பொருள்களுக்கு
புவிசார் குறியீடு
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அலுவலகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருள்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும்இ பாரம்பரிய பொருள்களைப் போல போலிகள் உருவாவதைக் கட்டுப்படுத்துவம்தான் புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கம் ஆகும்.
ஓரிடத்தில் விளையக்கூடிய அல்லது தயாரிக்கப்படும் பொருள்களின் தரம், அந்த இடத்தின் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இப் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழநி பஞ்சாமிர்தம் உள்பட தமிழத்தைச் சேர்ந்த 55 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.