துறையூர் தனித்தொகுதி தனித்துவிடப்பட்ட தொகுதியா?
“துறையூர் தொகுதி தனித்தொகுதி, தனித்து விடப்பட்ட தொகுதி”என நடந்து முடிந்த சட்டப் பேரவை தொடரில் பேசிய ஆளும் கட்சியை சேர்ந்த துறையூர் தொகுதி எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துறையூரில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்.
அவரது உரையில், ” துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக ஆட்சியில் செய்த பல்வேறு திட்டப் பணிகள் போல் வேறு எந்த கட்சியும் செய்ததில்லை. சட்டசபையில் பேசுகிறபோது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும் . குறிப்பாக துறையூருக்கு காவிரி குடிநீர்; புறவழிச் சாலை; 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் துறையூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை 24 கோடி ரூபாயில் கொண்டு வந்தது; மேலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்தது.
சட்டப்பேரவையில் துறையூருக்கு அரசு கல்லூரியை என்றைக்கு அறிவித்தோமோ, அதே ஆண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை, தற்காலிக கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி உடனடியாக தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கு முன்னாள் அமைச்சர் நேரு, துறையூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆகியோரின் பெரு முயற்சியால் இடத்தை தேர்வு செய்து, அறிவித்த அதே ஆண்டில் சுமார் 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
பச்சமலையில் பழங்குடியின மக்களுக்கு சுமார் 50 வருடங்களாக இல்லாமல் இருந்த கூட்டுறவு கடன் சங்கம் அமைத்துக் கொடுத்தது உள்ளிட்ட இன்னும் பல்வேறு திட்டப்பணிகள் அமைத்துக் கொடுத்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி. நாங்கள் இத்தனையும் செய்துவிட்டு மக்களிடம் ஆதரவு கேட்கிறோம். உங்களைப் போல் வெற்றுப் பேச்சை மட்டும் பேசுபவர்கள் அல்ல” எனப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சிமேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜோஷ்







Comments are closed, but trackbacks and pingbacks are open.