தமிழ்நாடு வாக்காளர்களுக்கு, வணக்கம்.
தமிழ்நாட்டில் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஜனநாயகத் திருவிழா தற்போது களைகட்டிவிட்டது. அனல் பறக்கும் பிரச்சாரம் அனைத்துக் கட்சிகளாலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தற்போது டிஜிட்டல் மீடியா வழியாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டது. நாம் பயன்படுத்தும் அனைத்துச் சமூக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தொடர்பான வீடியோ, மீம்ஸ், AI உதவியுடன் உண்மைக்கு மாறான தகவல்களையும் உண்மையே என்று குழப்பும் பிரச்சாரங்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து நம்மை ஆக்கிரமித்து வருகின்றது.
“PAID NEWS” என்றழைக்கப்படும் விலை கொடுத்து வாங்கப்பட்ட செய்திகள்தாம் நம் மூளையை பெருமளவு ஆக்கிரமித்திருக்கின்றன. உள்ளூர் வாட்சப் குரூப் வரையில் மிகப்பெரிய வலைபின்னலை கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், சில கோடிகளை கொட்டி தன்னோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட கட்சியின் வெற்றிக்காக உழைக்கிறார்கள். பாடுபடுகிறார்கள். வாங்கிய காசுக்கு அவர்கள் கூவிக்கொள்வதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், உண்மை எது? பொய் எது? என்று வாக்காளன் சுயேட்சையான முறையில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடாத அளவுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் வரையில் கலந்துகட்டி குழப்புவதுதான் இங்கே பெரும் தலைவலியாகிறது.
இதற்கான தீர்வு என்பது டிஜிட்டல் மீடியா என்னும் சமூக ஊடகங்களை முழுமையாக நம்பாமல், உண்மையான, தெளிவான செய்தியை அறிந்து கொள்ள நமக்கு எல்லா வகையிலும் பயன்பாடுமிக்கதாக இருப்பது அச்சு ஊடகம் என்று சொல்லப்படுகின்ற நாளிதழ்கள், மற்றும் பருவ இதழ்கள் மட்டுமே.
”அதுதான் எல்லாமே என் வாட்சப்-க்கு வந்து விடுகிறதே. இன்ஸ்டாவில் பார்த்தேனே? சுடச்சுட ஆண்ட்ராய்டு போனிலேயே படித்த ஒன்றை, ஆறிப்போன அச்சு இதழில் ஏன் வாங்கிப்படிக்க வேண்டும்? அதற்காக, எதுக்கு பத்து ரூபாய் காசையும் செலவழிக்க வேண்டும்?” என்பதுதான் நம்மில் பலரும் கொண்டிருக்கும் மனநிலை.
முதல் விசயம், ஆண்ட்ராய்டு கைப்பேசி வழியாக நம்மை வந்து சேரும் தகவல்கள் அனைத்தும் சுருக்கமானவை. நுனிப்புல் மேய்வதைப் போல, தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு அதைப்பற்றி எல்லாமே தெரிந்துவிட்டதைப்போல மாயையில் கடந்துபோக வைப்பவை. இரண்டாவது விசயம், அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம். எந்த செய்திக்கும் யாரும் எப்போதும் பொறுப்பெடுத்துக் கொள்வதே இல்லை. “வாட்சப் குரூப்பில் வந்தது. நல்லா இருந்துச்சு. ஷேர் பன்னேன்” இதைத்தாண்டி அந்த செய்தியின் நம்பகத்தன்மையை நம்மால் உறுதி செய்து கொள்ளவே முடியாது.
ஒரு எளிய உதாரணம். ”ஏதோ ஒரு விபத்தில் சிக்கிய ஒருவரின் மூளை, கண், இருதயம், கல்லீரல் இருக்கிறது. உங்களது உறவினர் யாருக்கேனும் பயன்படலாம். உடனே தொடர்புகொள்ளுங்கள்” என்பது போன்ற வாட்சப் மெசேஜை உங்கள் வாழ்நாளில் எத்தனை முறை திரும்பத்திரும்ப படித்திருப்பீர்கள். அதுவும், இன்றைய ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எல்லாமே நிஜம் போலவே தோன்றச் செய்வதெல்லாம் மிக சாதாரணம்.
அடுத்து, பத்து ரூபாய் காசு கொடுத்து அச்சு இதழை வாங்க வேண்டுமா? என்ற கேள்வி எவ்வளவு அபத்தமானது? ஆண்ட்ராய்டு கைப்பேசி என்ன இலவசத்தில் வந்ததா? அன்றொரு காலத்தில் 2 ஜி.பி. டேட்டாவை வைத்து முழுமையாக ஒரு மாதத்தை ஓட்ட முடிந்த நம்மால், இன்று அதே 2 ஜி.பி. டேட்டே மதியத்திற்குள் முடிந்து போகிறதே? அது எப்படி? தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவுக்கு குறைவில்லாத ரீசார்ஜ் திட்டங்களே இல்லை என்ற நிலை உணர்த்தும் செய்தி என்ன? நாம் ரசித்து பார்க்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் கூட, வியாபார உள்ளடக்கமாகவே மாறி வருவதன் பின்னணி குறித்து என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?
ஒரு வினாடிக்குள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற மனநிலை எப்படிப்பட்டது? அது சாத்தியம்தானா?
இதையெல்லாம்விட, இன்று பரவலாக புழங்கும் AI தொழில்நுட்பத்தில், ஒரு கட்சியின் கூட்டணி தலைவரும், அந்தக் கூட்டணியில் இணைந்த ஒரு கட்சியின் பெண் பொதுச்செயலாளரும் திருமணம் செய்து கொண்டது போலவும்; தாஜ்மகால் முன்பாக ஜோடியாக நிற்பது போலவும் பரப்பப்படும் வீடியோக்களையெல்லாம் பார்த்து ரசிக்கும் மனநிலை எவ்வளவு அருவெறுப்பானது? அசிங்கமானது? இதுதான் வாசிப்பின் இலட்சியமா?
சமூக ஊடகமான டிஜிட்டல் மீடியாவில் நயத்தக்க நாகரிகம் முழுதாக விடைபெற்று அநாகரிகம் கோலோச்சத் தொடங்கிவிட்டது என்பதே உண்மை. டெம்ப்ளேட் செய்தியே போதுமானது என்ற மனநிலையெல்லாம், அச்சு இதழ்களின் தோல்வியை மறைமுகமாகச் சுட்டி காட்டுகின்றன.
அச்சு ஊடகங்களான நாளிதழ்கள், பருவ இதழ்கள் என்பது நம்மிடம் காலகாலத்திற்கும் கையிலிருக்கும் வரலாற்று ஆவணம். செய்தியாளர் – உதவி ஆசிரியர் – பொறுப்பாசிரியர் – ஆசிரியர் என ஒவ்வொரு செய்தியும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படும் நடைமுறையெல்லாம் ஆன்லைன் ஊடகங்களிடம் அறவே இல்லை என்பதே யதார்த்தம்.
இந்த பின்புலத்தில், யாருக்கு நாம் வாக்களிக்கப் போகிறோம் என்பதை நாம் முடிவெடுக்க எந்த தகவலை? எந்த செய்திகளை? நாம் ஆதாரமாக கொள்வது? நம்மைக் குழப்பும் டிஜிட்டல் மீடியா செய்திகளால் மயக்கம் ஏற்படாமல், மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் சிந்தனையிலிருந்து தேர்வு செய்யவேண்டும் என்பதில் வாக்காளர்கள்தான் விழிப்புணர்வோடு இருந்தாக வேண்டும்.
தமிழன்புடன் : ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.