நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு, ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:
நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு, ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:
வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு.
நீங்கள் பல பிரிவு மக்கள் பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை முறையை , அவங்க அரிவாள் பிடித்த முறையை ,அவர்கள் அரிசனனுக்கு சந்தோஷமாய் கூழ் ஊத்திய முறையை , மீசை முறுக்கி வளர்த்த முறையை , சாராயம் குடித்த முறையை , சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று “தேவர் மகன் “என்ற தலைபோடு ஒரு திரைப்படம் எடுத்தது ஏன்?
ஒரு பிரிவு மக்களின் வன்முறையை ஆதிக்கத்தை அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா இல்லை அவர்களின் சாதிய வேல்கம்புகளுக்கு கூர் தீட்டிவிடவா? அல்லது எப்போதும்போல மீசை முறுக்க ஆசைபட்டு பணம் சம்பாதிக்கவா அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா…சொல்கிறேன் கேளுங்கள்
வீடியோ லிங்:
•ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்டார்கள்,
•திருமண சடங்கு விசேச வீடுகளில் ஏன் கோவில்களில் கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமையை ஆடவைத்தது.
•வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிக்கூட வலுகட்டாயமாக பாட வைக்கபட்டாள்.
•எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கபட்டன
சண்டியர்னு பேர் வைத்தா கிருஷ்ணசாமி கோவித்துகொள்வார் என்று அதனால கிட்டிவாசல்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக்கொண்டால் என்ன பண்ணுவது. எவ்வளவு அருவருப்பான ஆணவமான நாகரிகம் இல்லாத பதில். நீங்கள் மன்மதலீலை என்று பெயர் வைத்தற்கா அவர் எதிர்த்தார். நீங்கள் தேவர்மகன் என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே.. ஆனால் அதன் மூலம் வந்த விளைவும் ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று ஒரு ஒடுக்கபட்ட சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில் ..
இன்றைய சூழலில் கிராமப்புற பள்ளிகளில் உலவும் சாதியின் உருவம் உங்களுக்கு தெரியுமா …….பள்ளி பாடபுத்தகங்களில் முதல் அட்டையிலோ இல்லை வேறு பக்கங்களிலோ தலித் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் இருக்குமெனில் அவரது இரு கண்களும் பேனா முனைகளால் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்று……உங்களுக்கு தெரியுமா! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கேள்வி வினாத்தாளில் கேட்டால்கூட அதற்கு பதில் எழுத விரும்பாமல் விட்டுவிட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்று,
• வெண்மனி
• கொடியன்குளம்
• மேலவளவு
• ஆழ்வார்கற்குளம்
• தாமிரபரணி இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள் ஈழத்தில் உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்தீர்கள்
கொலைக்கு கொலைதான் தீர்வா குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபதுபேர் சாக காரணமாக இருந்த விருமாண்டிக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக அதன் சமூக நீதிக்காக அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பனையமாக வைத்து பழிக்கு பழிவாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா?
வீடியோ லிங்:
கடைசியாக திரு. கமல் ஹாசன் அவர்களே ! நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்… உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டீர்கள் அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் , பாதுகாப்பாய் இருப்பதற்கும் சகலகலாவல்லவனும் அவ்வைசண்முகியும் , தசாவதாரமும் போதுமே…
கமல் அவர்களே, உங்களுக்கு திரைக்கதை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எங்கள் வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதரமானது… என்பதை தயவுசெய்து கொஞ்சம் கருத்தில் வையுங்கள்…
இப்படிக்கு, இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும் உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்…
-மாரி செல்வராஜ்”