அங்குசம் பார்வையில் ‘தண்டட்டி’

0

அங்குசம் பார்வையில் ‘தண்டட்டி’

தயாரிப்பு: ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லக்‌ஷ்மண் குமார். டைரக்‌ஷன்: ராம் சங்கையா. நடிகர்—நடிகைகள்: பசுபதி( சுப்பிரமணி), ரோகிணி(தங்கப் பொண்ணு), விவேக் பிரசன்னா( சோ பாண்டி) முகேஷ்( செல்வராசு), தீபா சங்கர்( பொன்னாத்தா), பூவிதா(சின்னாத்தா), ஜானகி(பூவாத்தா) ‘செம்மலர் அன்னம்( விருமாயி) அப்புறம் தண்டட்டி பாட்டிகள். ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி, இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டிங்: சிவா. பி.ஆர்.ஓ. ஏ.ஜான்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

வில்லங்கமான ஆட்களுக்கும் விவகாரமான பிரச்சனைகளுக்கும் பெயர் போன ஊர் கிடாரிப்பட்டி. அந்த ஊரில் எந்தப் பிரச்சனை என்றாலும் போலீசுக்குப் போகாமல் அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். அதையும் மீறி போலீஸ் போனால், யூனிபார்மை உருவி, அண்டர்வேருடன் ஓடவிடும் அடாவடி ஊர். அப்படிப்பட்ட ஊரிலிருந்து செல்வராசு என்ற சிறுவன், தனது அப்பத்தா தங்கப்பொண்ணுவை நாலு நாளா காணல என அழுதபடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான். எங்க ஆத்தாவக் காணல என நான்கு பெண்களும் ஒப்பாரி வைத்தபடி ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். செல்வராசின் அப்பத்தாவும் இந்தப் பெண்களின் ஆத்தாவும் தங்கப்பொண்ணு தான்.

ஸ்டேஷனில் இருக்கும் சக போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, சிறுவனுடன் கிடாரிப்பட்டிக்குச் செல்கிறார் ஏட்டு சுப்பிரமணி(பசுபதி). போகும் வழியிலேயே தங்கப் பொண்ணுவின் தாராள குணத்தையும் பெத்த பிள்ளைகள் மீது வைத்துள்ள பாசத்தால் சொத்துக்களையெல்லாம் எழுதி வைத்த தயாள குணத்தையும் செல்வராசு மூலம் தெரிந்து கொள்கிறார் சுப்பிரமணி. ஊரில் எல்லோரிடமும் விசாரித்துவிட்டு, தேனி பஸ்ஸ்டாண்டில் உட்கார்ந்திருக்கும் போது, தங்கப்பொண்ணுவை( ரோகிணி) பார்க்கிறார் பசுபதி. மயங்கிச் சரிந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க, சுயநினைவு திரும்பாமலேயே இறந்துவிடுகிறார் தங்கப்பொண்ணு.

- Advertisement -

சிறுவன் செல்வராசின் வேண்டுகோளுக்கிணங்க, தங்கப்பொண்ணுவின் உடலுடன் கிடாரிப்பட்டிக்கு மீண்டும் வருகிறார் பசுபதி. பிணத்தைக் குளிப்பாட்டி, நாடிக்கட்டுப் போட்டு, தண்டட்டி பாட்டிகளும் ஊர்ப்பெண்களும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கும் போது, தங்கப்பொண்ணுவின் காதில் கிடந்த தண்டட்டி களவு போகிறது. ஊரே ரணகளமாகிறது. காணாமல் போன தண்டட்டியைக் கண்டுபிடித்தாரா ஏட்டு பசுபதி? என்பதற்கு விடை தான் ‘தண்டட்டி’.

4 bismi svs

அச்சு அசல் தெக்கத்தி கிராமம், அதுவும் தேனி மாவட்ட கிராமத்தை, மண்ணின் நிறம், மனிதர்களின்மனம், இயற்கைக்குணம் எதையும் மறைக்காமல், மாற்றாமல் அப்படியே திரைமொழியாகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம்சங்கையா. இன்னும் சொல்லப் போனால், தெக்கத்தி கிராமம் என்றாலே மல்லுவேட்டி மைனர்கள், வெள்ளை வேட்டி சண்டியர்கள், கிடாமீசை, முறுக்கு மீசை, ஆறடி உயர அருவாள், ரத்தம், ரணகளம் இவற்றையெல்லாம் கண்டிப்பாக காண்பித்தே ஆகவேண்டும் என்ற கோலிவுட் ஃபார்முலாவை தூக்கிக் கடாசிவிட்டு, வெள்ளந்தி மனிதர்களின் குணாதிசயங்களைப் பதிவு செய்த ராம்சங்கையா சபாஷ்யா…

படத்தில் டாப் ஸ்கோரர் லிஸ்டில் முதல் இடத்தில் பசுபதி, இரண்டாம் இடத்தில் தண்டட்டி பாட்டிகள், மூன்றாம் இடத்தில் ரோகிணி ( 30 வருடங்களுக்கு முன் வந்த ‘என் ராசாவின் மனசிலே’ தண்டட்டி ஸ்ரீவித்யாவை நினைவுபடுத்துகிறார்), நான்காம் இடத்தில் சோ பாண்டியாக வரும் விவேக் பிரசன்னா, ஐந்தாம் இடத்தில் செல்வராசாக வரும் முகேஷ், அடுத்தடுத்த இடங்களில் தீபாசங்கர், ஜானகி, செம்மலர் அன்னம், பூவிதா என தங்களுக்கான இடங்களைத் தக்க வைக்கிறார்கள்.

அதிலும் தண்டட்டி பாட்டிகள் ஏழெட்டுப் பேரின் நக்கல், நையாண்டி, ஏகாசியிடம் மாட்டிக் கொண்டு பசுபதி பஞ்சராகும் சீன்கள் அமர்க்களம். “ஏய்..இந்தாரு.. ஒழுங்குமரியாதையா பேசு, இல்லேன்னா அம்புட்டுப் பேரையும் தூக்கி உள்ள போட்ருவேன்” என தண்டட்டி பாட்டிகளை அரட்டி, மிரட்டும் சீன்களில் தங்கம் போல் மின்னுகிறார் பசுபதி. கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ் தான் ’தண்டட்டி’யின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. காமெடிக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் அதை ஸ்கோர் பண்ண டைரக்டர் முயற்சிக்காததால், சில சீன்கள் கொஞ்சம் சலிப்பைத் தருவதையும் சொல்லியே ஆக வேண்டும்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் கண்கள் அப்படியே அந்தக் கிராமத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. பாடலும் சில இடங்களில் பின்னணி இசையும் ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தாலும் சுந்தரமூர்த்தியின் இசையில் குறையொன்றும் இல்லை.

பாம்படம் ( தண்டட்டியை இப்படியும் சொல்வார்கள்) போட்ட அப்பத்தா, அம்மாச்சிகளுடன் வாழ்ந்தவர்கள், பழகியவர்களுக்கு, இப்போதும் மனதில் நிழலாடும் இனிய நினைவுகள் இந்த ‘தண்டட்டி’. அந்த வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு நல்ல புத்தகம்.

–மதுரைமாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.