அங்குசம் பார்வையில் ‘ட்ராமா'( Trauma)
தயாரிப்பு: ‘ டர்ம் புரொடக்சன் ஹவுஸ் ‘ எஸ்.உமாமகேஸ்வரி. எழுதி இயக்கியவர்: தம்பிதுரை மாரியப்பன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், சஞ்சீவ், மாரிமுத்து, ரமா, பிரதீப் கே.விஜயன், நிழல்கள் ரவி, வையாபுரி. ஒளிப்பதிவு: அஜித் ஸ்ரீனிவாசன், இசை: ராஜ் பிரதாப், எடிட்டிங்: முகன்வேல், தமிழ்நாடு ரிலீஸ்: ஆல்பா-3 எண்டெர்டெயின்மென்ட்.பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
கல்யாணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழிந்தும் விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தனது ஆண்மையின்மை தான் என்ற உண்மையை மனைவியிடம் மறைத்து பல டாக்டர்களிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார் பிரசன்னா. டாக்டர் பிரதீப் விஜயன் சில மாத்திரைகளைக் கொடுக்கிறார்.
அந்த மாத்திரைகளை சாந்தினிக்குத் தெரியாமலேயே அவர் குடிக்கும் பாலிலும் ஜூஸிலும் கலந்து கொடுக்கிறார் பிரசன்னா. சில நாட்களிலேயே மாத்திரை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. சாந்தினி கர்ப்பமாகிறார். ஆனால் அவரின் கர்ப்பத்திற்கு காரணம் மாத்திரை இல்லை, வேறொருவன் எனச் சொல்லி பெட்ரூம் வீடியோ ஒன்றை அனுப்பி அதிர்ச்சி கொடுக்கிறான் வில்லன்.
இதன் பின்னணியில் இருக்கும் படுபயங்கரமான திட்டம் என்ன? இதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ ட்ராமா’ வின் ‘ஷாக்’ ரிசல்ட்.. ‘ட்ராமா’ என்றால் அதிர்ச்சி தரும் உண்மை என்ற அர்த்தமும் உண்டு. இப்ப நாட்டில் பெரிய அளவில் பெருகிவரும் செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகளின் கேடுகெட்ட திட்டம், அதன் மூலம் கொள்ளையடிக்கும் பல கோடிகள், குழந்தை இல்லையே என்று ஏங்கும் பெண்களை நாசமாக்கும் கேடி டாக்டர்களின் ‘ஆண் விபச்சார’ கூலிப்படை என்ற திடுக்கிட வைக்கும் உண்மையைச் சொல்ல வந்த டைரக்டர் தம்பிதுரை மாரியப்பனைப் பாராட்டலாம் தான்.
ஆனா இதைச் சொல்வதற்கு இடைவேளை வரை நம்மை ரொம்பவே சோதித்து, சோர்ந்து போகவைத்துவிட்டார் டைரக்டர். இடைவேளைக்கு பிறகும் அரைமணி நேரம் சுத்தலில் விட்டு கடைசி கால் மணி நேரம் தான் கதைக்குள் எண்ட்ரியாகி ஓரளவு நம்மை ஆசுவாசப்படுத்தி தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார் தம்பிதுரை மாரியப்பன். படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு கார் திருட்டு தான் கதையின் ஸ்ட்ராங்கான பேஸ்மெண்ட்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் படுவீக்கான திரைக்கதையால் பில்டிங் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. விவேக் பிரசன்னா – சாந்தினி ஜோடியின் நடிப்பு தான் படத்தின் ஆறுதல் சமாச்சாரம். மத்ததெல்லாம் அனாச்சாரம். இத்துப் போன இரும்பு மிஷின்கள் இருக்கும் பெரிய குடோன், டிம் லைட், இதான் வில்லன்களின் ஹெட் குவார்ட்ஸ். எப்பா… டேய்… இதெல்லாம் மாத்தவே மாட்டீகளா…? ராஜ் பிரதாப் இசையில் தாய்மை ஏக்கமும் பாசமும் வெளிப்படும் பாடல் மனசுக்கு இதமா இருக்கு. பார்வையாளனை அதிர வைக்கத் தவறிவிட்டது இந்த ‘ட்ராமா’.
— மதுரை மாறன்.