உயர்கல்வியில் சேர வேண்டுமா! உங்களுக்கான “உயர்வுக்குப் படி முகாம்”
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப் படி முகாம்”என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூர், கிருஸ்துராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25.08.2025 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
இம்முகாமிற்கு 2022-2023, 2023-2024 & 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் இதர படிப்புகளில் நேரடி சேர்க்கை, விடுதிகளுக்கு விண்ணப்பித்தல், உயர்கல்வி வழிகாட்டல், புதுமைப்பெண் & தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை இம்முகாமில் கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகாம் நடைபெறும் இடம்
கிருஸ்துராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராயல் நகர், விராலிமலை ரோடு, பஞ்சப்பூர். திருச்சிராப்பள்ளி.
முகாம் நடைபெறும் நாள்
25.08.2025 (திங்கள்) காலை 9.00மணி
பங்கேற்க உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் விவரம்
திருச்சி நகரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை. மருங்காபுரி & வையம்பட்டி ஒன்றிய பள்ளிகளின் மாணவர்கள்
இந்த நல்வாய்ப்பினை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.