திருச்சியில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதான கட்சிகள் !
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன.
திருச்சியில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதான கட்சிகள் !
மே மாதத்தில் உச்சத்தில் இருக்கும் வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டதைப் போல, நாடாளுமன்றத் தேர்தல் களமும் தமிழகத்தில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் – 19 அன்று ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் – 20 தொடங்கி மார்ச் 27 வரை நடக்கிறது.
தமிழகத்தின் பிரதான கட்சிகள் பலவும் ஒரே நேரத்தில் மார்ச் – 25 அன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தோழமை கட்சியான மதிமுக போட்டியிடுகிறது. இதற்காக வேட்பாளர் துரை. வைகோ தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் எம் எல் ஏ இனிகோ இருதயராஜ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், கோட்டத் தலைவர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, முன்னாள் எம்பி குமார், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் திருச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இதற்காக மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரதீப்குமாரிடம் தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், பாரதீய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குணா ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திரமோகன்.